*சுகமும், ஆரோக்கியமும் தரும் வெந்தயம்*
*
சுகமும், ஆரோக்கியமும் தரும் வெந்தயம்*
நன்றி குங்குமம் தோழி
சுகமும், ஆரோக்கியமும் தரும் உணவு வகைகளில் நார்ச்சத்துக்கள் நிறைந்துள்ளதும், குறைந்த விலையில் கிடைப்பதும் ‘வெந்தயம்’.நார்ச் சத்துக்கள் தேவையான அளவு தினமும் உணவில் சேர்த்தால் நமக்கு வரக்கூடிய உடல் பாதிப்புகள் பலவற்றையும் தடுத்து நலமுடன் வாழலாம். மலச் சிக்கல் ஏற்படாமல் தடுக்கவும். அதிகமான உடல் எடை கூடாமல் தடுக்கவும் இந்த நார்ச்சத்துக்கள் பெரிதும் உதவுகின்றன.
*சர்க்கரை நோயின் பாதிப்புள்ளவர்கள் வெந்தயத்தை அதிகம் சேர்த்துக் கொள்வது சர்க்கரை நோயின் பாதிப்பைக் குறைக்க வழி செய்யும். வெந்தயம் கடினமாக இருந்தாலும், நீரில் கரையும் நார்ச்சத்து வகையைச் சார்ந்தது. இதை தினமும் 25 கிராம் வரை உணவுடன் சேர்த்துக் கொள்ளலாம். குளிர்ச்சியை உடலுக்குத் தரக்கூடியது. இதை வறுத்து பொடி செய்து சாம்பார், கறி போன்றவைகளுக்கு தாளிதத்துடன் சேர்த்துப் போடலாம்.
* கோதுமை மாவு அரைக்கும் போது சிறிதளவு வெந்தயம் சேர்த்து அரைக்கலாம். இட்லி, தோசை போன்றவைகளுக்கு மாவு அரைக்கும் போதே இரண்டு தேக்கரண்டி வெந்தயம் சேர்த்து அரைத்தால் மாவு பொங்கிவரும். இட்லி பூப்போல மென்மையாக இருக்கும். உடலுக்குத் தேவையான நார்ச்சத்தும் கிடைக்கும்.
*வெந்தயத்தை முளைகட்டி அப்படியேயும் உண்ணலாம். சாலட்டுடன் சேர்த்தும் உண்ணலாம். வெந்தயத்திற்கு பசைத்தன்மை அதிகம். ‘டயட்டி’ல் இருப்பவர்கள் தினமும் உணவு உண்பதற்கு முன்பு ஒரு ஸ்பூன் வெந்தயத்தை வாயில் போட்டு நீர் குடித்து வர பசி குறையும். உணவின் அளவையும் குறைத்து உண்ணலாம்.
*பசைத் தன்மை அதிகம் கொண்ட வெந்தயம், வயிற்றுள்ளே ஒரு ‘கோட்டிங்’ போலப் படிந்து ஜீரண நீர்கள், அதிகமான அமிலச் சத்து உள்ள உணவுகள், உணவினால் சேரும் அதிக காரம் போன்றவைகளினால் அல்சர் என்னும் வயிற்றுப் புண் வராமல் தடுக்கும்.
வெந்தயத்தை உணவில் சேர்ப்போம், ஆரோக்கியமாக வாழ்வோம்.
தொகுப்பு : எஸ்.ஜெயப்பிரியா, மதுரை....
*
Comments