*108 வைணவ திவ்ய தேச உலா - 64 | சோளிங்கர் யோகநரசிம்ம பெருமாள் கோயில்*
*108 வைணவ திவ்ய தேச உலா - 64 | சோளிங்கர் யோகநரசிம்ம பெருமாள் கோயில்*
108 வைணவ திவ்ய தேசங்களில், ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் யோக நரசிம்ம பெருமாள் கோயில் (திருக்கடிகை), 64-வது திவ்ய தேசமாகப் போற்றப்படுகிறது. இத்தலத்தில் நரசிம்மரும், ஆஞ்சநேயரும் யோக நிலையில் உள்ளது தனிச்சிறப்பு.
பேயாழ்வார், திருமங்கையாழ்வார், நாத முனிகள், திருக்கச்சி நம்பிகள், ராமானுஜர், மணவாள மாமுனிகள் இத்தலத்தை மங்களாசாசனம் செய்துள்ளனர்.
திருமங்கையாழ்வார் பாசுரம்:
மிக்கானை மறையாய் விரிந்த விளக்கை என்னுள்
புக்கானை புகழ்சேர் பொலிகின்ற பொன் மலையைத்
தக்கானை கடிகைத் தடங்குன்றின் மிசையிருந்த
அக்காரக் கனியை அடைந்துய்ந்து போனேனே.
மூலவர்: யோக நரசிம்மர் (அக்காரக் கனி)
உற்சவர்: பக்தவத்சல பெருமாள்
தாயார்: அமிர்தவல்லி
தீர்த்தம்: அமிர்த தீர்த்தம், தக்கான்குளம்
விமானம்: சிம்ம கோஷ்டாக்ருதி விமானம்
தல வரலாறு
சப்தரிஷிகள் என்று அழைக்கப்படும் வாமதேவர், வசிஷ்டர், காஷ்யபர், அத்திரி, ஜமதக்னி, கௌதமர், பரத்வாஜர் ஆகியோருக்கு, நரசிம்ம அவதாரத்தை மீண்டும் காண வேண்டும் என்ற விருப்பம் இருந்தது. அதை நிறைவேற்றும் பொருட்டு, இத்தலத்துக்கு வந்து, திருமாலை நோக்கி தவம் இருந்தனர். விசுவாமித்திரர் இத்தலத்தில் சிறிது நேரம் நரசிம்மரை வழிபட்டு, பிரம்மரிஷி பட்டம் பெற்றதால், அவரைப் போல் உடனே திருமால் தரிசனம் கிடைக்க வேண்டும் என்று சப்தரிஷிகள் தவம் செய்ய இத்தலத்தைத் தேர்ந்தெடுத்தனர்.
காலன், கேயன் என்ற அரக்கர்கள், இத்தலத்தில் தவம் செய்யும் ரிஷிகளுக்கு இன்னல்கள் அளித்து வந்தனர். ராமாவதாரம் முடிந்த சமயம், ராமபிரான் ஆஞ்சநேயரை அழைத்து, அரக்கர்களிடம் இருந்து ரிஷிகளைக் காக்குமாறு பணித்தார். அதையேற்ற ஆஞ்சநேயர், ராமபிரானிடம் இருந்து சங்கு, சக்கரங்களைப் பெற்று, ரிஷிகளைக் காத்தார். ரிஷிகளின் தவத்தை மெச்சிய திருமால் அவர்களுக்கு நரசிம்ம மூர்த்தியாக காட்சி அளித்தார்.
சோளிங்கர் நரசிம்ம மூர்த்தியை ரசித்தபடி இருந்த ஆஞ்சநேயரை, தனக்கு முன்பாக கையில் சங்கு, சக்கரத்துடன் யோகநிலையில் அமர்ந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்குமாறு திருமால் கூறியதால், ஆஞ்சநேயர், நரசிம்மர் கோயில் அருகே உள்ள சிறு குன்றின் மேல் (406 படிகள் உயரத்தில்) யோக நிலையில் நான்கு கரங்களுடன், சங்கு, சக்கரம், ஜெப மாலையுடன் அமர்ந்து அருள்பாலிக்கிறார். சிறிய மலையில் இருந்து பார்த்தால் ஆஞ்சநேயரின் கண்கள், பெரிய மலையில் உள்ள நரசிம்ம மூர்த்தியின் திருவடிகளைப் பார்த்தபடி இருக்கும்.
திருக்கடிகை
சோளிங்கர் தலத்தில் 500 அடி உயரமுள்ள கடிகாசலம் என்ற பெரிய மலை (1,305 படிகள்) மீது மூலவரும், அதன் அருகே உள்ள சிறிய மலையில் சங்கு சக்கரத்துடன் ஆஞ்சநேயரும், கீழே உற்சவரும் அருள்பாலிக்கின்றனர். பெருமாள் தரிசனம் முடித்துவிட்டு, பக்தர்கள் ஆஞ்சநேயரை தரிசிப்பது வழக்கம். இத்தலத்தில் ஒரு கடிகை (நாழிகை - 24 நிமிடம்) இருந்தாலே மோட்சம் என்பது ஐதீகம்.
மூலவர் யோக நிலையில் கிழக்கு நோக்கி சாளக் கிராம மாலை அணிந்தபடி அருள்பாலிக்கிறார். தாயார் அமிர்தவல்லி, வேண்டும் வரம் அருள்பவராக உள்ளார். ரங்கநாதர், ராமபிரான், சீதாபிராட்டி, லட்சுமணருக்கு சந்நிதிகள் உண்டு. இத்தலத்தில் சடாரி, ஆதிசேஷன் வடிவில் இருக்கும். ஊரின் மையப்பகுதியில் உற்சவருக்காக தனி கோயில் அமைக்கப்பட்டு, அங்கு பிரம்மோற்சவம் நடைபெறுகிறது.
பெரிய மலையில் உள்ள மூலிகை மரங்களைக் கொண்டு ரத்த கொதிப்பு, இதய நோய்க்கான மருந்துகள் தயாரிக்கப்படுகின்றன. பேய், பிசாசு பிடித்தவர் தீராத நோயால் வருந்துபவர்கள் சிறியமலைச் சுனை(குளம்) நீரில் விதிப்படி மூழ்கிப் படிகளில் படுத்தக் கிடந்து வாயு குமாரனை நினைத்து வழிபாடு செய்தால் எண்ணிய வரம் பெறலாம் என்பது ஐதீகம். நரசிம்மர் தீர்த்தத்தில் நீராடினால், பிரம்மஹத்தி தோஷம் நீங்கும் என்பது ஐதீகம்.
தொட்டாச்சாரியாருக்கு தரிசனம்
சோளிங்கரில் பிறந்த தொட்டாச்சாரியா, ஒவ்வொரு வருடமும் காஞ்சிபுரம் சென்று வரதராஜப் பெருமாளை தரிசிப்பது வழக்கம். ஒரு வருடம் அவருக்கு உடல்நலம் சரியில்லாததால் வரதரை தரிசிக்கச் செல்லாமல் இருந்தார்.
சோளிங்கரில் உள்ள தக்கான் குளக்கரையில் அமர்ந்து காஞ்சி வரதர் கோயிலில் நடைபெறும் கருட சேவையை நினைத்தபடி இருந்த சமயத்தில், பெருமாள் கருட வாகனத்தில் எழுந்தருளி, நரசிம்ம தீர்த்தத்தில் தரிசனம் கொடுத்தார். இந்த நிகழ்வை நினைவுகூரும் வகையில் இன்றும் காஞ்சி வரதராஜர் கோயில் பிரம்மோற்சவத்தின் மூன்றாம் நாள் பெருமாள் கருட வாகனத்தில் எழுந்தருளி தொட்டாச்சாரியாருக்கு அருள்பாலிக்கிறார்.
திருவிழாக்கள்
கார்த்திகை மாதம் 5 வெள்ளி, 5 ஞாயிற்றுக் கிழமைகளில் லட்சார்ச்சனை நடைபெறும், சித்திரை பிரம்மோற்சவம் (10 நாட்கள்), வைகாசி நரசிம்ம ஜெயந்தி, காஞ்சி கருட சேவை, ஆடிப்பூர உற்சவம், ஆவணி பவித்தோற்சவம், புரட்டாசி நவராத்திரி, ஐப்பசி மணவாள மாமுனிகள் உற்சவம், மார்கழி ராப்பத்து பகல்பத்து உற்சவம், தைப் பொங்கல் விழா, மாசி - தொட்டாச்சாரியா உற்சவம் சிறப்பாக கொண்டாடப்படும். வெள்ளிக்கிழமைதோறும் பெருமாளுக்கும், தாயாருக்கும் திருமஞ்சனம் நடைபெறும்.
திருத்தணி - சித்தூர் நெடுஞ்சாலையில் திருத்தணியில் இருந்து 32 கிமீ தொலைவில் உள்ளது இத்தலம்.
Comments