*கெட்ட காலங்களை போக்கும் ஸ்ரீகாலதேவி இரவிலும் திறந்திருக்கும் அபூர்வ ஆலயம்
*கெட்ட காலங்களை போக்கும் ஸ்ரீகாலதேவி
இரவிலும் திறந்திருக்கும் அபூர்வ ஆலயம்
சிலார்பட்டி - ஸ்ரீகாலதேவி
‘காலம் யாருக்காகவும் காத்திருக்காது’ என்று ஆங்கிலத்தில் ஒரு பழமொழி உண்டு. ‘காலம் பொன்னானது’ என்று தமிழிலும் ஒரு பழமொழி உண்டு. இவற்றிலிருந்து என்ன தெரிகின்றது? காலம் என்பது வாழ்க்கையில் மிகவும் இன்றியமையாதது. எந்தக் காலத்தில் எதைச் செய்ய வேண்டுமோ, அதனை அந்தக் காலத்திலேயே செய்ய வேண்டும். காலத்தை வீணாக்கக்கூடாது; ஒரு நாளில் நல்ல நேரம் எது என்று கண்டு அந்த நேரத்தில் தங்கள் செயல்களைத் துவங்கி வாழ்வில் வெற்றி கண்டனர். எனினும் சிலர் வாழ்வில் என்றும் துன்பத்தையே அனுபவிக்கின்றனர்.
அதற்குக் காரணம் அவரது கெட்ட காலம் என்று சொல்லக் கேட்டிருக்கலாம். அவரது விதியை மாற்ற ஆதார சக்தியான அம்பிகையால் மட்டும்தான் முடியும். ‘‘காலம்’’ என்ற அந்த அம்பிகைக்கு ஒரு திருக்கோயில் மதுரை மாவட்டம் எம்.சுப்புலாபுரம் அருகில் உள்ள சிலார்பட்டி கிராமத்தில் அமைந்துள்ளது. 51 அடி உயர கோபுரத்தோடு உயர்ந்து நிற்கும் கோயிலில் கோபுரத்தில் காணப்படும் வாசகம் என்ன தெரியுமா? ‘நேரமே உலகம்’.
2000 ஆண்டு வாக்கில் சிறிய கூரையுடன் அமைந்த கோயிலாக இருந்த இடம், பக்தர்களின் கோரிக்கைகள் நிறைவேற, அவர்களின் ஆதரவுடன் இன்று பெரிய கோயிலாக உருவெடுத்துள்ளது. நவதுர்கா வடிவங்களில் ஒரு வடிவம் ‘‘காளராத்ரி’’. இந்த தேவி இருளைப்போல் கறுத்த நிறம் கொண்டவள். தலைமுடி பறந்து கொண்டிருக்கும். கழுத்தில் மின்னல் போன்றதொரு மாலை ஒளிவீசும். முக்கண்களும் கோளம்போல் சிவந்திருக்கும்.
மூச்சு விடும்போது அக்னி ஜ்வாலை வெளியில் வரும். கழுதையின் மேல் அமர்ந்து பக்தர்களுக்கு அபயத்தையும், துஷ்டர்களுக்கு பயத்தையும் அளிப்பவள். இவளே காலங்களின் தெய்வம். இவள் இயக்கத்தில்தான் ஈரேழு புவனங்களும் இயங்குகிறது. காத்தல், அழித்தல், பஞ்ச பூதங்கள், கிரகங்கள், நட்சத்திரங்கள், முப்பத்து முக்கோடி தேவர்களுக்கும் இந்த அம்பிகைக்கு கட்டுப்பட்டவர்களே. காலத்தின் தலைவியான காலதேவியால் மட்டுமே ஒருவரது கெட்ட நேரத்தை, நல்ல நேரமாக மாற்ற முடியும், என்பது இந்த கோயிலின் தத்துவம்.
இந்த திருக்கோயில் மற்ற கோயில்களைப் போல் இல்லாமல், மாலை சூரிய அஸ்தமனத்திற்குப் பிறகும், இரவு முழுவதும் பக்தர்களின் தரிசனத்திற்காக, இத்திருக்கோயில் திறந்திருக்கும். சூரிய உதயத்திற்கு முன் நடை சாத்தப்படுகிறது. அபிஷேக, ஆராதனைகள் அனைத்தும் இரவிலேயே நடக்கின்றன. இப்படி இரவு முழுவதும் நடைதிறந்திருக்கும் ஒரு கோயில் உலகிலேயே, இது போன்று வேறு எங்கும் இருப்பதாகத் தெரியவில்லை.
(காசியில் விசாலாட்சி கோயில் அருகில் மீர் என்ற இடத்தில் வராகி அம்மனுக்கு கோயில் உள்ளது. இந்தக் கோயிலில் நாள்தோறும் விடியற்காலை 4 மணிக்கு பூஜை செய்து சூரியன் உதிப்பதற்குள் மூடிவிடுவர்). இந்த கோயிலில் வழிபட்டால் துன்பங்கள், நீண்ட நாள் நோய்கள், தோஷங்கள் என அனைத்துக்கும் நல்ல தீர்வு கிடைப்பதோடு, இங்குள்ள காலதேவி அம்மனை வழிபட்டால் நல்ல நேரம் கை கூடி வரும் என்பது பக்தர்களின் அசைக்க முடியாத நம்பிக்கை.
இதனால் இந்தக் கோயிலுக்கு தமிழகத்தைச் சேர்ந்த பக்தர்கள் மட்டுமின்றி, வெளிமாநிலங்களைச் சேர்ந்த பக்தர்கள் அதிகளவில் வருகின்றனர்.
காலதேவியின் சக்தி அதிகமாக வெளிப்படும் பௌர்ணமி, அமாவாசை தினங்களில் பக்தர்களின் கூட்டம் அதிகம் இருக்கும். தங்களின் துன்பங்கள் நீங்கவும், தங்கள் வாழ்வில் கெட்ட நேரம் நீங்கி நல்ல எதிர்காலம் ஏற்படவும், கோயிலை 11 சுற்றுகள் வலமிருந்து இடமாகவும், பின் இடமிருந்து வலமாகவும் சுற்றி வந்து, காலச்சக்கரத்தின் முன் அமர்ந்து 11 வினாடிகள் தரிசித்தால் போதும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.
பக்தர்கள் தங்கள் கோரிக்கை நிறைவேற 3 பௌர்ணமி, 3 அமாவாசை கோயிலுக்கு சென்று காலதேவியை வணங்கினால் பில்லி, சூனியம், ஏவல், தீராத வியாதிகள் என அனைத்துப் பிரச்னைகளும் தீரும் என்பது நம்பிக்கை. இத்திருக்கோயிலுக்குச் செல்ல, மதுரையில் இருந்து ராஜபாளையம் செல்லும் பேருந்தில் ஏறி எம். சுப்பலாபுரம் மெயின்ரோட்டில் இறங்கி கோயிலுக்கு நடந்தோ, அல்லது ஆட்டோவிலோ செல்லலாம்.
மதுரையிலிருந்து 44 கி.மீ தொலைவில் இத்தலம் அமைந்துள்ளது.
தொகுப்பு: ரஞ்சனா பாலசுப்ரமணியம்...
Comments