24 மணி நேரம் மூடப்பட்ட சென்னை ஐகோர்ட்டின் கதவுகள்... ஆண்டுதோறும் நடக்கும் சம்பிரதாயம்

 


*24 மணி நேரம் மூடப்பட்ட சென்னை ஐகோர்ட்டின் கதவுகள்... ஆண்டுதோறும் நடக்கும் சம்பிரதாயம்!*


ஐகோர்ட் வளாகத்தின் கதவுகள் அனைத்தும் ஆண்டுக்கொரு முறை ஒரு நாள் முழுவதுமாக மூடப்படும் வழக்கம், ஒரு சம்பிரதாயமாக கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.

சென்னை,


ஆங்கிலேயரின் ஆட்சிக்காலத்தில் கட்டப்பட்டு சுமார் 150 ஆண்டுகளுக்கும் மேலான பாரம்பரியத்தை தாங்கி நிற்கிறது சென்னை ஐகோர்ட் கட்டிடம். தினமும் ஏராளமான வழக்கறிஞர்கள், பொதுமக்கள் வந்து செல்லும் இந்த வளாகம், சென்னையின் பரபரப்பான இடங்களில் ஒன்றாகத் திகழ்கிறது.


இருப்பினும் ஐகோர்ட் வளாகத்தின் கதவுகள் அனைத்தும் ஆண்டுக்கொரு முறை ஒரு நாள் முழுவதுமாக மூடப்படும் வழக்கம், ஒரு சம்பிரதாயமாக கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. இந்த வழக்கத்திற்கு பல்வேறு காரணங்களும், கதைகளும் சொல்லப்பட்டு வருகின்றன.


தற்போது கோர்ட் கட்டிடம் அமைந்துள்ள இடத்தில் சென்னகேசவ பெருமாள் கோவில், சென்னமல்லேஸ்வரர் கோவில் என இரண்டு கோவில்கள் இருந்ததாகவும், அந்த கோவில்களுக்கு மாற்று இடம் வழங்கி ஐகோர்ட் கட்டிடம் கட்டப்பட்டதாகவும் ஒரு தகவல் கூறப்படுகிறது.


இதன்படி ஐகோர்ட் வளாகம் கோவிலுக்குச் சொந்தமானது என்ற கருத்தை வலியுறுத்த ஆண்டுக்கு ஒருநாள் கோர்ட்டின் அனைத்து கதவுகளும் மூடப்படுவதாக சொல்லப்படுகிறது. இது மட்டுமின்றி ஐகோர்ட் கட்டப்பட்டுள்ள இடமானது வேறு சில கோவில்களுக்கும் சொந்தமான இடம் என்றும் சில கதைகள் உலவுகின்றன.


ஆனால் அதிகாரப்பூர்வமாக இதற்கு வேறு ஒரு காரணம் சொல்லப்படுகிறது. அக்காலத்தில் ஜார்ஜ் டவுண், பாரிமுனை, பூக்கடை பகுதிகளுக்கு நடுவில் 107 ஏக்கரில் சென்னை ஐகோர்ட் கட்டப்பட்டதால், அப்பகுதியில் வசித்த மக்கள் ஐகோர்ட்டை சுற்றி செல்ல வேண்டிய நிலை உருவானது.


ஆனால் நாளடைவில் மக்கள் ஐகோர்ட்டை சுற்றிச் செல்வதற்கு பதிலாக, ஐகோர்ட் வளாகத்தின் உள்ளே இருக்கும் பாதையை பயன்படுத்தத் தொடங்கினர். இதை கவனத்தில் கொண்ட கோர்ட் நிர்வாகம், எதிர்காலத்தில் கோர்ட் வளாக நடைபாதையை நீடனுபோக அடிப்படையில் பொதுமக்கள் உரிமை கோரிவிடக்கூடாது என்பதற்காக இப்படி ஒரு வழக்கம் கொண்டு வரப்பட்டுள்ளது.


இதன் மூலம் கோர்ட் தனது உரிமை மற்றும் ஆளுமையை காத்துக் கொள்கிறது. இந்த வழக்கத்தின்படி ஐகோர்ட் வளாகத்தின் அனைத்து கதவுகளும் 24 மணி நேரத்திற்கு முழுவதுமாக மூடப்படும். இதன் அடிப்படையில் இந்த ஆண்டு சனிக்கிழமை(நேற்று முன்தினம்) இரவு 8 மணி முதல் நேற்று இரவு 8 மணி வரை ஐகோர்ட் கதவுகள் மூடப்பட்டன.


இது குறித்த அறிவிப்பு நோட்டீஸ்கள் அனைத்து வாயில்களிலும் ஒட்டப்பட்டுள்ளன. பொதுவாக ஞாயிற்றுக்கிழமைகளில் ஐகோர்ட் செயல்படாது என்றாலும், வக்கீல்கள் அலுவல் நிமித்தமாக கோர்ட் வளாகத்திற்கு வந்து செல்வார்கள். ஆனால் ஒவ்வொரு ஆண்டும் இந்த நாட்களில் மட்டும் எவருக்கும் அனுமதி இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,