நவம்பர் 3 /உலக இல்லத்தரசிகள் தினம்
நவம்பர் 3 /உலக இல்லத்தரசிகள் தினம்
ஹவுஸ் ஒய்ஃப் என்னும் தாழ்வு மனப்பான்மை
ஒரு நாள் மாலை நேரத்தில் சென்னையில் பேருந்து நிறுத்தம் ஒன்றில் இரண்டு பெண்கள் பேசிக் கொண்டிருந்ததைக் கேட்டேன். நீண்ட நாட்களுக்குப் பிறகு சந்தித்துக் கொள்கிறார்கள் போலும்.
தோள் பை மாட்டியிருந்த பெண், “என்ன கமலா? என்ன பண்ணிக்கிட்டிருக்கே?” என்று கேட்டபோது, கையில் பெருஞ்சுமையுடன் சரவணா ஸ்டோர்ஸ் பையை வைத்துக் கொண்டிருந்த பெண், “வீட்லே சும்மாதான் ராஜி இருக்கேன்... காய்கறி வாங்க வந்தேன்...” என்றார்.
“வீட்ல சும்மா இருக்கியா? என்ன வார்த்தை சொல்றே? வீட்ல சமைக்கிறது யாரு? கூட்டுறது, துணி துவைக்கிறது இதையெல்லாம் செய்ய ஆள் இருக்கா என்ன?” என்று ராஜி கேட்க, அதற்கு கமலா, “இல்லேடி... எல்லா வேலையையும் நான்தான் செய்தாகணும். துணி துவைக்கிறதுக்காவது ஒரு ஆள் வெச்சுக்கலாமான்னு கேட்டேன். அதை விட உனக்கு வேறு ஏதாவது முக்கிய வேலை இருக்கான்னு கிண்டலா கேட்கறார். உடம்பு முடியாமதான் கேட்கிறேன்... வேணாம்னுட்டார்...” என்றார் கமலா.
“அப்புறம் ஏன்டி சும்மா இருக்கேன்னு சொல்றே... அதையும் ரொம்பத் தயக்கத்தோட குற்ற உணர்ச்சியோட உடம்பை நெளிச்சுக்கிட்டே சொல்றே? வீட்டை மெயின்டெய்ன் பண்றேன்னு ஸ்டைலா சொல்லு...” என்றார் ராஜி.
“வீட்டில் சும்மாதான் இருக்கேன்...” என்கிற இல்லத்தரசிகளின் வார்த்தைகள் வெளியில் தெரியாத மௌனக் கண்ணீரால் எழுதப்பட்டவை. ஒரு பெண்ணின் குடும்பப் பொறுப்புகளை சமூகம் இருட்டிப்பு செய்ய முயல்வதின் ஆதாரம் அது. அதிலும் பெரிய அவலம் தன் பணிகள் இருட்டடிப்பு செய்யப்படுவதை அந்தப் பெண்ணை வைத்தே ஒப்புதல் வாங்குவதுதாள். ஊதியம் வந்தால்தான் அது ஊழியமா?
இது ஏன் நிகழ்ந்தது? இதன் தொடக்கப்புள்ளி எதுவாக இருக்கக் கூடும்? வேலை என்பதை சம்பாத்தியம் என்று மட்டுமே நாம் அர்த்தப்படுத்திக் கொண்டுள்ளதன் விளைவு இது. அதனால்தான் கணவன் செய்வது வேலை, மனைவி செய்வது சேவை என்று நமது அகராதியில் அர்த்தம் கற்பித்துக் கொண்டோம். சம்பாத்தியம் புருஷ லட்சணம் என்று கூறி அதற்கு கௌரவத்தைக் கொடுத்துள்ளோம்.
வீட்டில் சமையல் வேலை பார்க்கும் பெண்ணை அது அவளது கடமை என்று கூறும் அதே ஆண்தான் ஓட்டலில் பரோட்டா சுடுவதை வேலை என்று கூறிக் கொள்கிறார். காரணம் அதில் வருமானம் வருகிறது. வீட்டில் சம்பளம் இல்லாமல் சமையல் செய்யும் பெண்ணுக்கு அதற்கான கௌரவம் கிடைப்பதில்லை. இப்போது இந்த நிலைமை ஓரளவு மாறி வருவதைக் காண முடிகிறது. ஸ்டார் ஓட்டல்களில் பெண் செஃப்புகளும் பணியாற்றத் தொடங்கியுள்ளனர்.
சில ஆண்டுகளுக்கு முன் சுப்ரீம் கோர்ட் ஒரு தீர்ப்பின் மூலம் வீட்டில் பெண்கள் செய்யும் வேலைக்குப் பொருளாதார மதிப்பு இல்லை என்கிற பொதுப்புத்திப் பார்வைக்குச் சவுக்கடி கொடுத்துள்ளது. ஒரு இல்லத்தரசி ஒரு விபத்தில் பலியாகிவிட, கீழமை நீதிமன்றமும் இழப்பீட்டு நடுவர் மன்றமும் அலுவலக வேலைக்குச் செல்லாத முழுநேர வீட்டுப்பணி செய்யும் இல்லத்தரசிகள் வருமானம் ஈட்டாதவர்கள் என்று காரணம் காட்டி மிகவும் குறைவான இழப்பீட்டையே நிர்ணயித்தன. இத்தகைய தீர்ப்பளிக்க அடிப்படையாக எடுத்துக் கொள்ளப்பட்ட 2001ஆம் ஆண்டுக் கணக்கெடுப்பில், இல்லத்தரசிகளை பிச்சைக்காரர்கள், பாலியல் தொழிலாளர்கள், கைதிகள் ஆகியோருடன் இணைத்து, நாட்டிற்குப் பொருளாதாரப் பயன் சேர்க்காதோர் என்கிற தலைப்பில் தொகுக்கப்பட்டிருந்தே குறைந்த இழப்பீடு நிர்ணயிக்கக் காரணமாகும்.
இந்த இழப்பீடு போதாதென்று அந்தப் பெண்ணின் கணவர், உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தார். வழக்கை விசாரித்த உச்சநீதிமன்ற நீதிபதிகள் இழப்பீட்டுத் தொகையை அதிகரிக்க உத்தரவிட்டதோடு, இல்த்தரசிகளை இழிவுபடுத்திய தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்பு வாரியத்தையும் கண்டித்தனர். மேலும் இல்லத்தரசிகளால் அவர்களது குடும்பத்துக்கும் நாட்டிற்கும் சேரும் பொருளாதாரம் மற்றும் பிற பலன்களை அங்கீகரித்துச் சட்டத் திருத்தம் செய்ய நாடாளுமன்றத்தையும் அறிவுறுத்தினர்.
ஒரு பெண் செய்யும் வீட்டு வேலைகளுக்கும் பொருளாதார மதிப்பீடு உண்டு. அவர்கள் ஒரு வேலை என்றில்லாமல் வீட்டுக்குத் தேவையான பல்துறை வேலைகளையும் செய்கிறார்கள். சம்பளத்துக்கு வேலை பார்க்கும் அலுத்துக் கொள்ளும் ஊழியர்கள்போல் இல்லாமல், குடும்பத்தின் மீது பாசம் காட்டி அன்புள்ளத்தோடு அவர்கள் பார்க்கும் வேலைகளுக்குப் பொருளாதார மதிப்பிட்டால் மாதம் அது பதினைந்தாயிரத்தைத் தாண்டும். இதைப் படிக்கும் இல்லத்தரசிகள் தன் ஒவ்வொரு பணிக்கும் ஒரு ஊதியம் நிர்ணயித்துக் கணக்குப் போட்டுப் பாருங்கள். நீங்கள் வீட்டில் செய்யும் வேலைகளின் பொருளாதார மதிப்பு புரியும்.
இல்லத்தரசிகளே... வெளியில் “என்ன செய்துக்கிட்டிருக்கே?” என்று யாராவது கேட்கும்போது, “சும்மாதான் இருக்கேன்.... ஹவுஸ் ஒய்ஃப்... ” போன்ற வார்த்தைகளைத் இனி தவிருங்கள்.
ஹோம் மேக்கர், ஹோம் மேனேஜர் போன்ற வார்த்தைகளை கம்பீரமாகவும் ஸ்டைலாகவும் கூறுங்கள்
. இல்லத்தரசி என்கிற ஸ்தானத்துக்கு கௌரவம் கொடுங்கள். ஹவுஸ் ஒய்ஃப் என்கிற தாழ்வு மனப்பான்மையிலிருந்து வெளியே வாருங்கள்.
நீங்கள் செய்வதும் வேலைதான். சேவை அல்ல...
Comments