31 வருடங்களை நிறைவு செய்யும் ரஜினியின் தளபதி…

 


31 வருடங்களை நிறைவு செய்யும் ரஜினியின் தளபதி… சுவாரஸ்ய காட்சிகளின் ரிவ்யூ…*1991 நவம்பர் 5 –இல் மணிரத்னத்தின் தளபதி வெளியானது. அன்றுதான் கமலின் குணாவும் வெளியானது. கமர்ஷியலாக தளபதிக்கு குணா எவ்வித நெருக்கடியும் தரவில்லை. பாட்டு, சண்டை, அதிரடி வசனம் என்று தளபதி வேகமாக வெற்றியை நோக்கி சென்றது.


மணிரத்னம் இயக்கிய படங்களில் இரண்டு படங்களின் திரைக்கதையை இளம் இயக்குநர்களுக்கு பாடமாக வைக்கலாம். ஒன்று தளபதி, இன்னொன்று ரோஜா. இதில் ரோஜாவின் திரைக்கதை மிகச்சிறப்பானது. அந்தளவுக்கு இல்லை என்றாலும் தளபதி படத்தின் திரைக்கதை ஒரு மாஸ் ஹீரோ படம் எப்படி எடுக்கப்பட வேண்டும் என்பதை கற்றுத் தரும். புஷ்பா போன்ற இன்றுவரும் படங்களின் திரைக்கதை அனைத்தும் தளபதியின் கூறுகளை கொண்டிருப்பதைப் பார்க்கலாம்.


கமலை வைத்து நாயகன் என்ற கிளாஸிக் ஹிட்டை கொடுத்ததால் ரஜினியுடன் இணையும் போது அப்படம் நாயகன் போன்ற இம்பாக்டை தர வேண்டும் என்பதில் மணிரத்னம் உறுதியாக இருந்தார். தனது இயக்கத்தில் நடிக்க ரஜினி தயாராக இருக்கிறார் என்பதை தனது அண்ணன் ஜீ.வி. மூலம் அறிந்த பிறகும் நல்ல கதைக்காக அவர் காத்திருந்தார். கடைசியில் மகாபாரதத்தில் வரும் கர்ணன், துரியோதனன் கதையை நிகழ்காலத்துக்கு ஏற்றபடி மாற்றி அவர் எழுதிய கதையே தளபதி.


குந்திக்கு திருமணமாகும் முன்பு முனிவர் கொடுத்த வரத்தால் சூரிய பகவானை அழைக்க, அவர் வந்து குந்தியுடன் கூடி, குந்தி ஒரு குழந்தையை பெற்றெடுப்பாள். அதுதான் கர்ணன். திருமணமாகாத காரணத்தால் குழந்தையை ஆற்றோடுவிட, அதனை தேரோட்டி எடுத்து வளர்ப்பார். அதை அப்படியே தளபதியில் வேறு மாதிரி வைத்திருப்பார். திருமணத்துக்கு முன் ஸ்ரீவித்யா கர்ப்பமாக, தனக்குப் பிறந்த குழந்தையை ரயிலில் போட்டுவிடுவார். அது சேரியில் வளரும். அதுதான் ரஜினிகாந்த்.


கர்ணன் சூரியபுத்திரன். அதனால், தளபதியில் ரஜினியை காட்டும் போது லோ ஆங்கிளில் தலைக்குப் பின்னே சூரியன் இருப்பது போல் காட்டியிருப்பார்.கர்ணனுக்கு அடைக்கலம் கொடுக்கும் துரியோதனின் கதாபாத்திரத்தில் மம்முட்டி. குந்தியின் இன்னொரு மகன் அர்ஜுனன் வேடத்தில், கலெக்டராக வரும் அரவிந்த்சாமி. கதைப்படி கர்ணன்தான் முதலில் இறக்க வேண்டும். ரஜினி படத்தில் இறப்பது போல் காண்பித்தால் ரசிகர்கள் ஒத்துக் கொள்ள மாட்டார்கள் என துரியோதனை பலி கொடுத்தார் மணிரத்னம். படத்தில் மம்முட்டி இறந்து போக, கர்ணன் ரஜினி பழிவாங்குவார்.


தளபதிக்கு சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவு செய்தார். அவர் ஒளிப்பதிவு செய்த முதல் மணிரத்னம் படம், முதல் தமிழ்ப் படம் தளபதி. அதற்கு முன் சில மலையாளப் படங்களிலும் இந்திப் படத்திலும் பணிபுரிந்திருந்தார். 1990 இல் வெளிவந்த நம்பர் 20 மெட்ராஸ் மெயில் திரைப்படம் ஹிட்டானது. அதில் மோகன்லால் ஹீரோ. மம்முட்டி நடிகர் மம்முட்டியாகவே வருவார். கதையுடன் சேர்ந்து அவரது காட்சிகள் வரும். 1991 இல் தேசிய விருது பெற்ற பெருந்தச்சன் படத்துக்கு சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவு செய்திருந்தார். தளபதி அவரை எட்டுத் திக்கும் கொண்டு சேர்த்தது.முள்ளும் மலரும் படத்தில் வரும் இயல்பான, ஸ்டைல் தவிர்த்த ரஜினியை தளபதியில் காட்ட மணிரத்னம் விரும்பினார். அவருக்குப் பிடித்த ரஜினியும் அதுதான். தளபதியில் ரஜினியின் வழக்கமான படோடமான காஸ்ட்யூம், பன்ச் டயலாக் எதுவும் இருக்காது. அதேநேரம் அவர் பேசும் ஒவ்வொரு வசனத்தையும் பன்ச் டயலாக் போலவே எழுதப்பட்டிருக்கும்..


மம்முட்டியின் ஆளை ரஜினி அடிக்க, அவன் இறந்து போவான். அவனது மனைவியிடம் பேசும் போது, அடிச்சேன் செத்துட்டான் என்பார். திரையரங்கில் விசில் பறக்கும். அதேபோல் மம்முட்டி உயிருக்குப் போராடிக் கொண்டிருக்கையில் அவரை பார்த்துவிட்டு வந்து கீதாவிடம் தேவா பொழைச்சிப்பான் என்பார். டாக்டர் சொன்னாரா? இல்ல தேவாவே சொன்னான். திரையரங்குகள் இந்த வசனங்களின் போது அமளிதுமளிப்பட்டது.இந்தப் படத்தில் ரஜினிக்கும், மம்முட்டிக்கும் வைத்த சூர்யா, தேவா பெயர்கள் அதன் பிறகு வந்த திரைப்படங்களில் சரமாரியாக வைக்கப்பட்டன. தளபதியின் இன்னொரு அட்ராக்சனாக இருந்தவர் அரவிந்த்சாமி. தளபதியில்தான் அறிமுகம். அட இப்படியொரு அழகான பையனா என்று ஆண்களே ஆச்சரியப்பட்டனர்.ரஜினிக்கும், ஷோபனாவுக்குமான காதல் எபிசோடும், ராக்கம்மா கையத்தட்டு பாடலின் நடுவில் ஷோபனா பாடிக்கொண்டு வரும் காட்சியை இணைத்ததும். ஷோபனா கண்கலங்கிக் கொண்டே பிடிச்சிருக்கு என்பதும் மறக்க முடியாத காட்சிகள்.இந்தி நடிகர் அம்ரிஷ் பூரி வில்லனாக தளபதியில் அறிமுகமானார். ஆஜானபாகுவான தோற்றம் கொண்ட அவரை கிளைமாக்ஸில் ரஜினி புரட்டியெடுப்பார். என்னய்யா இது என்னைவிட பலம் குறைஞ்சவங்ககிட்ட அடிவாங்க வேண்டியிருக்கு என்று முறுக்கிக் கொண்டு பிளைட் ஏறியவர் பிறகு பாபா படத்தில்தான் திரும்பி வந்தார். பெருந்தச்சன் படத்தில் மனோஜ் கே.ஜெயனின் நடிப்பைப் பார்த்த மணிரத்னம் அவரை தளபதியில் சின்ன வேடம் தந்து தமிழில் அறிமுகப்படுத்தினார்.


தளபதி பாடல்கள் வெளியான போது இளையராஜாவின் ராக்கம்மா கையத்தட்டு விமர்சிக்கப்பட்டது. அதென்ன ராக்கம்மா கையத்தட்டு என்றார்கள். கடைசியில் அந்தப் பாட்டுதான் சூப்பர் ஹிட்டானது.சின்னத்தாய் அவள்.., யமுனை ஆற்றிலே..., சுந்தரி கண்ணால் ஒரு சேதி... என அனைத்துப் பாடல்களும் இன்றுவரை ரசிகர்களால் கேட்கப்பட்டு வருகின்றன. யமுனை ஆற்றிலே ஒரு சிம்பிளான சாங்க்  என்று சமீபத்திய பேட்டியொன்றில் ஷோபனா கூற, இளையராஜா ரசிகர்கள் அவரை இணையத்தில் ஏறி மேய்ந்தது தனிக்கதை.ரஜினியின் அண்ணாமலை, பாட்ஷா போன்ற வெற்றியல்ல தளபதி. மணிரத்னத்தின் நாயகன் போன்ற கிளாஸிக்குமல்ல. இரண்டுக்கும் இடைப்பட்ட ஓர் இடத்தில் தளபதி இன்றும் கம்பீரமாக வீற்றிருக்கிறது.


பகிர்வு 

Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,