காற்றழுத்த தாழ்வு 9ம் தேதி உருவாகிறது; வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை*

 


18 மாவட்டங்களில் இன்று கனமழை: காற்றழுத்த தாழ்வு 9ம் தேதி உருவாகிறது; வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை*


சென்னை: வடகிழக்கு பருவமழை தொடங்கியதில் இருந்து முதல் காற்றழுத்த தாழ்வு வருகிற 9ம் தேதி உருவாகிறது. அதே நேரத்தில் தமிழகத்தில் இன்று 18 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை கடந்த வாரம் தொடங்கியது. பருவமழை தொடங்கியதில் இருந்து மாநிலம் முழுவதும் பரவலாக மழை பெய்து வருகிறது. குறிப்பாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களில் பலத்த மழை கொட்டி தீர்த்தது. சென்னையை பொறுத்தவரை நேற்று முன்தினம் வெயில் அடிக்க தொடங்கியது. மாலையில் மழை பெய்ய தொடங்கியது. தொடர்ந்து நேற்று காலை வரை லேசான மழை பெய்தது. அதன் பிறகு வெயில் அடிக்க தொடங்கியது. இந்த நிலையில் தமிழகத்தில் இன்று முதல் 4 நாட்களுக்கு மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.


இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் இயக்குனர் செந்தாமரை கண்ணன் கூறியதாவது: இலங்கை கடற்கரையை ஒட்டியுள்ள தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் வருகிற 9ம் தேதி ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக்கூடும். இது தமிழகம் மற்றும் புதுச்சேரி கடற்கரையை நோக்கி வட மேற்கு திசையில் அடுத்த 48 மணி நேரத்தில் நகரக்கூடும். மேலும் குமரிக்கடல் பகுதிகளின் மேல் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக இன்று தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடிமின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.


செங்கல்பட்டு, கடலூர், விழுப்புரம், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை, தேனி, திண்டுக்கல், தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, மதுரை, விருதுநகர், சிவகங்கை, தூத்துக்குடி, ராமநாதபுரம் மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது. நாளை, நாளை மறுநாள் தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். 9ம் தேதி தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் லேசானது  முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.


சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு(இன்றும், நாளையும்) வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். இடிமின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 31-32 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 24-25 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும். 8ம் தேதி தென்கிழக்கு வங்கக்கடலின் வட மேற்கு பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். 9ம் தேதி தெற்கு வங்கக்கடலின் மத்திய பகுதிகள் மற்றும் அதனை ஓட்டிய மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். இந்த நாட்களில் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம்.


கடந்த 24 மணி நேரத்தில் அதிகப்பட்சமாக நாகப்பட்டினம் மாவட்டம் கோடியக்கரையில் 9 சென்டி மீட்டர் மழை பெய்துள்ளது. ராமேஸ்வரத்தில் 8 செ.மீ, கன்னியாகுமரி மாவட்டம் கொட்டாரம், குலசேகரப்பட்டினத்தில் தலா 7 செ.மீ, வேளாங்கண்ணி, விருதுநகர் வட்ராப், சிவகிரி, பெருஞ்சாணி அணை, திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டையில் தலா 6 செ.மீ, தூத்துக்குடி வைப்பார், விருதுநகர் பிலவக்கல், புத்தன் அணை, சேரன்மாதேவி, பேச்சிப்பாறை, மேட்டுப்பாளையம், வெம்பக்கோட்டை, தாராபுரம், தென்காசி, சங்கரன்கோவில், நாகப்பட்டினம், பாம்பனில் தலா 5 சென்டி மீட்டர் மழை பெய்துள்ளது. இவ்வாறு அவர் கூறினார்....

Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,