நடிகர் சிவகுமார்

 நடிகர் சிவகுமார் அவர்களை இன்று மாலை சந்தித்தேன். சென்ற வாரம் அவருக்கு நான் எழுதிய பிறந்தநாள் வாழ்த்தை நேரடியாக அவருக்கு அனுப்பவில்லை.

முகநூலில் பார்த்த நண்பர்கள் யாரோ அவருக்குப் பகிர்ந்து இருக்கிறார்கள். அதைப் பார்த்துவிட்டு அழைத்தார். 'மிகவும் அற்புதமாக எழுதியிருக்கிறீர்கள்... நன்றி' என்று கூறி ஒரு மாலை நேர சிற்றுண்டிக்கு வருமாறு அழைத்தார். சென்றேன்.
அதோடு ஈரோடு புத்தகக் கண்காட்சியில் 100 திருக்குறள்களுக்கு சொந்த அனுபவங்கள், பிரபலமானவர்களின் வாழ்க்கைத் துளிகள், உலகத் தலைவர்களைப் பற்றிய செய்திகள், தன்னோடு பழகிய நண்பர்கள் மற்றும் உறவினர்களின் மேலான குணாதிசியங்கள் ஆகியவற்றின் மூலம் 100 சம்பவங்களை எடுத்துக் கூறிப் புதுமையான முறையில் உரை ஒன்றை வடித்து அதை அரங்கேற்றியிருக்கிறார்.
அதன் வீடியோ காட்சியை கதாசிரியர் கலைஞானம், எழுத்தாளர் கமலாலயன், 4 ஃபிரேம்ஸ் கல்யாணம் மற்றும் அவருடைய நண்பர்கள் சிலர் ஆகியோரை வரவழைத்துத் திரையிட்டுக் காட்டினார்.
ஒரே மூச்சில் மூன்றே முக்கால் மணிநேரம் பேசியிருக்கிறார். அதை இரண்டு பகுதிகளாக்கி முதல் பாதியை மட்டும் இன்று திரையிட்டார்.
அவருடைய அபாரமான ஞாபக சக்தி வழக்கம்போல் வி


யப்பூட்டியது .
'கம்ப இராமாயணம்', 'மகாபாரதம்' ஆகியவற்றிற்கு அவர் ஆற்றிய உரையைப் போல் இதுவும் பெரிய வெற்றியைப் பெறும்.
ஒவ்வொரு குறளையும் வாழ்க்கை அனுபவங்கள் மூலமாக அவர் விளக்குவது அற்புதமாக அமைந்திருக்கிறது .
நடிப்புக்குச் சிறிது ஓய்வு கொடுத்தபிறகு முற்றிலும் ஓய்வெடுத்துக் கொள்ளாமல் இப்படி இலக்கியத்தின்பால் தன் அறிவையும் மனதையும் திருப்பி ஓயாமல் உழைத்துக் கொண்டிருக்கும் அவரை வியப்போடு பார்த்தேன். கலைஞன் என்பவன் தீராத தாகம் கொண்டவன் என்பது இன்னொரு முறை உறுதியாயிற்று.
'சொலல் வல்லன் சோர்விலன் அஞ்சான் அவனை இகல்வெல்லல் யாருக்கும் அரிது' -
எனும் வள்ளுவரின் வெற்றிச் சூத்திரம் நினைவில் எழுந்தது.
தன்னுடைய 'இது ராஜபாட்டை அல்ல', 'சித்திரச் சோலை', 'கொங்குத் தேன்' , திருக்குறள் 100 முதலிய நூல்களை எனக்குப் பரிசளித்தார்.
நான் என்னுடைய 'ஞாயிற்றுக்கிழமைப் பள்ளிக்கூடம் ' , 'பாஷோ என் பக்கத்து வீட்டுக்காரர்', 'மீன்கள் உறங்கும் குளம்', 'பச்சையம் என்பது பச்சை ரத்தம்' , 'இருளும் ஒளியும்', எளிமை போர்த்திய கவித்துவம் முதலான கவிதை நூல்களை அவருக்கு வழங்கினேன்.
திரையுலகின் முன்னோடிக் கலைஞர்
கதாசிரியர் கலைஞானம் அவர்களை அங்கு சந்தித்தது மேலும் மகிழ்ச்சி அளித்தது.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களை 'பைரவி' படத்தின் மூலம் கதாநாயகனாக உயர்த்தியவர் கலைஞானம் அவர்கள். 200 படங்களுக்குத் திரைக்கதை வசனம், 40 படங்களுக்கு கதை , 18 படங்கள் தயாரிப்பு என்று கலையுலகில் சாதனை புரிந்தவர் . அவர்
என் 'பையா', 'அஞ்சான்', 'ஆனந்தம்' வசனங்களைப் பாராட்டினார். அது இன்றைய என் நாளை ஆனந்தம் ஆக்கியது. அவரோடு உரையாடியபோது உண்மையில் என் மனசுக்குள் மழை பெய்தது.
மகிழ்ச்சியோடு வீடு திரும்பினேன். என் மனசுக்குள் மட்டுமல்ல... ஊர் மொத்தமும் மழை கொட்டிக் கொண்டிருந்தது.
*
பிருந்தா சாரதி








*

Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,