மணப்பாறை மாடுகட்டி” – நூற்றாண்டு நாயகன் மருதகாசி!

 


மணப்பாறை மாடுகட்டி” – நூற்றாண்டு நாயகன் மருதகாசி!

முல்லை மலர் மேலே மொய்க்கும் வண்டு போலே..” ,மணப்பாறை மாடுகட்டி மாயவரம் ஏறு பூட்டி…”, “சமரசம் உலாவும் இடமே..” இவை போன்ற பாடல்களைக் கேட்கும்போது பல நினைவுகள் வந்து செல்லும். நினைவின் இடையே பாடலாசிரியர் வருவார். ஆனால், நமக்கு இந்தப் பாடல்களைக் கேட்கும்போதெல்லாம் பாடல் இயற்றிய கவிஞர்தான் நினைவில் வருவார்.
திரைப்பாடல்களில் மெட்டுக்குப் பாடல் என்பதுதான் எழுதப்பட்ட அல்லது எழுதப்படாத விதி. விதிவிலக்காக நேரடிக் கவிதை பாடல் வடிவெடுக்கும். அப்படி மெட்டுக்குப் பாடல் எழுதுவதில் தனித்துவம் வாய்ந்தவராக விளங்கியவர் கவிஞர் மருதகாசி.
1920 இல் பிறந்த மருதகாசிக்கு இந்தாண்டு நூற்றாண்டு. மெட்டில் கவிநயம் மற்றும் ரசனைமிகு சொற்களால் காலத்தால் அழியாத திரைப்பாடல்களைத் தந்த கவிஞர்களில் மருதகாசிக்குத் தனித்த இடம் உண்டு. இன்றும் அவருடைய பாடல்களை நாம் முணுமுணுத்துக் கொண்டிருப்பது அதற்கான நேரடிச் சான்று. அதனால்தான் அவர் திரைக்கவி திலகம் என்று போற்றப்பட்டார்.
கவிஞர் கண்ணதாசனுக்கு முன்பே திரையிசைப்பாடல்களில் புகழின் உச்சத்திலிருந்தவர் மருதகாசி. `ஏர் முனைக்கு நேர் இங்கே எதுவுமே இல்லே… என்ற பாடலில்,
`நெற்றி வேர்வை சிந்தினோம் முத்து முத்தாக அது நெல்மணியாய் வௌஞ்சிருக்கு கொத்து கொத்தாக பக்குவமாய் அதை அறுத்துக் கட்டுக்கட்டாக அடிச்சுப் பதரை நீக்கி குவிச்சு வைப்போம் முத்து முத்தாக’’ என்று எழுதியிருப்பார்.பிள்ளைக் கனியமுது’ படத்தில் இடம்பெற்ற இந்தப்பாடலில் நெற்பயிரை முத்துக்கு நிகராக போற்றியிருப்பார். கொத்து கொத்தாக என்பதற்காக இணையாக முத்து முத்தாக என்று குறிப்பிட்டிருப்பார். யதார்த்த மொழி நடையுடன் பாடல் பயணிக்கும்.
மந்திரி குமாரி' படத்தில் வரும் உலவும் தென்றல் காற்றினிலே’ பாடல் இன்றும் எவர்கிரீன் பாடலாக உள்ளது. அதில், `உயர்ந்த மலையும் உமது அன்பின் உயர்வைக் காட்டுதே..’ என்ற வரிக்குப்பிறகு சொல்வார், இதயம் அந்த மலைக்குயேது அன்பைக் காட்டவே.. என்று. ஒன்றுடன் ஒப்பிட்டு அடுத்தவரில் முரண்ப(பா)டுவது கவியின் பண்புகளில் ஒன்று. அதை மிகச் சிறப்பாகச் செய்திருப்பார் மருதகாசி.
இதே படத்தில், `வாராய் நீ வாராய் போகுமிடம் வெகு துரமில்லை..’ பாடலும் ரசிகர்களின் மனம் கவர்ந்த பாடலானது. எடுக்கப்பட்ட பாடல் காட்சிக்குப் பாடல் எழுதிய அனுபவமும் மருதகாசிக்கு உண்டு. மேற்சொன்ன பாடல் அந்தமுறையில் எழுதப்பட்டதுதான். இயக்குநர் எல்லீஸ் ஆர் டங்கன் எடுத்த காட்சிக்கேற்ப பாடல் வரிகளை எழுதி ஆச்சரியப்படுத்தினார் மருதகாசி.
திருச்சி மாவட்டம் மேலகுடிக்காட்டில் பிறந்து, நாடகங்களில் பாடல்கள் எழுதி, பின்னர் திரைத்துறைக்கு வந்த மருதகாசி மீண்டும் பிறந்த கிராமத்திற்கே சென்றார். படத்தயாரிப்பில் ஏற்பட்ட நஷ்டம் சொந்த ஊருக்குச் செல்ல வேண்டிய சூழலை ஏற்படுத்தியது. ஆனாலும் அது பற்றி கவலை கொண்டதில்லை.
இது பற்றி பின்னாளில் அவருடைய மகன் கவிஞர் மருதபரணி, கவலை எதுவும் கொள்ளாமல் விவசாயம் இருப்பதை நம்பி சொந்த ஊருக்கு வந்தார் அப்பா என்றும், அந்த மனநிலையை முன்பே உணர்த்தும் விதமாக ஆயிரம் ரூபாய்’ என்ற படத்தில்ஆணாக்க அந்த மடம், ஆகாட்டி சந்தை மடம், அதுவும் கூட இல்லாங்காட்டி பிளாட்பாரம் சொந்த இடம்’ என்று பாடியதை நினைவு கூர்ந்தார்.
எம்ஜிஆர் அழைப்பின் பேரில் சுமார் நான்கு ஆண்டு இடைவேளைக்குப் பிறகு மறுபிறவி’ படத்தில் பாடல் எழுத அழைக்கப்பட்டார். படம் வெளியாகவில்லை. ஆனால்,விவசாயி’ படத்தில் அனைத்துப் பாடல்களையும் எழுதினார் மருதகாசி. `கடவுள் என்னும் முதலாளி கண்டெடுத்த தொழிலாளி விவசாயி..’ பாடல் அவற்றில் ஒன்று.
-தி.மருதநாயகம்
நன்றி: OPENHORIZON RIZON

Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

ஆரஞ்சுப் பழத்தின் பயன்கள்: