அங்கீகாரம் என்பது

 


அங்கீகாரம் என்பது ஒருவரின் திறமை கண்டறியப்பட்டு தகுதி உடையவர்களுக்கு தகுதி உடையவர்களால் தானாக வழங்கப்படும்போதுதான் அதற்கு மரியாதை.

இப்போதெல்லாம் பெயர் தெரியாத ஏதோ சில பல்கலைக் கழகங்கள் பிரபலங்களைத் தொடர்புகொள்கிறது. உங்களுக்கு முனைவர் பட்டம் தருகிறோம் என்று ஆரம்பிக்கிறது. பிறகு ஒரு விழா எடுத்து அதை வழங்க இருக்கிறோம்.. விழா செலவுகளில் கொஞ்சம் மட்டும் பங்கெடுத்துக்கொள்ளுங்கள் என்கிறது. முப்பதாயிரம், நாற்பதாயிரம் என்று கேட்கிறது. அனுப்பிவிட்டால் கோலாகலமாக முனைவர் பட்டம் கிடைத்துவிடும்.
விழாவுக்குச் சென்று பார்த்தால் இப்படி பணம் கட்டியவர்கள் பலரும் வரிசை கட்டி நிற்க..பிட் நோட்டீஸ் மாதிரி சகலருக்கும் வழங்கிவிடும்.
இது ஒரு பக்கம்..
இன்னொரு பக்கம் வளரும் எழுத்தாளர்கள் சிலர் பத்திரிகைகளுக்கு கதைகளை அனுப்பிவிட்டு அவர்களாகவே அவை ஆகச் சிறந்த படைப்புகள் என்று கருதிக்கொண்டு என் கதையை ஏன் போடவில்லை, எனக்கு ஏன் இன்னும் தொடர்கதை வாய்ப்பு தரவில்லை என்று போன் செய்து சண்டை போடுகிறார்கள்.
எங்கள் காலத்தில் பத்திரிகைகளுக்கு கதைகளை அனுப்பிவிட்டு காத்திருப்போம். மூன்று மாதங்கள் கழித்துகூட திரும்பி வரும். என் கதையை ஏன் திருப்பி அனுப்பினீர்கள் என்று போன் செய்தோ, கடிதம் எழுதியோ கேட்டதில்லை. கதையில் ஏதோ கோளாறு இருக்கிறது, அதனால்தான் பிரசுரத் தகுதியில்லை என்று நேர்மறையாக எடுத்துக்கொண்டு அந்தக் கதைகளை மீண்டும் படித்து செப்பனிடுவதில்தான் முனைப்பு காட்டுவோம்.
அங்கீகாரத்திற்காக சிலர் அலைவதால்தான் அங்கீகாரத்தை விலை பேசி விற்பவர்கள் உருவாகிறார்கள்.
இன்னொரு பக்கமோ நல்ல அங்கீகாரம் வாசகர்களாலும், பதிப்பகங்களாலும், சமூகத்தாலும் கொடுக்கப்பட்ட பிறகும் எப்போதும் பேசப்படும் நபராகவே இருக்க வேண்டும் என்கிற மன அரிப்பு சிலருக்கு.
அவர்கள் தனக்குத் தானே செலவு செய்து பாராட்டு விழா எடுத்தல், மலர் கிரீடம் சூட்டிக் கொள்தல், நான்தான் தமிழ் அன்னைக்கு பொட்டு வைத்தேன், பூ வைத்தேன், புடவை கட்டி விட்டேன் என்று பேட்டியளித்தல் போன்ற காரியங்களில் ஈடுபடுகிறார்கள்.
அதையொட்டி பூத் ஸ்லிப் கொடுத்து தேர்தல் நடத்தாத குறையாக வாக்கெடுப்புகளை பல தேர்தல் அதிகாரிகள் நடத்த.. அரசியலை விடவும் இந்த காமெடி சுவாரசியமாக இருப்பதால் நட்சத்திர பதிவர்களும் பின்னூட்ட திலகங்களும் களமாடிக் கொண்டிருக்கிறார்கள்.
ஆக.. இன்றைய தேதியில் படைப்புலகம் மன நலம் குன்றியவர்களின் வார்டில் நுழைந்த மாதிரி காட்சியளிக்கிறது. அவசர சிகிச்சை அவசியப்படுகிறது.
தேவர் மகன் கிளைமாக்சில் கமல் சொல்லும் வசனம் நினைவுக்கு வருகிறது.
போதும்ப்பா..போய் உங்க புள்ளை குட்டிங்கள படிக்க வைங்கப்பா!

பட்டுக்கோட்டை பிரபாகர்

Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி