அகிலனின் நூற்றாண்டு விழாவை நூறு இடங்களிலாவது கொண்டாட வேண்டும் */பிருந்தா சாரதி

 


அகிலனின் நூற்றாண்டு விழாவை நூறு இடங்களிலாவது கொண்டாட வேண்டும் 

**

நவம்பர்  5, சென்னை

சாகித்திய அகாடமியும் சென்னை லயோலா கல்லூரி தமிழ்த் துறையும் இணைந்து எழுத்தாளர் அகிலனின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு நவம்பர் 4, 5 மழைக்கு ஊடாகவும் தேதிகளில் சிறப்பாக நடத்தின.


அகிலனின் நாவல்கள், சிறுகதைகள் , கட்டுரைகள் மற்றும் அவரது பன்முகப் படைப்புகள் குறித்துப் பல்வேறு தலைப்புகளில் கருத்தரங்கு நிகழ்த்தப்பட்டது. 


'திரையில் அகிலனின் நாவல்கள்' அமர்வில் கலந்து கொண்டு கட்டுரை வாசிக்கும் முன்பு  சிறிய உரை ஒன்றை நிகழ்த்தினேன். அது வருமாறு: 


"ஒரு எழுத்தாளன் என்பவன் வாசக மனங்களில் கனவுகளை விதைக்கிறவன்.  அதுவும் பெருந்திரளான மக்களால் வாசிக்கப்படும் ஓர் எழுத்தாளனால் பகிர்ந்துகொள்ளப்படும் கருத்துக்கள் சமூக மனதில் ஆழமாக விதைக்கப்பட்டு பெரும் விளைச்சலை வழங்குகின்றன . 


இங்கே நேற்று பேசிய எழுத்தாளர் திலகவதி அவர்கள் தான் மாணவப் பருவத்தில் படித்த அகிலனுடைய பெண் கதாபாத்திரங்கள் தன்னை உருவாக்குவதில் பெரும் பங்கு வகித்தன என்று கூறினார் . 


அதேபோல வழக்கறிஞர் ராதாகிருஷ்ணன் அவர்கள் பேசும்போது முன்னாள் முதலமைச்சர் கலைஞர் கருணாநிதி அவர்கள் கைது செய்யப்பட்ட சமயத்தில் தான் அவரைச் சந்தித்தபோது அகிலனின் 'பொன்மலர்' நாவலை வாங்கி வருமாறு கேட்டதைக் குறிப்பிட்டார். பிறகு கலைஞரை மருத்துவமனையில் சந்தித்தபோதும் தலைமாட்டில் அந்நூலை கண்டதாக கூறினார்.


ஒரு முதலமைச்சர் முதல்  சிற்றூரில் , கிராமத்தில் படிக்கிற மாணவி வரை அகிலனின் எழுத்துக்களால் கவரப்பட்டு இருக்கிறார்கள். 


எழுத்தாளர் அகிலன் அவர்கள் ஏறக்குறைய 20 நாவல்கள், 200 சிறுகதைகள், ஏராளமான கட்டுரைகள் ,  சிறுவர் கதைகள், நாடகம், வாழ்க்கை வரலாறு, திரைக்கதை எனத் தமிழ் இலக்கியத்திற்குப் பெரும் பங்களிப்பைச் செய்திருக்கிறார்.


சாதாரண மனிதர்களை கதாபாத்திரங்களாகக் கொண்டு, எதார்த்தமான கதைகளை, மானுடத்தின் மாபெரும் லட்சியமான அன்பை முன்வைத்து காந்திய வழியில் தன் கதைகளை எழுதியவர் அகிலன். எளிய மொழி அவரது மொழி. கதை கூறும் முறையிலும் பெரிய  சிக்கல் எதுவும் அற்றவை அவரது கதைகள்.


ஆனந்த விகடன், கலைமகள், கல்கி முதலான பெரும் பத்திரிகைகளில் அவர் கதைகள் வெளிவந்தபோது பலரும் வாசித்து அதன்மூலம் தங்கள் வாழ்க்கையையே சீரமைத்துக் கொள்ளும் உந்துவிசை பெற்றதைக் குறிப்பிட்டு இருக்கிறார்கள் .


அவருடைய கதைகளின் நாயகர்கள் , நாயகிகள் நாயகிகள் பெயர்களைத் தங்கள் குழந்தைகளுக்கு சூட்டி மகிழ்ந்திருக்கிறார்கள். ஏன் அவர் பெயரையே குழந்தைகளுக்குச் சூட்டியவர்களும் உண்டு. அந்த அளவிற்கு ஆக்கபூர்வமான விளைவுகளை சமூகத்தில் உருவாக்கியவர் அவர்.

ஒரு காலகட்டத்தின் முகம் அகலனின் கதைகள் என்றும் கூறலாம்.


சுதந்திரத்திற்கு முன்பும் பின்புமான 50 ஆண்டுகளின் அரசியல் பொருளாதார சமூக மாற்றங்களை தன் கதைகளில் எழுதினார் அகிலன். பெண்ணுரிமை, பொருளாதாரச் சமத்துவம்,  போலித்தனங்களை தோலுரித்து உண்மையைத் தேடுதல் போன்ற கருப்பொருட்களை காந்திய நெறியில் எழுதியவர். 


தமிழில் முதன்முதலாக ஞானபீட விருது பெற்றவர். சாகித்திய அகாடமி, தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறை, மற்றும் பல்வேறு இலக்கிய அமைப்புகளின்  பரிசுகளையும் பெற்றவர்.


கவிஞர்களை, எழுத்தாளர்களைக் கொண்டாடுகிற சமூகம்தான் வளர்ச்சி பெறுகிற ஒரு  சமூகமாக முன்னேற முடியும் என்பதை நாம் எல்லோருமே ஏற்றுக்கொள்வோம் என்று நம்புகிறேன்.


ஆகவே எழுத்தாளர் அகிலனின் நூற்றாண்டை குறைந்தபட்சம் 100 இடங்களில் ஆவது கொண்டாட வேண்டும் என்று இக்கருத்தரங்கின் மூலம் நான் கேட்டுக்கொள்கிறேன்.


சகித்ய அகாடமி தொடங்கி வைத்து விட்டது.

பல்கலைக்கழகங்கள், கல்லூரிகள், பள்ளிக்கூடங்கள் மட்டுமல்ல... ஒவ்வொரு ஊரிலும் இருக்கிற இலக்கிய அமைப்புகள் அகிலனின் படைப்புகள் குறித்து  கூட்டங்கள் நடத்தி விவாதிக்க வேண்டும் என்று விரும்புகிறேன். 


இளைய மனங்களில் நல்ல நெறிகளையும், நம்பிக்கையையும் விதைப்பதற்கு இது உதவியாக இருக்கும் என்பது என் கருத்து."

பிருந்தா சாரதி



Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

ஆரஞ்சுப் பழத்தின் பயன்கள்: