கண்ணதாசனின் அண்ணனுக்கு (ஏ.எல்.எஸ்) நூற்றாண்டு!*

 கண்ணதாசனின் அண்ணனுக்கு (ஏ.எல்.எஸ்) நூற்றாண்டு!*


!

செய்திப்பிரிவு

ஏ.எல்.எஸ். என்கிற மூன்று எழுத்துக்களுக்குச் சொந்தக்காரர், தமிழ்த் திரையில் சாதனைகள் பல படைத்த பட அதிபர், ஏ.எல்.சீனிவாசன். அவருடைய நூற்றாண்டின் தொடக்கநாள் இன்று (23/11/2022). தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளில் ஐம்பதுக்கும் மேற்பட்ட திரைப்படங்களைத் தயாரித்த பெருமை இவருக்கு உண்டு. இவர் வாழ்ந்த காலத்தில் சாரதா ஸ்டுடியோ எனும் பெரிய படப்பிடிப்பு நிறுவனத்தின் உரிமையாளராகவும் திகழ்ந்தார்.


நல்ல ஆஜானுபாகுவான தோற்றம். மல்லிகைப் பூப்போன்ற வெண்ணிறத்தில், வேட்டியும், முழுக்கை சட்டையும் அணிந்திருப்பார். மேல் தோளில் ஒரு வெண்ணிறத் துண்டை மடிப்பு களையாமல் கழுத்தை ஒட்டிச் சுற்றி, தன் இடது கை கட்டைவிரல் மற்றும் சுட்டும் விரலால் துண்டின் இரு முனைகளை நெஞ்சருகில் லாவகமாகப் பற்றிக்கொண்டு இவர் நடந்துவரும் தோரணையே கண்களைக் கவரும். எவ்வளவு பெரிய கூட்டத்திலும் தோற்றத்தை வைத்தே இவரை எளிதாக அடையாளம் கண்டுகொள்ளலாம். அவருடன் நெருங்கிப் பழகிய நண்பர்களில் பலரும் இவரைப் பார்த்தே இதுபோன்று வெண்ணிற ஆடைகளை வாங்கி அணிய விரும்பினார்கள் என்பார், இவரின் அந்நாள் உதவியாளர் பி.எல்.இராமநாதன். ஆடைகள் அலமாரியிலிந்து வேட்டி, சட்டை, துண்டை கையில் எடுத்து, ‍ வெளிச்சத்தில் ஒன்றன் மேல் ஒன்றாக வைத்து ஒப்பிட்டுப் பார்ப்பாராம். வெள்ளை நிறம் சற்று மங்கலாகத் தெரியும் ஆடையை அக்கணமே எடுத்து வீசி விடுவாராம். அந்த அளவிற்கு வெள்ளுடையை விருப்பமுடன் அணிந்து செல்வதை அருகிருந்து பார்த்தவர்களில் நானும் ஒருவன்.




கண்ணதாசனின் அண்ணன்


இன்றைய சிவகங்கை மாவட்டத்திலுள்ள சிறுகூடற்பட்டி என்னும் குக்கிராமத்தில், சாத்தப்ப செட்டியாருக்கும் விசாலாட்சி அம்மைக்கும் 23.11.1923இல் மகனாகப் பிறந்த இவருக்கு சீனிவாசன் என்று பெயர் சூட்டினர். எட்டாம் வகுப்பு வரை தான் ஊரிலிருந்த கலைமகள் வித்யாசாலையில் கல்வி பயின்றார். இவருடன் பிறந்த சகோதரிகள் அறுவர், சகோதரர்கள் மூவர். வரிசைப்படி இவர் ஆறாவதாகப் பிறந்தவர். எட்டவதாகப் பிறந்த கவியரசு கண்ணதாசன் தத்து கொடுக்கப்பட்டாலும் இவருக்கு உடன்பிறந்த இளைய சகோதரர். இவரின் மூத்த சகோதரர் கண்ணப்பச் செட்டியாரின் மகன் பஞ்சு அருணாசலம், இவரால் திரைப்படத்துறைக்கு வந்து, பின்னாளில் பிரபலமானார்.


என் இனிய இளமைக்கால நண்பர் ஏ.எல்.எஸ். கண்ணப்பனால் இவர்களுடைய குடும்பம் பற்றி நான் நன்கு அறிவேன். இவருடைய அன்னை அழகம்மை ஆச்சியையும், சகோதரி விசாலாட்சி (லல்லி)யையும் நான் நேரில் சந்தித்துப் பேசியிருக்கிறேன். எங்கள் தந்தையார் கவிஞர் கு.மா.பாலசுப்பிரமணியம் ஒரு திரைப்பாடலாசிரியாக பிரபலமாகி மயிலாப்பூர், பீமசேனன் தோட்டத் தெருவில் சொந்தமாக வீடுகட்டி வாழ்ந்த போது, அதற்கு அடுத்த வீட்டில் ஏ.எல்.சீனிவாசனின் சகோதரி குடும்பத்தினர் குடியிருந்தனர். அந்த வீட்டிற்கு ஏ.எல்.எஸ், கவியரசு கண்ணதாசன் குடும்பத்தினர்கள் அடிக்கடி வந்து போவார்கள். நண்பர் கண்ணப்பன் அந்நாளிலில் இருந்தே எனக்குப் பரிச்சயமானார்.


மூன்று முதல்வர்களின் நண்பர்


ஏ.எல்.எஸ். தன் சொந்த முயற்சியால் அப்போது பிரபலமான பெரும் திரைப்படத் தயாரிப்பாளராக, இந்தியத் திரையுலகே திரும்பிப் பார்க்கும் வகையில் உயர்ந்திருந்தார். தென்னிந்திய திரைப்பட வர்த்தக. சபை, அகில இந்திய பட அதிபர்களின் கூட்டமைப்பு, ஸ்டுடியோ அதிபர்கள் சங்கம் போன்ற பல அமைப்புகளில் தலைவராகவே பதவி வகித்தார். தமிழ்த் திரையுலகின் பெருஞ் சாதனையாளர்களான அறிஞர் அண்ணா, கலைஞர் கருணாநிதி, மக்கள் திலகம் எம்.ஜி.ஆர்., நடிகர் திலகம் சிவாஜிகணேசன், நகைச்சுவை மன்னன் என்.எஸ்.கிருஷ்ணன் ஆகியோரிடம் நெருங்கிய நட்புடையவராக விளங்கினார்.


1941இல் ஒரு சாதாரண பணியை ஏற்று, அஜாக்ஸ் கம்பெனியில் குமாஸ்தாவாகி ரூ.40/- மாத ஊதியம் பெற்றுவந்த அவர், சிறு வயதிலிருந்தே திரைப்படங்களைக் காண்பதில் இருந்த ஆர்வத்தினால், சொந்தமாக திரைப்படம் தயாரிக்க விரும்பினார். திரைப்பட விநியோகஸ்தரின் பிரதிநிதியாகி அதற்கான அனுபவங்களை கோயமுத்தூர் பிக்சர்ஸில் வளர்த்துக் கொண்டார்.


கலைவாணர் இயக்கிய ‘பணம்’


பிறகு 1951இல் மதராஸ் பிக்சர்ஸ் என்னும் நிறுவனத்தை நண்பர்களுடன் சேர்ந்து தொடங்கினார். நகைச்சுவை நடிகர், கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன் இயக்கத்தில் ‘பணம்’ என்கிற படத்தை முதலாவதாகத் தயாரித்து வெற்றி கண்டார். இந்த நிறுவனமே பின்நாளில் ஏ.எல்.எஸ்.புரொடக்சன்ஸ் ஆனது.


அதன் பிறகு தமிழில் சக்கரவர்த்தி திருமகள், திருடாதே, அம்பிகாபதி, ஆனந்தி, மணியோசை, சங்கிலித்தேவன், சாரதா, சாந்தி, பட்டணத்தில் பூதம், கந்தன் கருணை, சினிமா பைத்தியம், நியாயம் கேட்கிறோம், லக்ஷ்மி கல்யாணம் போன்ற ஏராளமான திரைப்படங்களைத் தயாரித்தார். மற்ற‌ மொழிகளிலும் சில படங்களைத் தயாரித்தார். கன்னட இயக்குநர் புட்டண்ணா, பி.மாதவன், மோகன் காந்திராமன் போன்றோரை அறிமுகப்படுத்திய பெருமை இவருக்கு உண்டு. 1961இல் மெஜஸ்டிக் ஸ்டுடியோவை குத்தகைக்கு எடுத்து, சாரதா ஸ்டுடியோ என்கிற பெயரில் பல திரைப்படங்களை உருவாக்க தளங்கள் அமைத்தார். திரையுலகில் முதன்முதலாக படத்தயாரிப்பாளர்களுக்கு நெகடிவ் தடுப்புரிமை, விநியோகஸ்தர் உரிமை போன்றவற்றைச் சீர்படுத்திய பெருமை இவருக்குண்டு. 967இல் தி.மு.க ஆட்சிக்கு வந்த பிறகு பேரறிஞர் அண்ணா, டாக்டர் கலைஞர் ஆட்சியில் இருந்தபோது சில செய்தி ஆவணப் படங்களை இவர் நிறுவனம் தயாரித்துள்ளது.


நண்பர் ஏ.எல்.எஸ் கண்ணப்பன் - ஜெயந்தி தம்பதியினர் தங்களுடைய மகனுக்கு, இவர் நினைவாகவே சாத்தப்ப சீனிவாசன் என்று பெயர் சூட்டினர். தந்தையின் வழியில் திரைப்படத் தயாரிப்பில் கண்ணப்பனும் ஈடுப்பட்டு வெற்றி கண்டார். கண்ணப்பனின் தந்தையும், கவியரசு கண்ணாதாசனும் உடன்பிறந்து வாழ்ந்த சிறுகூடற்பட்டியில், தன் சொந்த செலவில் ‘நினைவகம்’ ஒன்றைக் கட்டி, பலரும் காண உருவாக்கியிருப்பதை ஏராளமான பொதுமக்களும் திரை ரசிகர்களும் இன்றும் நேரில் பார்வையிட்டு நினைவுகூர்வதைக் காணமுடியும்.


அசாத்தியமான திரையுலக சாதனைகளை ஒரு பெரும் திரைப்படத் தயாரிப்பாளராக நிகழ்த்திக் காட்டிய ஏ.எல்.சீனிவாசனின் நூற்றாண்டை அரசு விழாவாக நடத்தி, அவர் நினைவாக ஆவணப் படமொன்றை தயாரித்தும் வெளியிடலாம். அவரின் நெருங்கிய நண்பரான முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞரின் வாரிசான இன்றைய தமிழக முதல்வரின் பார்வைக்கு ஏ.எல்.எஸ்ஸின் சாதனைகள் எடுத்துச் செல்லப்பட வேண்டும். மாமனிதர், திரைப்பட அதிபர், ஏ.எல்.எஸ்ஸின் நினைவைப் போற்றுவோம்.

கட்டுரையாளர், முதுபெரும் பாடலாசிரியர், கவிஞர், கு.மா.பாலசுப்பிரமணியத்தின் மகன்.


தொடர்புக்கு: kmbthiruna@gmail.com

Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,