தமிழகத்தில் அதிகரிக்கும் மெட்ராஸ் ஐ: என்ன ய்யவேண்டும், என்ன செய்யக்கூடாது

 தமிழகத்தில் அதிகரிக்கும் மெட்ராஸ் ஐ: என்ன ய்யவேண்டும், என்ன செய்யக்கூடாது?   - 




தமிழகத்தில் மெட்ராஸ் ஐ அதிகமாக பரவிவரும் சூழலில், எழும்பூரில் உள்ள அரசு கண் மருத்துவமனையில், மெட்ராஸ் ஐ பாதிக்கப்ட்டவர்களை சோதிக்க தனிப்பிரிவு ஏற்படுத்தப்பட்டுள்ளதாக தமிழ்நாடு அரசு கண்மருத்துவமனை இயக்குனர் பிரகாஷ் தெரிவித்துள்ளார்.  


மெட்ராஸ் ஐ பரவல் குறித்து பிபிசிதமிழிடம் பேசிய, இயக்குனர் பிரகாஷ், எழும்பூரில் உள்ள மருத்துவமனைக்கு  தினமும் 100 நபர்கள் மெட்ராஸ் ஐ சிகிச்சைக்காக வருவதாக  கூறுகிறார்.


''வெயில் காலம் முடிந்து மழைக் காலம் தொடங்கும் நேரத்தில் மெட்ராஸ் ஐ பரவல் இருப்பது இயல்புதான். ஆனால், ஒரு சில நோயாளிகள் அலட்சியமாக மருந்துக்கடைகளில் கண் வலி மருந்து வாங்கி பயன்படுத்தினால், கருவிழி பாதிக்கப்படும் அபாயம் உள்ளது.


முந்தைய ஆண்டுகளில் இதுபோல தாங்களாகவே கண் வலி மருந்து பயன்படுத்தி, பிரச்னையை அதிகப்படுத்தி பின்னர் எங்களிடம் சிகிச்சைக்கு சிலர் வந்துள்ளனர். கண் மருத்துவரிடம் ஆலோசனை பெற்ற பின்னர் மருந்துகளை பயன்படுத்துவதைதான் நாங்கள் ஊக்குவிக்கிறோம்,''என்கிறார் மருத்துவர் பிரகாஷ்.  


மெட்ராஸ் ஐ என்பது ஒரு வைரஸ் தாக்கம் தான் என்றும் அதிகபட்சமாக ஐந்து நாட்களில் குணமாகிவிடும் என்றும் கூறுகிறார் மருத்துவர் பிரகாஷ். ''மெட்ராஸ் ஐ பாதிக்கப்பட்டவர்கள் பயன்படுத்திய கைக்குட்டை, துண்டு ஆகியவற்றை மற்றவர்கள் பயன்படுத்தக்கூடாது. வீட்டில் அவர்கள் தங்களைத் தனிமைப் படுத்திக்கொண்டு, கண்களுக்கு ஓய்வு கொடுத்தால் விரைவில் குணமாகிவிடும். 95 சதவீத நபர்களுக்கு எளிதில் குணமாகும், அதிகபட்சமாக ஐந்து சதவீத நபர்கள், நோய் எதிர்ப்பு ஆற்றல் குறைவாக இருப்பவர்களுக்கு பாதிப்பு ஒரு வார காலம் கூட நீடிக்கும். சரியான சிகிச்சை எடுக்கவில்லை எனில், அவர்களுக்கு கருவிழி பாதிப்பு ஏற்படும்,''என்கிறார் அவர்.  


மதுரை, திருநெல்வேலியில்

மதுரை மாநகர் பகுதியில் 25 முதல் 30 நபர்கள் தினமும் மெட்ராஸ் ஐ சிகிச்சைக்காக மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனைக்கு வருவதாக இருப்பிட மருத்துவர் ஸ்ரீலதா தெரிவித்தார். ''சுகாதாரமாக இருந்தால் எளிதில் மெட்ராஸ் ஐ குணமடைந்துவிடும். அதிகமாக கண்களை தேய்க்காமல், விழிநீரை துடைக்க தூய்மையான துணியைப் பயன்படுத்தவேண்டும். துடைத்த துணியை மீண்டும் மீண்டும் பயன்படுத்தாமல் இருப்பது நல்லது,''என்கிறார் மருத்துவர் ஸ்ரீலதா. 


மெட்ராஸ் ஐ அறிகுறிகள் பற்றி பேசிய அவர், ''கண்‌களில் எரிச்சல்‌, விழிப்‌பகுதி சிவந்து காணப்படுவது, நீர்‌ சுரந்து கொண்டே இருப்பது, இமைப்பகுதி ஒன்றோடு ஒன்று ஒட்டிக்‌ கொள்ளுதல்‌  ஆகியவை முக்கிய அறிகுறிகளாகும்‌. ஒரு  கண்ணில்‌ மெட்ராஸ்‌ ஐ பிரச்சனை ஏற்பட்‌டால்‌, மற்ற கண்ணிலும்‌  அது பரவுவதற்கு அதிக வாய்ப்புள்ளது,''என்கிறார்.  


திருநெல்வேலி மருத்துவக்கல்லூரி மருத்துவமனை தலைவர் ரவிச்சந்திரன் பேசுகையில், தினமும் 15 நபர்கள் வரை அரசு மருத்துவமனையில் சிகிச்சை எடுத்துக்கொள்ளவருவதாகவும், நோயாளிகள் வீட்டில் தனிமைப்படுத்திக்கொள்வதை அறிவுறுத்தியிருப்பதாகவும் தெரிவித்தார்.  


மெட்ராஸ் ஐ வந்தவர்கள் மேற்கொள்ளவேண்டிய பாதுகாப்பு நடைமுறைகள் பற்றி பேசிய அவர், ''அதிகப்படியான வெளிச்சம், கணினி, செல்போன் உள்ளிட்டவற்றைப் பயன்படுத்தாமல் இருப்பது நல்லது. கண் உறுத்தல், எரிச்சல் ஏற்படும். கண்ணில் வீக்கம் மற்றும் வலி அதிகரித்தால், உடனே மருத்துவரிடம் ஆலோசனை பெறவேண்டும். கண்ணில் வழியும் நீரை தொட்டுவிட்டு வீட்டில் உள்ள பொருட்களை தொடுவதை தவிர்க்கவேண்டும்,''என்கிறார் மருத்துவர் ரவிச்சந்திரன்.

thanks '-BBC News தமிழ்*

Comments

Popular posts from this blog

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி