தமிழ் மொழிக்கு தனி பெருமையை கொடுத்த, அறிஞர் வீரமாமுனிவர்

 தமிழ் மொழிக்கு தனி பெருமையை கொடுத்த, அறிஞர் வீரமாமுனிவர்




வீரமாமுனிவர் (நவம்பர் 8, 1680 – பெப்ரவரி 4, 1742) இத்தாலி நாட்டிலுள்ள கேசுதிகிலியோன் என்னும் இடத்தில் பிறந்தார். இவரின் இயற்பெயர் – கான்ச்டன்டைன் சோசப்பு பெச்கி (Constantine Joseph Beschi). இவர் இயேசு சபையைச் சேர்ந்த குரு ஆவார். கிறித்தவ மதத்தைப் பரப்பும் நோக்கில், 1709ஆம் ஆண்டு இயேசுசபைப் குருவானபின், 1710 ஆம் ஆண்டு தமிழகத்துக்கு வந்தார்.


பிறந்ததென்னவோ இத்தாலி. கிறிஸ்தவ மத குருவான இவர் மதப் பிரச்சாரத்துக்காக 1710-ம் ஆண்டு கோவாவுக்கு வந்தவர். அங்கிருந்து தமிழகம் வந்து சேர்ந்தார். இங்கு வந்த இடத்தில் மதத்தைப் பரப்ப உள்ளூர் மொழியைத் தெரிந்து கொள்வது அவசியம் என்பதை உணர்ந்து. அதன் பொருட்டு தான் நம் தமிழ் கற்றார். அப்போது நம்ம தமிழ் அவரைத் தன்னுள் இழுத்துக்கொண்டது. ஆர்வம் அதிகரித்த நிலையில்  சுப்ரதீபக் கவிராயரிடம் தமிழ் இலக்கணம், இலக்கியம் கற்றுத் தேர்ந்தார். விரைவிலேயே இலக்கியப் பேருரைகள் நடத்தும் அளவுக்குப் புலமை பெற்றார். அதையடுத்து கான்ஸ்டன்டைன் ஜோசப் பெஸ்கி என்ற தனது இயற்பெயரை முதலில் தைரியநாதன் என்று தான் மாற்றிக் கொண்டார். பிறகு அதுவும் சமஸ்கிருதம் என்று அறிந்து வீரமாமுனிவர் என்று வைத்துக்கொண்டார் இந்த முன்னுதாரணப் புலவர்.

இலக்கணம், இலக்கியம், அகராதி ஆகியவற்றைப் படைத்தார். திருக்குறளை லத்தீன் மொழியிலும் தேவாரம், திருப்புகழ், நன்னூல், ஆத்திச்சூடி ஆகியவற்றை பல்வேறு ஐரோப்பிய மொழிகளிலும் மொழி பெயர்த்து வெளியிட்டார்.

வெளிநாட்டினர் தமிழ் கற்கவும், தமிழர்கள் பிறமொழிகளைக் கற்கவும் உதவியாக தமிழ் - லத்தீன் அகராதியை உருவாக்கினார். ஆயிரம் தமிழ்ச் சொற்களுக்கு லத்தீனில் விளக்கம் கொடுத்தார். தொடர்ந்து 4400 சொற்களைக் கொண்ட தமிழ் -போர்ச்சுகீசிய அகராதியைப் படைத்தார். நிகண்டுக்கு மாற்றாக பெயர் அகராதி, பொருள் அகராதி, தொகை அகராதி, தொடை அகராதி ஆகிய பகுப்புகளைக் கொண்ட சதுரகராதியைத் தொகுத்தார். அந்த காலத்தில் சுவடிகளில் மெய் எழுத்துகளுக்குப் புள்ளி வைக்காமல் கோடு போடுவது வழக்கம். நெடில் எழுத்துகளைக் குறிக்க, ‘ர’ சேர்த்தனர். இதை மாற்றி ‘ஆ’, ‘ஏ’, ‘ஓ’ ஆகிய நெடில் எழுத்துகளைக் கொண்டு வந்தார். பல்வேறு தமிழ் இலக்கிய, இலக்கணங்கள் கவிதை வடிவில் இருந்தன. மக்கள் சிரமமின்றிப் படிக்கவேண்டும் என்ற நோக்கில் அவற்றை உரை நடையாக்கினார்.

தொன்னூல் விளக்கம் என்ற நூலில் எழுத்து, சொல், பொருள், யாப்பு, அணி ஆகிய ஐந்து இலக்கணங்களைத் தொகுத்தார். கொடுந்தமிழ் இலக்கணம் என்ற நூலில் தமிழில் முதன்முதலாகப் பேச்சுத் தமிழை விவரித்தார்.

உரைநடையில் வேத விளக்கம், வேதியர் ஒழுக்கம், ஞானக் கண்ணாடி, செந்தமிழ் இலக்கணம், வாமன் கதை ஆகியவற்றைப் படைத்தார். தமிழின் முதல் நகைச்சுவை இலக்கியம் என்று போற்றப்படும் ‘பரமார்த்த குருவின் கதை’ நூலைப் படைத்ததும் இவரே. இயேசு காவியமான தேம்பாவணியை இயற்றினார். இவரைப்போல வேறு எந்தக் காப்பியப் புலவரும் சிற்றிலக்கியம், அகராதி, இலக்கணம், உரைநடை என பல இலக்கிய வகைகளிலும் நூல்கள் படைத்ததில்லை. தமிழில் 23 நூல்களை எழுதியுள்ளார். ஒன்பது மொழிகளில் புலமை பெற்றவர். பெயராலும், பண்பாட்டாலும் தமிழராகவே வாழ்ந்தவர், தனது 67-வது வயதில்  மறைந்தார்.

பகிர்வு

by


திருநாவுக்கரசு

Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,