*பாயச அன்னம்*

 *பாயச அன்னம்*



நன்றி குங்குமம் ஆன்மிகம்


திடமாகவும் திரவமாகவும் இல்லாமல், திடதிரவமாக இருக்கும் உணவு பாயசம் ஆகும். இது இனிப்பு வகையானது. பாலை சுண்டக்காய்ச்சி அத்துடன் வெல்லம் (அல்லது) சர்க்கரை சேர்த்து பாயசம் தயாரிக்கின்றனர். இதில் முந்திரி, திராட்சை, ஏலக்காய், பாதாம், அக்ரூட் (Walnuts) போன்ற உலர் விதைகளை நெய்யில் வறுத்துச் சேர்க்கின்றனர். இது அடிப் படையாகும். பால் பாயசத்திற்கு வேறொரு பெயர் `பால்போனகம்’ என்பதாகும். அவலைக் கொண்டு செய்வது அவல்பாயசம் எனப்படும். கடலைப்பருப்பை வேகவைத்து வெல்லத்துடன் கலந்து செய்யும் பாயசம், கடலைப்பருப்பு பாயசம் எனப்படும்.


பாசிப்பருப்பு, சர்க்கரை கலந்து செய்வது பாசிப்பருப்பு பாயசமாகும். பேரீச்சம் பழம், பலாப் பழம் போன்றவற்றைச் சேர்த்தும், அதிசுவையான பாயசங்கள் தயாரிக்கப்படுகின்றன. கேரளத்தில், பலவிதமான பாயசங்கள் செய்யும் வழக்கம் மிகுதியாக உள்ளது. கேரளக் கோயில்களில், பலவகை பாயசங்கள் நிவேதிக்கப்படுகின்றன. இதில், `அரவணைப் பாயசம்’ என்பது தனிச்சிறப்புடையதாக இருக்கின்றது. இந்த காலக்கட்டத்தில், ஜவ்வரிசிப் பாயசம், சேமியா பாயசம் போன்றவை வழக்கத்திற்கு வந்து உள்ளது.


அம்பிகை வழிபாட்டில் பாயசங்கள், மிகவும் சிறந்த நிவேதனப் பொருளாக உள்ளன. திருமூலர் திருமந்திரத்தில், புவனேஸ்வரி சக்கரத்திற்கு,


பாற்போனகம் மந்திரத் தால் பயின்றேத்தி

நாற்பால நாரதாய சுவாகா என்று

சீர்ப்பாகச் சேடத்தை மாற்றிப்பின் சீவியே.


என்று பால்பாயச நிவேதனம் செய்வதையும், அதைப் பருகினால் நீண்ட ஆயுள் பெறலாம் என்று கூறுகிறார். வெள்ளிக்கிழமை தோறும் ஊஞ்சல் சேவையில் அம்பிகைக்கு பாயசம், வடை நிவேதனம் செய்வது வழக்கமாகும்.தசரதருக்குப் புத்திரர்கள் வேண்டி கலைக்கோட்டுமுனிவர் புத்திரகாமேஷ்டியாகம் செய்த போது, அந்த வேள்வித்தீயில் இருந்து ஒருபூதம் வெள்ளி மூடியிட்ட பொற்பாத்திரத்தில் பாயசம்கொண்டு வந்து கொடுத்ததாகவும், அதை தயரதன் தன் மனைவியர் மூவருக்கும் கொடுத்ததாகவும், அதன் பயனாக ராமர், லட்சுமணர், பரதர், சத்ருக்கனர் அவதரித்ததாக வால்மீகிராமாயணம் கூறுகிறது. உபமன்யு முனிவர், கண்ணனுக்குத் தீட்சை அளித்தபின், பாயசத்தை சிவபெருமானுக்கு நிவேதித்துதான் அருந்தியபின், எஞ்சியதை கண்ணனிடம் கொடுத்து, உடலில் பூசிக்கொள்ளும்படிச் செய்தார். கண்ணன் அதை உடல் முழுவதும் பூசிக்கொண்டார்.


சிவப்பிரசாதம் என்பதால், உள்ளங்கால்களில் பூசிக்கொள்ளவில்லை. பாரதத்தில் பலரும் எய்த ஆயுதங்கள் எதுவும் அவர் மேனியைத் தாக்காததற்குக் காரணம் அந்த கவசமேயாகும். எனினும் உள்ளங்காலில் பூசிக்கொள்ளாததால், வேடன் எய்த அம்பு, உள்ளங்காலில் தைத்து, உடலில் ஊடுருவி உயிரை மாய்த்தது என்கின்றனர்.


தொகுப்பு: மகேஸ்வரி

Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,