ஐயப்பனை தரிசிக்க தயாராவோம்..*


 ஐயப்பனை தரிசிக்க தயாராவோம்..*


கேரளா மாநிலத்தின் மேற்கு தொடச்சி மலைப் பகுதியில், பத்தனம்திட்டா என்ற இடத்திற்கு அருகே அமைந்துள்ளது, சபரிமலை. இந்த மலை மீது இருக்கும் ஐயப்பன் கோவில் பிரசித்திப்பெற்றது.

இங்கு கார்த்திகை மாதம் 1-ந் தேதியில் இருந்து பக்தர்கள் மாலை அணிந்து, விரதம் மேற்கொண்டு இருமுடிகட்டி ஐயப்பனை தரிசிக்கச் செல்வார்கள். சபரிமலை ஐயப்பன் ஆலயம், கடல் மட்டத்தில் இருந்து சுமார் 1535 அடி உயரத்தில் அடர்ந்த காட்டுப் பகுதியில் இருக்கிறது.


மலை மீதுள்ள இந்த ஆலயத்தை அடைவதற்கு இரண்டு பாதைகள் இருக்கின்றன. எரிமேலி என்ற இடத்தில் இருந்து அடர்ந்த காட்டுப் பகுதி வழியாக 61 கிலோமீட்டர் நடைபயணம், மற்றொன்று பம்பை ஆற்றில் இருந்து ஐந்து கிலோமீட்டர் நடைபயணம். சபரிமலையானது, சுயம்பு லிங்க பூமி, யாக பூமி, பலி பூமி, யோக பூமி, தபோ பூமி, தேவ பூமி, சங்கமம் பூமி என்ற 7 சிறப்புகளைக் கொண்டது. இங்கு சிவனைப் போல தியான கோலத்திலும் (முக்தி அளிப்பது), விஷ்ணுவைப் போல விழித்த நிலையிலும் (காத்தல் தொழில்) ஐயப்பன் அருள்பாலிக்கிறார்.


ஐயப்பனுக்கு பிடித்தமான அபிஷேகம், நெய் அபிஷேகம். பக்தர்கள் இருமுடிகட்டி கொண்டுவரும் தேங்காய்க்குள் இருக்கும் நெய்யைக் கொண்டு ஐயப்பனுக்கு அபிஷேகம் செய்கிறார்கள். இறைவனுக்கு அபிஷேகிக்கப்படும் பக்தர்கள் அளித்த நெய் (ஜீவ ஆத்மா)- பரமாத்மாவுடன் (இறைவன்) இணையும் தத்துவத்தை வெளிப்படுத்துகிறது. சபரிமலை ஐயப்பனுக்கு விபூதி, சந்தனம், பால், பன்னீர், தேன், பஞ்சாமிர்தம், இளநீர், 108 ஒரு ரூபாய் நாணயம் ஆகிய எட்டு பொருட்களைக் கொண்டு செய்யப்படும் அபிஷேகம் 'அஷ்டாபிஷேகம்' என்று வழங்கப்படுகிறது.


இந்த ஆலயத்திற்குள் வரும் பக்தர்கள், அங்கு எழுதப்பட்டிருக்கும் 'தத்வமஸி' என்ற வார்த்தையைப் பார்த்திருப்பார்கள். அதற்கு 'நீயும் கடவுள்' என்று பொருள். உனக்குள்ளும் இறைவன் இருக்கிறான் என்பதை உரக்க பறைசாற்றும் உன்னதமான ஆலயமாக சபரிமலை ஐயப்பன் கோவில் விளங்குகிறது. மகரசங்கராந்தி (தைப்பொங்கல்) அன்று, இத்தல இறைவனான ஐயப்பன் பொன்னம்பல மேட்டில் பக்தர்களுக்கு ஜோதி வடிவில் காட்சி தருவார். இந்த ஜோதியை அப்பாச்சிமேடு, பம்பை,பெரியானை வட்டம், புல்மேடு ஆகிய இடங்களில் இருந்து தரிசிக்க முடியும்.


சபரிமலையில் ஐயப்பன் கோவிலுக்குப் பின்புறம், மாளிகை புறத்தம்மன் தனிச் சன்னிதியில் அருள்பாலிக்கிறார். இங்கு தேங்காயை உடைத்து வழிபடக்கூடாது. மாறாக உருட்டி வழிபாடு செய்ய வேண்டும். அதோடு மஞ்சள்பொடியை அம்பாளுக்கு படைத்து வழிபாடு செய்யலாம். ஐயப்பனை புகழ்ந்து பாடும் பாடல்கள், பல பக்தர்களால் பாடப்பட்டிருந்தாலும், சபரிமலை ஆலயத்தில் நடைசாத்தப்படும் நேரத்தில் இசைக்கப்படும் 'ஹரிவராசனம்' பாடல், மிகவும் முக்கியமானது. இது ஐயப்பனுக்கான தாலாட்டு பாடலாகும்


சபரிமலைக்கு வரும் பக்தாக்ளுக்கு, கோவில் சார்பாக அரவணை பாயசமும், அப்பமும் பிரசாதமாக வழங்கப்படுகிறது. இதில் அரிசி, நெய், சர்க்கரை, ஏலக்காய் கலந்து செய்யப்படும் அரவணை பாயசம் பலரது விருப்பமானதும், சுவைக்கு புகழ்பெற்றதும் ஆகும். சபரிமலை ஆலயத்தின் நிர்வாக உரிமை, திருவாங்கூர் தேவஸ்தானக்குழுவிடம் உள்ளது. ஆலயத்திற்குள் பூஜை செய்யும் அதிகாரம் பெற்றவர்கள், தந்திரிகள் ஆவர். திருவாங்கூர் தேவஸ்தானம், சபரிமலை ஐயப்பன் கோவிலை, சுமார் ரூ.30 கோடிக்கு காப்பீடு செய்திருப்பது குறிப்பிடத்தக்கது.


18 படிகளின் தத்துவம்


ஐயப்பனை நினைத்து மாலை அணிந்து, விரதம் மேற்கொண்டு சபரிமலைக்கு செல்லும் பக்தர்கள், 18 படிகளின் வழியாக அனுமதிக்கப்படுவார்கள். அந்த 18 படிகளும் தத்துவங்கள் நிறைந்ததாக இருக்கிறது. தாயின் தலைவலி போக்குவதற்காக புலிப் பால் கொண்டுவர, காட்டிற்குள் சென்ற ஐயப்பன், மகிஷி என்ற அரக்கியுடன் போரிட்டு வென்றார். அப்போது அவர் பயன்படுத்திய வில்‌, வாள்‌, பரிசை, குந்தம்‌, ஈட்டி, கைவாள்‌, முள்தடி, முசலம்‌, கதை, அங்குசம்‌, பாசம்‌, பிந்திப்பாலம்‌, வேல்‌, கடுநிலை, பாஸம்‌, சக்கரம்‌, பரிகம்‌, சரிகை ஆகிய 18 வகை ஆயுதங்களும்‌ 18 படிகளாக இருப்பதாக ஐதீகம்.


துளசி மாலை


சபரிமலைக்கு மாலை போடும் ஐயப்ப பக்தர்கள், துளசி மாலையில், ஐயப்பனின் உருவம் பொறித்த டாலரை அணிவார்கள். எத்தனையோ மாலை இருக்க, எதற்காக துளசி மாலை அணிய வேண்டும் என்ற கேள்வி எழலாம். ஐயப்பன் அவதரித்தபோது, அவரது தாயான மோகினி வடிவம் எடுத்த திருமாலும், தந்தையான சிவபெருமானும் பம்பை நதிக்கரையில் விட்டுச் சென்றனர். அப்போது குளிர்காற்றில் குழந்தைக்கு எந்த பாதிப்பும் ஏற்படக்கூடாது என்பதற்காக, துளசி மாலையில், மணியைக் கோர்த்து கழுத்தில் போட்டு விட்டனர். தவிர மகாவிஷ்ணுவுக்கு பிடித்தது துளசி, அதையே ஐயப்ப பக்தர்களும் மாலையாக அணிகின்றனர். கார்த்திகை மாதம், மழைக்காலம். மார்கழி மாதம் குளிர்காலம். துளசி வெப்பத்தை வெளிப்படுத்தக்கூடியது என்பதால், துளசி மாலையை அணிவதாக இதற்கு அறிவியல் ரீதியான விளக்கமும் அளிக்கப்படுகிறது.


தெய்வங்கள் வசிக்கும் படிகள்


ஒன்றாம்‌ படியில்‌ - சூரியன்‌


இரண்டாம்‌ படியில்‌ - சிவன்‌


மூன்றாம்‌ படியில்‌ - சந்திரன்‌


நான்காம்‌ படியில்‌ - பராசக்தி


ஐந்தாம்‌ படியில்‌ - செவ்வாய்‌


ஆறாம்‌ படியில்‌ - ஆறுமுகப்‌ பெருமான்‌


ஏழாம்‌ படியில்‌ - புதன்‌


எட்டாம்‌ படியில்‌ - மகாவிஷ்ணு


ஒன்பதாம்‌ படியில்‌ - குரு பகவான்‌


பத்தாம்‌ படியில்‌ - பிரம்மா


பதினோறாம்‌ படியில்‌ - சுக்ரன்‌


பன்னிரண்டாம்‌ படியில்‌ - திருவரங்கன்‌


பதின்மூன்றாம்‌ படியில்‌ - சனீஸ்வரன்‌


பதினான்காம்‌ படியில்‌ - எமதர்மன்‌


பதினைந்தாம்‌ படியில்‌ - ராகு


பதினாறாம்‌ படியில்‌ - காளி


பதினேழாம்‌ படியில்‌ - கேது


பதினெட்டாம்‌ படியில்‌ - விநாயகர்‌

Comments

Popular posts from this blog

:இன்றைய காலகட்டத்தில் பெரும்பாலான பெண்களுக்கு மாதவிடாய் கோளாறுகள்? வாழ்வியல் முறையை மாற்றுங்கள்!

“சமயம் வளர்த்த தமிழ்” என்னும் தலைப்பில் திரு என்.அசோகன் கூடுதல் பதிவாளர் (ஓய்வு )அவர்களின் சொற்பொழிவு

சிறுநீர் அடங்காமைக்கு ( urinary incontinence) யோக மற்றும் இயற்கை மருத்துவம்