கோவில் வழிபாடும்.. ஆரோக்கியமும்..

 கோவில் வழிபாடும்.. ஆரோக்கியமும்..



கோவில் என்பது அமைதியான முறையில் எந்த அவசரமும் இன்றி சென்று வரவேண்டிய இடம். இன்றைய எந்திர வாழ்க்கையில், அவசர கதியில் கோவிலுக்குள் நுழைந்து, நேராக இறைவனை தரிசித்து விட்டு வெளியே வரும் பக்தர்கள் ஏராளம். அப்படி ஒருவர் ஆலயத்திற்குள் செல்வது நல்லதல்ல. வழிபாடு என்பது முறையானதாக இருக்க வேண்டும். அதற்காகத்தான் ஆலயங்களானது அறிவியல்பூர்வமாகவும், ஆரோக்கியத்திற்கு வழி காட்டும் வகையிலும் நம் முன்னோர்களால் ஏற்படுத்தப்பட்டிருக்கின்றன.


கோவிலுக்குள் நுழையும் நாம் முதலில் செல்ல வேண்டியது கோவில் குளம்தான். அதை ஒருபோதும் அலட்சியப்படுத்தக்கூடாது. (கோவில் குளம் இல்லாத சிறிய ஆலயங்களில் கூட, கால்களை கழுவிவிட்டு ஆலயத்திற்குள் செல்ல வேண்டும் என்ற வழக்கத்தை மீறாமல் இருப்பதற்காக, தண்ணீர் குழாய்கள் அமைக்கப்பட்டிருப்பதைக் காண முடியும்.)


இந்த உலகத்தில் உள்ள கிரகங்களின் கதிர்வீச்சுக்களை உள்வாங்கி தக்கவைத்துக் கொள்ளும் தன்மை, நீருக்கு உண்டு. மேலும் மூளைக்கு செல்லும் நரம்புகளின் நுனிகள், கால் பாதங்களின் முன் பகுதி, பின் பகுதியோடு இணைந்திருக்கின்றன. அதே போல் பின் காலில் இருக்கிற மெல்லிய எலும்புகள் நம்முடைய முதுகு எலும்போடு தொடர்பு கொண்டவை. எனவே குளிர்ச்சியான நீரில் நாம் கால்களை நனைக்கும்போது, கால் பாதங்களில் உள்ள நரம்புகள், எலும்புகள் தூண்டப்பட்டு, கோவிலுக்குள் இருக்கும் இறைவனை தரிசித்து நாம் பெறப்போகும் சக்திக்கு, நம்மை தயார்படுத்தும்.


ஆலயங்களின் நுழைவு வாசலில் நம்முடைய கால்கள் அழுந்தும்படி நன்றாக மிதித்து ஏறிச்செல்ல வேண்டும். இது ஒரு அக்குபஞ்சர் முறையான அழுத்தத்தைக் கொடுக்கும். அதற்காகத்தான் கோவில் வாசல் படிகளில், சிறிய மேடாக குமிழ்களை அமைத்திருப்பார்கள். நம்முடைய பித்தப்பை மற்றும் மூளையில் உள்ள நரம்புகளை இந்த அழுத்தமானது சமநிலைப்படுத்தும்.


கோவிலின் பிரகாரத்தைச் சுற்றி நடக்கும்போது, நம்முடைய ரத்த அழுத்தம் சீராகும். இதனால் மூளையின் பரபரப்பு தன்மை அடங்கி, மூளையில் சுரக்கும் சுரபிகளின் செயல்பாடும் சமநிலைப்படும். இதனால் உடலில் அமைதி ஏற்படும். எனவே கோவிலின் கருவறை சன்னிதிக்குள் நாம் நுழையும்போது, உடம்பும் மனதும் ஒருநிலைப்பட்ட நிலையில் இருக்கும்.


கோவில் கருவறைக்குள் இருக்கும் இறை சக்தியை, பூமியில் விழுகிற கிரகங்களின் கதிர்வீச்சுகளை உள்வாங்கும் வகையில்தான் அமைத்திருப்பார்கள். கர்ப்பக்கிரகத்தில் உள்ள பொருட்களும் கூட, இறை சக்தியை தூண்டும் வகையிலானதுதான். கர்ப்பக்கிரகத்தின் உள்ளே ஏற்றப்படும் தீபம் கூட, இறை சக்திக்கு தேவைப்படும் அளவு வெப்பத்திற்கு ஏற்ப, 1, 3, 5, 7, 9 என்ற ரீதியில் திரி தீபங்களாக அமைந்திருக்கும். கோவிலில் இறைவனுக்கு படைக்கப்பட்டு வழங்கப்படும் பிரசாதங்களும் கூட, அந்த சக்தியை நம் உடலுக்குள் கொண்டு செல்லும் ஒரு செயல்பாடுதான்.


ஆலயத்தில் நிலவும் அமைதியையும், இறைசக்தியையும் பெற, ஆலயத்தின் உட்பிரகாரத்திலோ அல்லது கோவில் வளாகத்திலோ குறைந்தது ஒரு மணி நேரமாவது அமர்ந்து இருக்க வேண்டும். அதனைச் செய்ய இந்த அவசர யுகத்தில் பலருக்கு பொறுமை இல்லை. அதனை முன்கூட்டிய நம் முன்னோர்கள் அறிந்த காரணத்தால்தான், விளக்கு பூஜை, சுவாமி அபிஷேகம், ஆராதனை, சங்கு பூஜை போன்ற நிகழ்வுகளை வைத்து, மக்களை கோவிலுக்குள் நெடுநேரம் இருக்கச் செய்யும் யுக்தியை கையாண்டிருக்கிறார்கள்.

Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,