*துஷ்யந்தன்-*
*துஷ்யந்தன்-*
நன்றி குங்குமம் ஆன்மிகம்
தலை சிறந்த தர்மவான்; யானை ஏற்றம், குதிரை ஏற்றம் என அனைத்திலும் சிறந்து, பெரும் வீரராக விளங்கியவர்; குடி மக்களைத் தன் சொந்தக் குழந்தைகளைப் போல எண்ணிப் பாதுகாத்தவர்; நிலத்தை நான்காக (குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல் என)ப் பிரித்து நல்லமுறையில் பாதுகாத்து அரசாட்சி செய்தவர் - துஷ்யந்தன்.அற வழிப்படி ஆட்சி செலுத்திய துஷ்யந்தன், ஒரு சமயம் காட்டு விலங்குகளை வேட்டையாடப் போனார். படைகளும் மன்னருமாக வேட்டையாடினார்கள்.
ஒரு மான் மட்டும், மன்னரின் அம்பிற்குத் தப்பி ஓடி விட்டது. அதன் பின்னாலேயே மன்னர் போக,படை வீரர்களும் போனார்கள். மான் ஒரு வனத்திற்குள் நுழைந்தது.மன்னரும் நுழைந்தார்; நுழைந்ததும், இனிமையான காற்று வீசியதை அனுபவித்தார். மரம்,செடி கொடிகளில் இருந்து வீசிய, மலர்களின் நறுமணம் மன்னரின் மனதிற்கு இதமாக இருந்தது. களைத்துப் போயிருந்த மன்னர் சற்று உற்சாகமானார். அருவிகளும் நீரோடைகளும் குளங்களும் அவற்றில் மலர்ந்திருந்த மலர்களும் மன்னரின் பார்வையைக் கவர்ந்தன.
தன்னை மறந்து போய்க்கொண்டிருந்த மன்னரின் பார்வையில், கண்வ முனிவரின் ஆசிரமம் பட்டது. உடனே, அவரைத் தரிசிக்க வேண்டும் என நினைத்தார் மன்னர்; குதிரையை விட்டுக் கீழே இறங்கி, ‘‘தவத்தையே செல்வமாகக் கொண்ட கண்வ முனிவரைத் தரிசிக்கப் போகிறேன். நான் வரும்வரை இங்கேயே இருங்கள்!’’ என்று உத்தரவிட்டார்.
அதன் பின், தன் அரச அடையாளங்களை எல்லாம் நீக்கி விட்டு, முனிவரின் ஆசிரமத்திற்குள் புகுந்தார் மன்னர். அமைச்சர்களும் சில முக்கியஸ்தர்களும் மன்னரைப் பின் தொடர்ந்தார்கள்.
ஆசிரமம் எங்கும் வேத கோஷங்கள் ஒலிக்க, அந்த ஆசிரமம் பிரம்மலோகத்தைப் போல இருந்தது. ஆசிரமத்தின் உள்ளே முனிவரின் குடிலை நெருங்கி யதும்,கூடவந்த ஒரு சிலரையும் நிறுத்திவிட்டு,தான் மட்டும் சென்றார் மன்னர்.
அங்கே யாரும் இருப்பதாகத் தெரியவில்லை. மன்னர் குரல் கொடுத்தார்; ‘‘யார் இங்கே?’’ என்றார். ஓங்கிய அந்தக் குரல் கேட்டு, ஆசிரமத்தின் உள்ளே இருந்து சகுந்தலை வந்தாள்.
திருமகளே ஒரு வடிவம் கொண்டு வந்ததைப்போல இருந்த அவள், முறைப்படி துஷ்யந்த மன்னரை வரவேற்று, ‘‘யார் நீங்கள்? எதற்காக இங்கு வந்தீர்கள்?’’ எனக் கேட்டாள்.
மன்னர் பதில் சொன்னார்; ‘‘பெண்ணே! ராஜரிஷிகளின் பரம்பரையில் வந்த என் பெயர் துஷ்யந்தன். மாமுனிவரான கண்வரை வழி படுவதற்காக வந்தேன். எங்கே அவர்?’’ என்றார்.
‘‘என் தந்தையான அவர், பழங்கள் கொண்டு வருவதற்காக வெளியே போயிருக்கிறார். சற்றுநேரத்தில் வந்துவிடுவார். அவர் வந்ததும் பார்க்கலாம்’’ எனப் பதில் சொன்னாள் சகுந்தலை.
அதை ஏற்ற துஷ்யந்தன், சகுந்தலையிடம் பேசி,அவளைப் பற்றிய தகவல்களை அறிந்து கொண்டார்.
விசுவாமித்திரரின் தவத்தைக் கலைப்பதற்காக வந்த மேனகை எனும் தேவலோகப் பெண்ணுக்கும் விசுவாமித்திரருக்கும் பிறந்தவள் - சகுந்தலை. தாயால் காட்டில் தனித்து விடப் பட்ட அவளைப் பறவைகள் கட்டிக்காப்பாற்றி, கண்வரிடம் ஒப்படைத்தன. பறவைகள் (சகுந்தங்கள்) காப்பாற்றியதால், அக்குழந்தைக்கு ‘சகுந்தலை’ எனப் பெயரிட்டு வளர்த்துவந்தார் கண்வர். (சகுந்தலை சொன்னதன் சுருக்கம் இது) சகுந்தலையைப் பற்றிய தகவல்களை அவளிடம் இருந்தே அறிந்துகொண்ட துஷ்யந்தன், தான் அவளை மணக்க விரும்புவதாகத் தெரிவித்தார். சகுந்தலையோ, ‘‘முனிவரான என் தந்தை தீர்மானிக்க வேண்டிய விஷயம் இது. அவர் வந்தவுடன்,அவரிடம் பேசிக் கொள்ளுங்கள்!’’ என்றாள்.
மன்னர் தொடர்ந்தார்; ‘‘பெண்ணே! மாமுனிவரான கண்வர் மறுக்க மாட்டார்; கோபப்பட மாட்டார். மேலும் நீயோ, ராஜரிஷியான விசுவாமித்திரரின் மகள். நானும் ராஜரிஷியின் பரம்பரை தான். நாம் இருவரும் காந்தர்வ மணம் செய்து கொள்வதில் தவறேதும் இல்லை. உன் விருப்பப்படித் தானே செயல்படப் போகிறாய்? முனிவரான கண்வர் ஒருபோதும் மறுக்கமாட்டார். நீ என்னை மணக்கச் சம்மதிக்கிறாயா?
இல்லையா?’’ என்று பலவாறாகப்பேசி, சகுந்தலையைச் சம்மதிக்கச்செய்து விட்டார்மன்னர்.ஒரு வழியாகத் தன் சம்மதத்தைத் தெரிவித்த சகுந்தலை, அடுத்த கட்டத்திற்குத் தாவினாள்; ‘‘மன்னா! நீங்கள் சொல்வது உண்மைதான். நமக்குள் காந்தர்வ மணம் நடப்பது முறைதான். ஒப்புக்கொள்கிறேன். நீங்கள் ஒரு வாக்குறுதி தர வேண்டும்! எனக்குப் பிறக்கும் பிள்ளைதான், இளவரசனாக இருக்க வேண்டும். சம்மதமா?’’ எனக் கேட்டாள் சகுந்தலை.மன்னர் ஒப்புக்கொண்டார். துஷ்யந்தனுக்கும் சகுந்தலைக்கும் சாஸ்திர முறைப்படித் திருமணம் நடந்தது. அங்கே சகுந்த லையுடன் மகிழ்ச்சியாக இருந்தார் துஷ்யந்தன்.
பிரியக்கூடிய நேரம் வந்தது. துஷ்யந்தன், ‘‘சகுந்தலை! கவலைப்படாதே! நான் போன வுடன், சங்க-துந்துபி வாத்தியங்கள் முழங்க என் சேனை இங்கு வரும். உன்னை மகாராணியாக அழைத்து வருவார்கள். எந்தவிதமான மரியாதையும் செய்யாமல், சாதாரணமாக உன்னை என் அரண்மனைக்கு அழைத்துப் போக மாட்டேன்! எல்லாவிதமான மரியாதைகளுடன்தான் அழைத்துப் போவேன். கவலைப்படாதே!” என்று சகுந்தலைக்கு ஆறுதல் சொல்லி, அங்கிருந்து புறப்பட்டுத் தன் நகரை அடைந்தார்.
துஷ்யந்தன் போன பின் சற்று நேரத்தில், கண்வ முனிவர் திரும்பினார். நடந்தவற்றையெல்லாம் சகுந்தலையிடம் அவரே, நேரில் கேட்டறிந்தார்; முழுமனதுடன் ஆசிர்வதித்தார்; ‘‘அம்மா! நீ செய்தது சரிதான்.தவறேதும் இல்லை.துஷ்யந்தனும் நல்லவன்; தர்மாத்மா. உங்கள் இருவருக்கும் திருமணம் நடந்ததில், எந்தத் தவறும் இல்லை. உனக்குப் பிறக்கும் பிள்ளை,பெரும் வீரனாக,சக்கரவர்த்தியாகப் பேரும்புகழும் பெற்று விளங்குவான்!’’ என்று ஆசி கூறி சகுந்தலைக்குத் தைரியம் சொன்னார் கண்வர்.
சகுந்தலை கருவுற்று இருந்தாள். ‘‘மன்னரின் ஆட்கள் வருவார்கள். நம்மை அரண்மனைக்கு அழைத்துப் போவார்கள்’’ என்ற எண்ணத்திலேயே, நாட்களைக் கடத்தினாள். யாரும் வரவில்லை; தகவல்கூட ஏதுமில்லை. மூன்று ஆண்டுகள் கடந்தன. அதன்பின்பே ஓர் ஆண் குழந்தை பிறந்தது. ஆம்! சகுந்தலையின் குழந்தை, மூன்று வருட காலங்கள் கருவிலேயே ஊறியவன். குழந்தை பிறந்தபோது, ஆகாயத்தில் இருந்து மலர்மாரி பொழிந்தது; தேவ துந்துபிகள் முழங்கின; தேவேந்திரனே நேரில் வந்து குழந்தையை வாழ்த்திவிட்டுப் போனார்.
- துஷ்யந்தன் தொடருவான்...
: *
Comments