எங்கு காண்போம் இனி
எங்கு காண்போம் இனி
*
ஒரு பல்கலைக் கழகம் கலைந்துவிட்டது
ஒரு நூலகம் தொலைந்துவிட்டது
ஓர் அவை ஒரு சபை என்றால்
அதில் ஔவை இருந்தால்
அதற்கு ஒரு கௌரவம்.
கடற்கரையோ
புகைவண்டி நிலையமோ
அவர் இருக்கும் இடம் தமிழ்ச்சங்கம் ஆகிவிடும்
அங்கே தமிழ் விளையாடும்
அங்கே கவிதை பூத்துக்குலுங்கும்.
கலைகள் அங்கே களைகட்டும்.
அறிஞர்களின் அறிஞரை
இழந்துவிட்டது தமிழ்
புலவர் கோ போய்விட்டார் நம்மை விட்டு.
ஒரு பாடலுக்கு அவர் உரை சொல்வதை
மூல ஆசிரியன் நேரில் கேட்டால்
நிச்சயம் அவரை முத்தமிட்டு உச்சிமுகர்வான்.
இயல் இசை நாடகம்
மூன்று தமிழும் அறிந்தவர்
தமிழின் ஈராயிரம் ஆண்டு இலக்கியம் அவரது நுனிநாக்கில் இருந்தது.
ஆங்கில இலக்கியம்
தோதறிந்து
துணைவரும் அவருக்கு.
தரையே மேடை
பேச்சே உரை
மேடை தேவை என்றால் சம்பிரதாயத்துக்காகப்
போடலாம்
24 மணி நேர அறிஞர்
உலக வரலாறு
தமிழ்ப் பண்பாடு
இரண்டும் இணையும் புள்ளியைத்
துல்லியமாக ஆய்ந்தறிந்த பேராசிரியர்
இலக்கணம் எனும் இரும்புக் கடலை இவருக்கு மட்டும்
பஞ்சு மிட்டாயாக இளகும்.
திருக்குறளும் சிலம்பும்
அந்நியோனியமாய் அவர் நாவில் பழகும்.
மேடையேறிப் பேசும்போது எங்கிருந்தோ யார் யாரோ பொருத்தமான நூல்களை
நம் கண்ணுக்குத் தெரியாமல் அவருக்கு நீட்டுவார்கள்.
அபூர்வமான மேற்கோள்களை அவர் கண்களில் காட்டுவார்கள்.
கம்பனோடு ஷேக்ஸ்பியரைக் கைகுலுக்க வைப்பார்
கபிலரையும் கீட்சையும் தோளோடு தோள்
கைபோட்டு நடக்கவைப்பார்.
தொல்காப்பியர் திருவள்ளுவர் எல்லாம் அவரது தோழர்களோ
கம்பன் இளங்கோ பாரதி எல்லாம் அவருக்கு நண்பர்களோ என்று நினைக்கத் தோன்றும்.
நேற்றைய பெருமையை மட்டும் அல்ல
இன்றின் அருமையும் அறிந்தவர்
இன்றைய இலக்கியம் வரைக்கும்
அவரது பார்வை படர்ந்தது
ஆனால் இந்த நாள் ஏன் இப்படி முடிந்தது?
எங்கு காண்போம் இனி
இவர் போல் ஒருவரை?
எக்காலம் அடைவோம்
இவர் போல் ஓர் அறிஞரை?
*
பிருந்தா சாரதி
*
அறிஞர் #ஔவை நடராசன் அவர்களுக்கு அஞ்சலி
*
Comments