கர்மம் செய்வதிலேயே நீ நிலைத்து நின்றுவிடு*

 கர்மம் செய்வதிலேயே நீ நிலைத்து நின்றுவிடு*



ஸ்ரீகிருஷ்ண அமுதம் - 36 (பகவத் கீதை உரை கர்ம யோகம்)


ஆன்மாவில் இன்புற்று, ஆன்மாவில் திருப்தியடைந்து, ஆன்மாவிலேயே மகிழ்ந்திருப்பவன் எப்படிப்பட்டவனாக இருப்பான்? அவன், தான் மேற்கொண்டிருக்கும் வாழ்க்கையை அவ்வாறு மேற்கொண்டிருப்பதாலேயே அதன் போக்குபோலவே வாழ்ந்து கொண்டிருப்பவன். அதாவது, அவன் எந்தச் சலனத்துக்கும் ஆட்படாதவனாக, ஆன்மாவுக்குள்ளேயே சுகித்திருப்பவன். வாழ்க்கைப் பெருஞ்சுழலில் அவன் அகப்படுவானானால், அந்தச் சுழலின் வேகத்தோடு அவன் போட்டியிடமாட்டான். அவனுக்குத் தெரியும், தான் எவ்வளவுதான் போராடினாலும் விரைவில், தான் களைத்துவிடுவோம் என்று. ஆமாம், வாழ்க்கைச் சுழல் அத்தனை வலிமையானது!


சரி, அதனின்று எப்படி மீள்வது? அமைதியாக இருந்துவிடுவதன் மூலமாகத்தான். அமைதியாக இருந்துவிட்டால், சுழல் அவனை உள்ளே இழுத்துக்கொண்டு போய்விடாதா? போகும், போகத்தான் செய்யும். ஆனால், அந்தச் சுழலின் மேல்மட்ட வேகம், அதன் ஆரம்ப வீரியம், கீழே போகப்போக வெகுவாகக் குறைந்து விடும். தனக்குள் அவனை இழுத்துக்கொள்ளும் சுழல், அந்தக் கீழ் மட்டத்தில், பலமிழந்து நிற்கும். அதுவரை எந்தப் போராட்டமும் மேற்கொள்ளாமல், தன் பலத்தினைப் பிரயோகிக்காமல், சுழலின் போக்கில் போகும் அந்த ஆன்மப் பிரியன், கீழே வலுவிழந்துவிட்ட சுழலிடமிருந்து எளிதாக விடுபட்டுவிடுவான்!


இதைத்தான் கிருஷ்ணன் கூறுகிறார்: ‘சிருஷ்டியின் போக்குடன் இணைந்துகொள், இயைந்து செல். அவசரப்படுதலையும், வீண் சண்டை யிடுதலையும், இல்லாமல் போய்விடுமோ என்ற ஆற்றாமையையும் விட்டுவிட்டு, அதன் போக்கில் சென்றால் எதிர்ப்படும் வரவு அல்லது இழப்பு இரண்டினாலும் நீ பாதிக்கப்படமாட்டாய். அதாவது, உன் ஆன்மாவை நீ திருப்தி செய்கிறாய்.


நைவ தஸ்ய க்ருதேனார்த்தோ நாக்ருதேனேஹ கஸ்சன

ந சாஸ்ய ஸர்வபூதேஷு கஸ்சிதர்த்தவ்யபாச்ரய: (3:18)


‘‘அவனைப் பொறுத்தவரை கர்மம் செய்வது என்பது, கர்மத்தினால் ஏதேனும் ஒன்றைப் பெறுவதோ, அல்லது ஏதேனும் ஒன்றை இழப்பதோ இல்லை. இதனாலேயே ஏதேனும் ஒரு பொருளை நாடி அவன், யாரையும் சார்ந்திருப்பதும் இல்லை.’’சாலையில் நின்றுகொண்டிருக்கிறோம். நமக்கு முன்பின் தெரியாத ஒரு நபர் வந்து, குறிப்பிட்ட பகுதிக்கு எப்படிப் போகவேண்டும் என்று நம்மிடம் வழி கேட்கிறார். அவர் சொல்லும் இடம் நமக்கு நன்கு தெரிந்ததுதான்.


உடனே உடல் மொழியாலும், வாய்ச்சொற்களாலும் அந்த இடத்தை அவருக்குச் சொல்லி வழியனுப்பி வைக்கிறோம். இந்த கர்மத்தில் நாம், அவரிடமிருந்து எதை எதிர்பார்க்கிறோம்? அதிகபட்சமாக அவர் நன்றி சொல்லக்கூடும். ஆனால், உண்மையான கர்மயோகி அதைக்கூட எதிர்பார்க்கக் கூடாது. அவருக்குச் சரியான வழிகாட்டிய திருப்தியுடன், ஆன்ம திருப்தியுடன்,  அவன் அமைதியடைந்துவிட வேண்டும். அதுதான் முக்கியம். இந்த உதவியால் நாம் பரிபூரண ஆனந்தத்தை அடைகிறோம் என்றால், அதுதான் நம் ஆன்மா அடையும் ஆனந்தம். ஒருவருக்கு நன்மை செய்யும் உதவிக்கு, நாம் எந்த பிரதிபலனையும் எதிர்பாராதபோதுதான் அந்த உதவிக்குத் தனி மதிப்பே உண்டாகிவிடுகிறது.


எதிர்பார்ப்பு என்பது தேவைகளின் கட்டுக் கடங்காத மோகம் என்றே சொல்லலாம். இந்த வகையில், தேவைகளைச் சுருக்கிக்கொள்வது, நல்ல பயிற்சி. அதுவும், இளமையில் கற்க முடியுமானால், அது எதிர்கால மனவலிமைக்கு வழிவகுக்கும். பொதுவாகவே, தற்காலத்தியப் பெற்றோரிடம் ஒரு பலவீனம் உண்டு. அது, தன் இளமைக் காலத்தில் தம்மால் அனுபவிக்க முடியாத வசதி களைத் தம் பிள்ளைகள் அனுபவிக்கவேண்டும் என்று, அவர்கள் நினைப்பதுதான்.


அதாவது, அந்த வசதிகளைச் செய்து கொடுக்கத் தனக்குப் பொருளாதார பலம் இருப்பதாகிய ஆணவம்! ஒரு கட்டத்தில் அந்த பலம் குறையும்போதோ அல்லது இல்லாமலேயே போகும்போதோ, பிள்ளையின் எதிர்பார்த்தலை நிறைவேற்ற முடியாமல் போகக்கூடும். அப்போது, அந்தப் பிள்ளை, பெற்றோர் நிலை உணர்ந்து தன் தேவைகளை மேலும் வளர்த்துக்கொள்ளாமலோ அல்லது இருக்கும் வசதிகளை இழக்க வேண்டியிருந்தாலும், அதற்காக மனவருத்தம் அடையாமலோ இருக்கிறானென்றால், அந்தப் பெற்றோர் பாக்கியம் செய்தவர்கள்.


ஆனால், இன்றைய உண்மை நிலை அப்படி இல்லையே! தனக்கு வேண்டியது கிடைக்காவிட்டால், பெற்றோரை அவமரியாதை செய்யவோ, அவர்களை எதிர்க்கவோ, வன்முறையில் ஈடுபடவோகூட அவர்கள் தயாராக இருக்கிறார்களே! ஆனால் அவர்களே, இளமைக்கால வசதிகள் எல்லாம் முதுமைக்கால அவஸ்தைகளே என்பதைப் புரிந்து கொள்வார்களானால், எதிர்பார்ப்பும் வெகுவாகக் குறைந்துவிடும். இல்லாவிட்டால், மேலும்மேலும் வசதிகளைப் பெருக்கிக்கொள்ள வேண்டும் என்ற வேட்கை ஏற்பட்டு, அதை நிறைவேற்றிக்கொள்ள, தகுதிக்கு மீறிய முயற்சிகளையும், மேற்கொள்ள வேண்டியிருக்கும். அதனால், இயல்பான வாழ்க்கை, தடம்புரண்டுபோகும்.


தஸ்மாதஸக்த ஸததம் கார்யம் கர்ம ஸமாசர

அஸக்தோ ஹ்யாசரன் கர்ம பரமாப்னோதி பூருஷ: (3:19)


‘‘ஆகவே கொஞ்சமும் பற்றற்ற பண்போடு கர்மங்களை மேற்கொள்ளவேண்டும். அதாவது, வினையாற்ற வேண்டும். ஏனென்றால், எந்தப் பற்றுமில்லாமல் கர்மாக்களை இயற்றுபவன் பெருநிலையை அடைகிறான்.’’ எந்தப் பயனையும் எதிர்பாராமல், எந்தப் பற்றுக்கும் ஆட்படாமல் காரியங்களை மேற்கொள்ளுமாறு கிருஷ்ணன் திரும்பத் திரும்ப வலியுறுத்திச் சொல்கிறார்.

இதற்குச் சரியான உதாரணமாக, நம் உடலுக்குள்ளேயே இருக்கும் அத்தியாவசிய உறுப்புகளைச் சொல்லலாம்.


இருதயம், கொஞ்சம்கூட ஓய்வில்லாமல், எந்தப் பலனையும் எதிர்பாராமல் அது ‘லப் டப்’ என்று ஒலித்தபடி உழைத்துக்கொண்டே இருக்கிறது. அதேபோலதான் வயிறு, ஈரல், கணையம், சிறுநீரகம் எல்லாம். தான் கவனிக்கப்படாவிட்டாலும், தம்போக்கில் அவை பணியாற்றிக்கொண்டுதான் இருக்கின்றன. அவற்றில் ஏதேனும் ஒரு உறுப்பு இயங்காமல் நின்றுவிட்டாலோ அல்லது இயல்புக்கு மாறி குறைவாகவோ அல்லது அதிகமாகவோ இயங்கினாலோ, பல்வேறு உடல்நலக் கோளாறுகள், சில அறிகுறிகள் மூலமாக நமக்குப் புரியவருகின்றன. உடனே மருந்து, சிகிச்சை என்று எடுத்துக்கொண்டு அந்த உறுப்பை பழையபடி பணியாற்றச் செய்ய நாம் பெருமுயற்சி எடுக்கிறோம்.


அதாவது, அந்த விஸ்வாசியான உறுப்பை நாம்தான் சரியாகப் பணியாற்ற விடாமல் செய்கிறோம். அதன் இயல்பான போக்குக்கு அதை விடாமல், நம் போக்குக்கு அதை இழுக்க முயற்சிக்கிறோம். ஆனாலும், தன் முழு ஆற்றலுடன் அது பணியாற்றத்தான் முனைகிறது. ஒரு கட்டத்தில், அதன் பலம் குன்றிவிட, அதன் செயல் தாமதமாகிறது, அல்லது அது செயலை முற்றிலுமாகத் துறக்கிறது.


இதில் வேடிக்கை என்னவென்றால், நம் உடலுக்குள்ளேயே இருக்கக்கூடிய உறுப்புகளுக்கு, நாம் எந்த ஆணையும் இட முடியாது. அவற்றின் இயக்கத்தை நம் இச்சையாகத் தாமதப்படுத்தவோ, நிறுத்தவோ முடியாது. இன்னும் குறிப்பாகச் சொல்வோமேயானால், அதை படைத்ததும் நாமல்ல! நம் உடலுக்குள் உள்ளது என்பதால், அது நமக்குரியது என்றாலும், நம் விருப்பப்படி ஆட்டுவிக்கப்பட முடியாது. அதெல்லாம் பகவானால் படைக்கப்பட்டவை என்பதால், அவன் நிர்ணயித்திருக்கும் நெறிமுறைப்படி, அதனதன் ஆயுள் அவகாசப்படி, அவை செயல்படுகின்றன. அவனால், உருவாக்கப்பட்டவை என்பதால் அவை, அவன் ஆணையிட்டபடிதான் தம் கர்மாக்களை இயற்றுமேயல்லாது, நம் உடலுக்குள் இருக்கிறது என்பதற்காக நம் கட்டளைக்கு அவை அடிபணிவதில்லை.


இப்படி நமக்குள்ளேயே இருக்கும் உறுப்புகளை நம்மாலேயே சொந்தம் கொண்டாடி கட்டுப்படுத்த முடியாத நிலையில், நாம் செய்யும் கர்மாக்களுக்கான விளைவுகளை, பலன்களை மட்டும் நாம் எப்படி எதிர்பார்க்கலாம்? மேற்கொண்டிருக்கும் செயலில் மட்டும்தான் நாம் அக்கறை கொள்ள வேண்டுமே தவிர, அதன் பின்விளைவுகளில் ஆர்வம் காட்டுவது அநாவசியம். இந்த எதிர்பார்ப்பு நம்மை மேலும் விசனத்தில் தள்ளிவிடும். ஆமாம், எதிர்பார்த்தது நடந்து விட்டால், எதிர்பார்த்த பலன் கிடைத்துவிட்டால், நாம் ஆரவாரமாகிவிடுகிறோம். அதேபோல, எதிர்பார்த்தது நடக்காவிட்டால், எதிர்பார்த்த பலன் கிடைக்காவிட்டால் நாம் அப்படியே சோகவயப்பட்டுவிடுகிறோம்.


இந்த இரு தன்மைகளிலிருந்தும் விடுபடுவதுதான் கிருஷ்ணன் சொல்லும், ‘பெருநிலை’.அதுமட்டுமல்ல, இப்படி கர்மாக்களை இயற்றுவதில் மட்டுமே ஈடுபட்டிருந்தோமானால்தான் நம்மால் மன அமைதி பெற முடியும். அதாவது, ஆன்ம நிம்மதி கொள்ளமுடியும். இன்னும் எளிமையாக சொல்வதானால், ஓய்வு கொள்ள முடியும்! பொதுவாக ஓய்வு என்பது எப்போது கிட்டக்கூடியது? பல்வேறு பணிகளுக்கிடையே அல்லது பணி முடித்தபிறகு.


ஒலிம்பிக் போட்டி ஒன்றில் 5000 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் தங்கப் பதக்கம் வென்ற, இங்கிலாந்தைச் சேர்ந்த மொஹமது ஃபாராஹ் இப்படிச் சொல்கிறார்; ‘‘என்னுடைய சாதனையைப் பாராட்டும் பலரில், சிலருக்காவது நான் எப்படி இதை சாதித்தேன் என்று தெரிந்துகொள்ள ஆசை இருக்கிறது. அதை அவர்கள் என்னிடமே நேரடியாகக் கேட்டார்கள். என்னுடைய நீடித்த பயிற்சி, என் பயிற்சியாளரின் ஊக்கம், எப்படியும் தங்கத்தைக் கைப்பற்றிவிடவேண்டும் என்ற வெறி என்று பலவாறாக அவர்களே காரணத்தையும் ஊகித்துச் சொன்னார்கள்.


அவர்கள் கூறியவை சரியானவைதான் என்றாலும், நான் வெற்றிபெற்ற குறிப்பிட்ட பந்தயத்தில் நான் எப்படி ஈடுபட்டேன் என்பதுதான் முக்கியம். ஆமாம், மொத்தப் பந்தய தூரத்தில் மூன்றில் ஒரு பங்கை முதலில் நான் வேகமாக ஓடிக் கடந்தேன். மூன்றில் இரண்டாவது பங்கில் ‘ஓய்வெடுத்துக்கொண்டேன்’. மூன்றாவது பங்கில் முதல் பங்குக்கு இணையாக, ஏன் அதற்கும் வேகமாக ஓடி வெற்றியைக் கைப்பற்றினேன்.’’


அவர் ஓய்வெடுத்துக்கொண்டதாகச் சொல்வது, தான் மேற்கொண்ட கர்மாவை அவர் முடிக்காதபோதே! விளையாட்டு பூர்வமாக, அவர் முதல் பகுதியை வேகமாகக் கடந்துவிட்டு, அதாவது தன்னுடன் போட்டியிடுபவர்களைவிட கணிசமான தொலைவு முந்திவிட்ட நிறைவில், இரண்டாம் பகுதியில் நிதானித்து அதாவது, ஓய்வெடுத்துக் கொண்டு, மூன்றாம் பகுதியைக் கடக்க, பிற போட்டியாளர்களைவிட அதிவேகத்துக்குத் தன்னைத் தயார்படுத்திக் கொண்டிருக்கிறார் என்றே சொல்லலாம்.


மேலோட்டமாகப் பார்க்கும்போது அவர் இரண்டாவது பகுதியில் ஓய்வெடுத்துக் கொண்டது தெரியாதுதான்; ஆனால், அந்தப் பகுதி ஓட்டத்தில் அவர் மனதை அமைதிபடுத்திக் கொண்டிருந்திருக்கிறார். கற்பனை பரிதவிப்புக்கோ, சந்தோஷத்துக்கோ இடம் கொடுக்காத ‘தியான’ நிலையில் இருந்திருக்கிறார் என்றுதான் அர்த்தம்!


கர்மணைவ ஹி ஸம்ஸித்திமாஸ்திதா ஜனகாதய:

லோகஸங்க்ரஹமேவாபி ஸம்பச்யன்கர் தும்ர்ஹஸி (3:20)


‘‘ஜனகரும் மற்றும் அவரைப் போன்றோரும் தாம் இயற்றிய கர்மத்தாலேயே முக்தியடைந்தவர்கள். அவர்களைப்போல உலகத்தை நல்வழியில் நடத்தவேண்டும் என்பதில் தெளிவாக இரு. இதனாலேயே கர்மம் செய்யவேண்டும் என்பதில் கடப்பாடு கொள்.’’


மிதிலை சக்கரவர்த்தி ஜனகரை கிருஷ்ணன், அர்ஜுனனுக்கு உதாரணமாகக் காட்டுகிறார். அவரும் அவரைப் போன்றவர்களும் தாம் செய்த கர்மங்களினாலேயே முக்தியடைந்தார்கள் என்று குறிப்பிடுகிறார்.


ஒரு மன்னன், தன் குடிமக்களை நல்வழிப் படுத்துவதுதான் தலையாய கர்மா. அவ்வாறு, தான் செய்யும் கர்மாக்களால் அவர்கள் நன்மையடைய வேண்டியதுதான் பிரதான நோக்கம். ஆனாலும், அவரவர் தேவைக்கேற்ப பலன்களின் மீதான ஆர்வம் கூடவோ, குறையவோ செய்யும். எல்லோரையும் ஒருசேர திருப்திபடுத்துவது என்பது இயலாத செயல். ஆனால், அதற்காகத் தம் கர்மாக்களை மேற்கொள்ளாமல் விட்டுவிடுவதும் ஒரு மன்னனுக்கு அழகல்ல.


ஆகவே, அந்த மன்னன் எந்தத் தவறும் இன்றி தன் கடமைகளை நிறைவேற்ற வேண்டும். ஆரம்பகாலத்தில் நிகழக்கூடிய சிறுசிறு தவறுகள் தொடர்ந்து விடாதவையாக மட்டுமல்ல, முற்றிலும் இல்லாததுமாகவும் ஆக்கிக்கொண்டு பணியைத் தொடரவேண்டும். பலனில் பற்றற்றவனால்தான் இப்படிப் பணியைத் தொடர இயலும். அதாவது, ஜனகரைப் போன்ற ஞானியர்களால்தான் இயலும். பார்வையிழந்த ஒருவருக்கு பார்வையற்ற இன்னொருவர் வழிகாட்ட முடியுமா?


பார்வை நன்கு தெரிந்தவர், வழிகளை அறிந்தவர், வழியிலுள்ள தடைகளைத் தெரிந்தவர், வேகமாகவோ, நிதானமாகவோ வழிநடத்திச் செல்லக்கூடிய ஒருவர்தான், இந்தப் பணிக்குப் பொருத்தமானவராக இருக்க முடியும். அப்படிப்பட்டவர்தான் ஜனகர். கர்மம் செய்தே தன் பிரஜைகளை நெறிப்படுத்தி அழைத்துச் செல்லக் கூடியவர். இதனாலேயே கர்மம் செய்வது கட்டாயமாகிறது. ‘‘ஆகவே இவ்வாறு கர்மம் செய்வதிலேயே நீ நிலைத்து நின்றுவிடு. இதனால் உனக்கு மட்டு மல்ல, உலகுக்கும் நன்மை கிட்டும்,’’ என்று அர்ஜுனனுக்கு அறிவுறுத்துகிறார் கிருஷ்ணன்.


(கீதை இசைக்கும்)


தொகுப்பு: பிரபு சங்கர்

...

Comments

Popular posts from this blog

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி