திருக்கார்வானம் கார்வானப் பெருமாள்*

 


வைணவ திவ்ய தேச உலா - 53 | திருக்கார்வானம் கார்வானப் பெருமாள்*


திருக்கார்வானம் – சூல் கொண்ட மேகங்கள் சூழ்ந்த அழகிய வானம். அந்த மேகங்கள் மழை பொழிவிக்குமா அல்லது காற்றடித்து கலைந்து சென்று விடுமோ…. பெருமழையாய் பூமியை நீரால் நிறைக்குமோ அல்லது சிறு தூறலிட்டு ஏமாற்றிச் சென்று விடுமோ…. பக்தி என்ற பருவம் முதிர்ந்தால் திருமாலின் அருள் எனும் பெருமழையை நம்மால் துய்க்க முடியும். அது குறைந்தால் அந்த அளவுக்கேற்ப இறைவனின் அருளும் மாறுபடும். ஆனால் இயற்கையின் அடிப்படையில் மழைக்கு இருக்கும் கூடுதல், குறைச்சல் நியதி, பெருமாள் அருளுக்கும் பொருந்துமா என்ன?


பெருமாள் தன் அருளை அனைவருக்கும் ஏற்றத் தாழ்வில்லாமல் தந்து அருள்பாலிக்கிறார். நமது முன்வினைப் பயன், இந்தப் பிறவியில் நம் பக்தி ஈடுபாடு என்ற அளவீடே அவரவருக்குத் தகுதியாக்கி அந்த அருளை கூடுதலாகவோ, குறைவாகவோ பெற முடிகிறது.


கார்வானத்து வண்ணத்தை மேனியாகக் கொண்டவன். பொதுவாக மழை பொழிந்த பின்னர் கார்வானம் தன் வண்ணத்தை துறந்து விடும். ஆனால் கார்முகில் வண்ணன் அனைவருக்கும் அருள் மழை பொழிந்த பின்னரும் தன் நிறத்தை இழப்பதில்லை. அது போல நாம் அவன்மீது கொண்ட நம் எண்ணத்தை இழக்காமல் இருந்தால், இரு வினைகளும் நம்மை விட்டு விலகி ஓடிவிடும்.


தாலேலோ வென்றாய்ச்சி தாலாட்டித் தன் முலைப்


பாலாலே யெவ்வாறு பசியாற்றினள் முன் –


மாலே பூங்கார்வானத் துள்ளாய் கடலோடும் வெற்போடும்


பார்வான முண்டாய் நீ பண்டு.


தன் குழந்தையின் பசியறிந்து முலைப்பாலால் அதன் பசியாற்றி, அது நிம்மதியாகத் தூங்க தாலாட்டுப் பாடும் ஒரு தாய் போல, கார்வானத்தாலும் தன் பக்தர்களின் தேவையறிந்து உதவக் கூடியவன் என்கிறார் பிள்ளைப் பெருமாள் அய்யங்கார்.


கார்மேகங்கள் சூழ்ந்திருக்கும் வானத்தில் ஆட்சி புரிபவன் நீ. கடலும், மலையும் சூழ்ந்த இந்தப் பாரும் உள்ளதே. இப்படி முற்றிலுமாக இயற்கையின் பரிமாணத்தோடு விளங்கும் எந்தையே… உன் கருணை மேகம்போல், கடல் போல், மலைபோல் பரந்தது, விரிந்தது, உயர்ந்தது என்று நெகிழ்ந்து பாடுகிறார்.சயனம் கொண்டு இந்தப் பெருமாள் உலகைப் பரிபாலிக்கவில்லை. நின்ற கோலத்திலேயே நெடுந்துயர்களை களைகிறார். உலகளந்தான் ஓங்கி உயர்ந்தபோது பிரபஞ்சமே அவன் பார்வை ஒளி பெற்று உய்வு பெற்றது போல, இந்த கார்வானத்தான் தன் நேர்கொண்ட பார்வையால் உலகோரை கவனித்து, அவர் தேவையின் அவசரம் உணர்ந்து விரைந்தோடி வரும் தோரணையில் நின்றிருக்கிறான்.


கடல் நீரை ஆவியால் ஈர்த்து மேகத்தை சூல் கொள்ள வைத்து பிறகு மழையாகப் பொழிய வைக்கும் சூரியன் போல, தம் உணர்வுகளை பக்தி ஆவியாக்கி ஞான சூல் கொண்டு கார்வானத்தின் அருள் மழை பொழிய வைத்தால் அந்தக் கருணை நம்மை மட்டுமன்றி உலகோர் அனைவரையும் போய்ச் சேரும் என்று கூறப்படுகிறது.


வைகுண்ட ஏகாதசி விழா சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது.

Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,