நைமிசாரண்யம் தேவராஜன் கோயில்*

 


108 வைணவ திவ்ய தேச உலா - 66 | நைமிசாரண்யம் தேவராஜன் கோயில்*

108 வைணவ திவ்ய தேசங்களில், உத்தரபிரதேச மாநிலம் சீதாப்பூர் மாவட்டத்தில் அமைந்துள்ள நைமிசாரண்யம் தேவராஜன் கோயில் 66-வது திவ்ய தேசமாகப் போற்றப்படுகிறது.108 திவ்ய தேசங்களில், இத்தலத்தில் மட்டுமே இயற்கை முறைப்படி பெருமாளை வன உருவத்தில் வழிபடும் முறை கடைப்பிடிக்கப்படுகிறது.

இத்தலத்தை திருமங்கையாழ்வார் மங்களாசாசனம் செய்துள்ளார்.

வாணில முறுவல் சிறு நுதல் பெரும் தோள் மாதரார் வன முலைப் பயனே

பேணினேன் அதனைப் பிழையெனக் கருதிப் பேதையேன் பிறவி நோய் அறுப்பான்

ஏணிலேன் இருந்தேன் எண்ணினேன் எண்ணி இளையவர் கலவியின் திறத்தே

நாணினேன் வந்து உன் திருவடி அடைந்தேன் நைமிசாரணியத்துள் எந்தாய்.

மூலவர்: தேவராஜன், ஸ்ரீஹரி

தாயார்: ஸ்ரீஹரி லட்சுமி, புண்டரீகவல்லி

தீர்த்தம்: சக்ர, நேமி, திவ்ய, விச்ராந்த தீர்த்தம், கோமுகி நதி

விமானம்: ஸ்ரீஹரி விமானம்

தல விருட்சம்: தபோவனம்

தல வரலாறு

12 ஆண்டுகளில் செய்யக்கூடிய சத்ர வேள்வியை செய்ய வேண்டும் என்று தவ வலிமையில் சிறந்த முனிவர்கள் விரும்பினர். அதற்கு குலபதி சௌகனர் தலைமை ஏற்பதாக முடிவு செய்யப்பட்டது. அதற்கு தகுந்த இடத்தை தேர்வு செய்து தருமாறு அனைவரும் பிரம்மதேவரிடம் வேண்டினர்.

பிரம்மதேவர் ஒரு தர்ப்பைப் புல்லை எடுத்து, அதை ஒரு வளையமாக (சக்கர அளையம்) வளைத்தார். அதை கீழே உருட்டினால், அது எங்கு விழுகிறதோ, அந்த இடமே தவம் மேற்கொள்ள சிறந்த இடமாக இருக்கும் என்று முனிவர்களிடம் தெரிவித்தார்.

முனிவர்களும் அதற்கு உடன்பட்டனர். பிரம்மதேவர் உருட்டிவிட்ட வளையம், கோமுகி நதிக்கரையில் உள்ள நைமிசாரண்யம் தலத்தில் விழுந்தது. அதன்படி முனிவர்கள் இவ்விடத்தில் சத்ர வேள்வியைத் தொடங்கினர்.

நேமி சார்ந்த ஆரண்யம்’ என்று பிரித்தால் ‘சக்கரம் சார்ந்த காடு’ என்று பொருள் கொள்ளலாம். வேள்வியை இந்த இடத்தில் தொடங்கிய முனிவர்கள் அதன் பலனை திருமாலுக்கு வழங்க முடிவு செய்தனர். அதன்படி முனிவர்கள், திருமாலை நோக்கி தவம் மேற்கொண்டனர்.

வேள்வியின் இறுதியில் அந்த யாகக் குண்டத்திலேயே திருமால் தோன்றி அவிர்பாகம் ஏற்றுக் கொண்டு அனைவருக்கும் அருள்புரிந்தார். இங்குள்ள மக்களும் திருமாலை ஆரண்ய (காடு) வடிவில் வழிபடுகின்றனர்.

கோயில் அமைப்பும், சிறப்பும்

தேவராஜப் பெருமாள் கிழக்கு நோக்கி நின்ற கோலத்தில் அருள்பாலிக்கிறார். சக்ர நாராயணன் என்றும் பெருமாள் அழைக்கப்படுகிறார். சக்ர நதிக்கரையில் சக்கரத்தாழ்வார், ராமபிரான், லட்சுமணர், சீதாபிராட்டிக்கு தனியாக கோயில்கள் அமைந்துள்ளன. விநாயகப் பெருமானுக்கும் தனிசந்நிதி உண்டு.

கோமுகி நதிக்குப் போகும் வழியில் வேத வியாசருக்கு கோயில் (வியாஸ கட்டி) அமைந்துள்ளது. வியாச முனிவர், சுக முனிவர் இருவரும் இத்தலத்தில் இருந்தபடியே பாரதம், பாகவத புராணங்கள் இயற்றியதாகக் கூறப்படுகிறது. சூத பௌராணிகர் உக்ரஸ்ரவஸ் என்ற சௌதி அனைத்து முனிவர்களுக்கும் மகாபாரதம் உள்ளிட்ட புராணங்களை எடுத்து உரைத்துள்ளார்.

நைமிசாரண்யத்தில் மற்றொரு புறத்தில் ஒரு குன்றின் மீது அனுமான் கட்டி கோயில் அமைந்துள்ளது. இங்கு ராம, லட்சுமணர்களை தமது தோளில் சுமந்தபடி ஆஞ்சநேயர் அருள்பாலிக்கிறார்.

திருவிழாக்கள்

வைகுண்ட ஏகாதசி, ஸ்ரீராம நவமி உற்சவங்கள் சிறப்பாக கொண்டாடப்படுகின்றன.

லக்னோவில் இருந்து 70 கிமீ தொலைவில் இத்தலம் உள்ளது. அகோபில மடம், ஸ்ரீராமானுஜ மடம் ஆகியன பக்தர்கள் தங்குவதற்கு உண்டான ஏற்பாடுகளை செய்துள்ளன.

Comments

Popular posts from this blog

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி