இன்று பிறந்த நாள் காணும் இசையரசி சுசீலா

 


இன்று பிறந்த நாள் காணும் இசையரசி சுசீலா அம்மாவுக்கு என் காணிக்கை:-

தாலாட்டென்றால் உன் பாடல்
"சின்னஞ்சிறு கண்மலர்"
"பதினாறு வயதினிலே பதினேழு பிள்ளையம்மா"
பள்ளிப் பருவத்தில் உன் பாடல்
"குழந்தையும் தெய்வமும் கொண்டாடும் இடத்திலே"
இளம் வயதிலே உன் பாடல்
"தீபத்தை வைத்துக் கொண்டு திருக்குறளும் படிக்கலாம்"
பதினாறில் காதல் நெஞ்சில் உன் பாடல்
"பாலிருக்கும் பழமிருக்கும் பசியிருக்காது"
காதல் பிரிவில் உன் பாடல்
"நினைக்கத் தெரிந்த மனமே உனக்கு மறக்கத் தெரியாதா"
காதல் மீண்டும் இணைந்ததும் உன் பாடல்
"நான் நன்றி சொல்வேன் என் கண்களுக்கு"
திருமணம் என்றதும் உன் பாடல்
"வருக வருக என்று சொல்லி அழைப்பார்"
கணவன் என்றால் உன் பாடல்
"அத்தான் என் அத்தான்"
அம்மாவுக்காக உன் பாடல்
"அம்மா என்பது தமிழ் வார்த்தை"
குடும்பம் என்றால் உன் பாடல்
"ஆலயம் என்பது வீடாகும்"
பெண்ணின் வாழ்க்கை என்றால் உன் பாடல்
"காலமிது காலமிது கண்ணுறங்கு மகளே"
இப்படி உன் பாடல் கேட்டே வளர்ந்த ஆத்மா இது!
பண்மிகுந்த பாடலெல்லாம் உன் ஆன்மாவிலிருந்து, குரலில் வந்து, காற்றில் கலந்து, தேன் மழையாய் மனதில் விழுந்து, பயிராகிச் செழித்து பசுமை சேர்க்கிறதே.
எங்கள் வாழ்நாளில் என் ரசனைக்கு இனிமை சேர்க்க நீ அன்னை கலைவாணியின் மறு உருவாய் வந்தாயோ,
உன் காலத்தில் உன்னிசை கேட்டின்புற என் பிறவியை இறைவன் தந்தானோ,
உன் குரலால் தமிழ் இனிமை பெற்றதா,
தமிழால் உன் குரல் மெருகேறியதா?
விடை தெரியாக் கேள்விகள் என்றாலும், இவை எல்லாவற்றிற்கும் விளக்கம் பூங்குயில் உன் இனிமைக் குரல்தானே!
பதினாறுகளில் உன் பாதம் தொட,
உன்னைத் தரிசிக்கப் பிறந்த ஆசை,
அறுபதுகளில் கைகூட, ஆண்டவன் அருள் புரிந்த அற்புதம் என்ன சொல்ல?
பாடல் வரிகளாகக் கேட்ட உன் இனிய குரல்,
கொஞ்சும் தமிழ்ப் பேச்சாக என் முன்னே வந்த போது "போதுமே இப் பிறவி" என்றெனக்குள் எழுந்த எண்ணம்
பொய்யல்ல, முற்றிலும் மெய்தான் தாயே!
இந்த இசைப் பித்தன் பிறவி எடுத்த அதே வருடந்தான், உன் பாடல் தமிழில் பிறப்பெடுத்தது என்ன ஒரு விந்தை?
உன் குரல், உன் இசை, உன் உருவம் அதில் காணும் தெய்வீக அடக்கம்,அமைதி!
எழுத எழுத ஊற்றெடுக்கும், ஆனால் ஓய்ந்து போவதில்லை.
உன் பாடல்களை கண்ணீர் மல்கக் கேட்கும் நான் உன் ரசிகனல்ல,
இசையரசி அன்னை கலைவாணியின் பிரதி உருவத்தின் முன்னால் மண்டியிட்டு நிற்கும் பக்தன்!
உன் ஆசி என்னோடிருப்பதால்தானோ என்னவோ
நல்லிசை கேட்கையிலெல்லாம் என் ஆவி
துடிக்கிறது.
வணங்கி மகிழ்கிறேன் தாயே,
உன் பாடல் போலவே, குரல் போலவே
இதே புன்முறுவலோடு என்றும்
இருப்பாய் இறைவன் அருளால்.




Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,