*T20 WC அரையிறுதி | தேறாத சுழல்… 42 டாட் பந்துகள்... - இந்திய அணியின் தோல்விக்கான காரணங்கள்*

 *T20 WC அரையிறுதி | தேறாத சுழல்… 42 டாட் பந்துகள்... - இந்திய அணியின் தோல்விக்கான காரணங்கள்*




அடிலெய்டு: டி20 கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரின் அரை இறுதி ஆட்டத்தில் ஜாஸ் பட்லர், அலெக்ஸ் ஹேல்ஸ் ஆகியோரது அதிரடியால் இந்திய அணியை 10 விக்கெட்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முன்னேறியது இங்கிலாந்து அணி.


ஐசிசி டி 20 கிரிக்கெட் உலகக் கோப்பை தொடர் ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வருகிறது. இதன் 2-வது அரை இறுதி ஆட்டத்தில் நேற்று அடிலெய்டில் இந்தியா – இங்கிலாந்து அணிகள் மோதின. முதலில் பேட் செய்த இந்திய அணி 20 ஓவர்களில் 6 விக்கெட்கள் இழப்புக்கு 168 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக ஹர்திக் பாண்டியா 33 பந்துகளில், 5 சிக்ஸர்கள், 4 பவுண்டரிகளுடன் 63 ரன்களும், விராட் கோலி 40 பந்துகளில், ஒரு சிக்ஸர், 4 பவுண்டரிகளுடன் 50 ரன்களும் எடுத்தனர். கே.எல்.ராகுல் 5, கேப்டன் ரோஹித் சர்மா 27, சூர்யகுமார் யாதவ் 14, ரிஷப் பந்த் 6 ரன்களில் நடையை கட்டினர். முதல் 10 ஓவர்களில் இந்திய அணி மந்தமாக பேட் செய்து 62 ரன்கள் மட்டுமே எடுத்தது. அடுத்த 5 ஓவர்களில் 38 ரன்கள் சேர்க்கப்பட 15 ஓவர்களில் 100 ரன்களை எட்டியது. கடைசி 5 ஓவர்களில் ஹர்திக் பாண்டியா மட்டையை சுழற்றியதால் 68 ரன்கள் கிடைத்தது. அவரின் அதிரடியின் காரணமாகவே இந்திய அணியால் கவுரவமான இலக்கை கொடுக்க முடிந்தது.


இங்கிலாந்து அணி சார்பில் கிறிஸ் ஜோர்டான் 3 விக்கெட்களை வீழ்த்தினார். 169 ரன்கள் இலக்குடன் பேட் செய்த இங்கிலாந்து அணியானது 16 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 170 ரன்கள் குவித்து வெற்றி பெற்றது. கேப்டன் ஜாஸ் பட்லர் 49 பந்துகளில், 3 சிக்ஸர்கள், 9 பவுண்டரிகளுடன் 80 ரன்களும், அலெக்ஸ் ஹேல்ஸ் 47 பந்துகளில், 7 சிக்ஸர்கள், 4 பவுண்டரிகளுடன் 86 ரன்களும் விளாசி ஆட்டமிழக்காமல் இருந்தனர்.


இந்த ஜோடி தொடக்கத்தில் இருந்தே அதிரடியாக விளையாடி இந்திய அணியின் கனவை கலைத்ததுடன் ஓவருக்கு சராசரியாக 10 ரன்களை எளிதாக எடுத்தது. மேலும் இந்திய பந்து வீச்சாளர்கள் எந்த ஒரு கட்டத்திலும் இந்த ஜோடியின் ரன் குவிப்பை கட்டுப்படுத்தவில்லை. ஷமி, அஸ்வின், பாண்டியா ஓவர்களில் சராசரியாக 11 ரன்களுக்கு மேல் விளாசப்பட்டது. 10 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி கோப்பையை வெல்வதற்கான இறுதி ஆட்டத்தில் வரும் 13-ம் தேதி பாகிஸ்தானை எதிர்த்து விளையாடுகிறது. இந்த ஆட்டம் மெல்பர்ன் கிரிக்கெட் மைதானத்தில் பிற்பகல் 1.30 மணி அளவில் நடைபெறுகிறது.


3-வது இடம்…: இந்தியாவுக்கு எதிரான ஆட்டத்தில் 169 ரன்கள் இலக்கை விக்கெட் இழப்பின்றி வெற்றிகரமாக துரத்தியது இங்கிலாந்து அணி. டி 20 கிரிக்கெட்டில் விக்கெட் இழப்பின்றி துரத்தப்பட்ட அதிகபட்ச இலக்குகளின் பட்டியலில் இது 3-வது இடத்தை பிடித்தது. இந்த வகையில் இங்கிலாந்துக்கு எதிராக 200 ரன்களை பாகிஸ்தானும், பாகிஸ்தானுக்கு எதிராக 170 ரன்களை நியூஸிலாந்தும் விக்கெட் இழப்பின்றி வெற்றிகரமாக துரத்தி உள்ளன.


தொடர் கதை…: கடந்த சில ஆண்டுகளாக இருதரப்பு கிரிக்கெட் தொடர்களில் சிறப்பாக செயல்படும் இந்திய அணி ஐசிசி தொடர்களில் முக்கியமான கட்டங்களில் வெளியேறி வந்தது. இது இம்முறையும் தொடர்கிறது. லீக் ஆட்டங்களில் 4 வெற்றிகளை குவித்த இந்திய அணி, அரை இறுதி தடையை கடக்க முடியாமல் போனது.


பாடம் எடுத்த ஜோடி: நட்சத்திர வீரர்கள் நிறைந்த இந்திய அணியின் பேட்டிங் வரிசைக்கு டி20 இன்னிங்ஸை எவ்வாறு உருவாக்க வேண்டும் என பாடம் எடுத்தது போன்று இங்கிலாந்து தொடக்க வீரர்களான ஜாஸ் பட்லர், அலெக்ஸ் ஹேல்ஸ் ஆகியோரது ஆட்டம் இருந்தது. இந்த ஜோடியின் ஒரே நோக்கம் தாக்குதல் ஆட்டம் தொடுப்பதாகவே இருந்தது. சூப்பர் 12 சுற்றில் பேட்டிங்கில் தடுமாறிய இங்கிலாந்து அணி சரியான நேரத்தில் ஆக்ரோஷ பாதைக்கு திரும்பி உள்ளது.


சிறந்த பார்ட்னர்ஷிப்: இந்தியாவுக்கு எதிராக ஜாஸ் பட்லர் – அலெக்ஸ் ஹேல்ஸ் ஜோடி முதல் விக்கெட்டுக்கு 170 ரன்கள் வேட்டையாடியது. இந்த உலகக் கோப்பையில் சிறந்த பார்ட்னர்ஷிப்பாக இது அமைந்தது. இந்த வகையில் வங்கதேசத்துக்கு எதிராக குயிண்டன் டி காக் – ரீலி ரோஸோவ் ஜோடி 168 ரன்களை குவித்து 2-வது இடத்தில் உள்ளது.


தீர்மானித்த பவர்பிளே: பவர்பிளேயில் முடிவு செய்யப்பட்ட போட்டியாக இந்தியா – இங்கிலாந்து ஆட்டம் அமைந்தது. பவர்பிளேவின் 6 ஓவர்களில் இந்தியா 38 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதற்கு காரணம் பழமையான பாணியில் தடுப்பாட்டம் மேற்கொண்டதுதான். இது அணியை மிகவும் காயப்படுத்தியது. அதேவேளையில் இங்கிலாந்து முதல் 6 ஓவர்களில் 63 ரன்களை விளாசி மிரட்டியது.


ஸ்விங் என்றால் என்ன?: புவனேஷ்வர் குமார், அர்ஷ்தீப் சிங் ஆகியோரது பந்துகள் எந்த வகையிலும் ஸ்விங் ஆகவில்லை. இந்த வகை பந்துகளுக்கு ஜாஸ்பட்லர் திணறக்கூடியவர். இந்த அஸ்திரம் இந்திய வீரர்களிடம் இருந்து வெளிப்படாததால் பட்லர் எந்தவித சிரமமும் இன்றி ரன் வேட்டையாடினார். புவனேஷ்வர் குமாரின் முதல் ஓவரிலேயே பட்லர் 3 பவுண்டரிகளை விரட்டினார்.


தேறாத சுழல்…: இந்திய அணியின் பேட்டிங்கின் போது இங்கிலாந்து சுழற்பந்து வீச்சாளரான ஆதில் ரஷித் ரன் குவிப்பை கட்டுப்படுத்தினார். 4 ஓவர்களை வீசிய அவர், 20 ரன்களை மட்டும் வழங்கி ஒரு விக்கெட் வீழ்த்தினார். ஆனால் தொடர் முழுவதும் எந்தவித தாக்கத்தையும் ஏற்படுத்தாத அக்சர் படேல் 4 ஓவர்களில் 30 ரன்களையும், அஸ்வின் 2 ஓவர்களில் 27 ரன்களையும் வாரி வழங்கினர். யுவேந்திர சாஹலுக்கு பதிலாக அக்சர் படேலுக்கு முன்னுரிமை வழங்கி அதற்கான பலனை இந்திய அணி நிர்வாகம் அனுபவித்தது.


42 டாட் பந்துகள்: இந்திய அணி 20 ரன்கள் குறைவாக எடுத்துவிட்டது என்ற கருத்து உருவானால் அதற்கு ரோஹித் சர்மாவே காரணமாக இருப்பார். ஏனெனில் அவர், 28 பந்துகளில் 27 ரன்களே சேர்த்தார். இது ஒருபுறம் இருக்க 42 பந்துகளை இந்திய அணி வீரர்கள் டாட் பந்துகளாக்கினர் (ரன் சேர்க்காமல் வீணடிக்கப்பட்ட பந்துகள்). இது 7 ஓவர்களுக்கு சமம். அரை இறுதி ஆட்டத்தில் தாக்குதல் ஆட்டம் தொடுக்கும் இங்கிலாந்து அணிக்கு எதிராக இவ்வளவு பந்துகளை வீணடித்தால் என்ன நடக்கும் என்பதை இந்திய அணி உணர்ந்திருக்கும்.


shared message

Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,