திருவெம்பாவை- பாடல் 10-
திருவெம்பாவை- பாடல் 10-
போதார் புனைமுடியும் எல்லாப் பொருள்முடிவே
பேதை ஒருபால் திருமேனி ஒன்றல்லன்
வேதமுதல் விண்ணோரும் மண்ணும் துதித்தாலும்
ஓதஉலவா ஒரு தோழன் தொண்டர் உளன்
கோதில் குலத்தான் தன் கோயிற்பிணாப் பிள்ளைகாள்
ஏதவனூர் ஏதவன்பேர் ஆருற்றார் ஆரயலார்
ஏதவனைப் பாடும் பரிசேலோர் எம்பாவாய்.
ஈசனின் திருத்தொண்டை உள்ளத்தில் ஏற்று அதனை குறைவின்றி செய்து வரும் தோழிகளே !!!
அவன் பாதமலர்கள், எத்தனை ஆழத்தில் இருக்கிறதோ தெரியவில்லை.. பாதாளம் தாண்டியும் இருக்க வேணும் !!!
மலர் சூடிய அவன் சிகையோ எத்தனை உயரத்தில் இருக்கிறதென்றும் தெரியவில்லை !!!
அவனுக்கு ஒரு ரூபமென்று சொல்ல முடியாது.. அநேக வடிவங்கள் கொண்டவன் !!!
உமையினை ஒரு பாகமாகக் கொண்டவனை, வேதங்களும் விண்ணோர்களும், நம்மைப் போன்ற அடியவர்களும் துதித்துச் சொல்லும் போதும்,, இவன் இவ்வாறு ஆனவன் என சொல்ல முடியாத வகைக்கு அளவிட இயலாதவன் !!!
ஆனால் பாருங்கள்.. அவன் இத்தனை பெரியவன் வசிக்கும் இடமோ தூய தொண்டரின் உள்ளம் !!
அவனுக்கு ஊரேது, குலமேது, உற்றார் உறவினர் தான் ஏது ?
அவனை எப்படித்தான் பாடுவதோ என் தோழிகளே !!
விளக்கம்:
சிவனின் பெருமையை உயர்த்திச் சொல்லும் பாடல் இது. போதார் புனை முடியும் என்ற வரிக்கு மலர்களை அணிந்தவன் என்ற பொருள் வருகிறது. சிவனுக்கு கொன்றை, ஆத்தி, தும்பை, எருக்கு, ஊமத்தை ஆகிய மலர்களை அணிவிக்கும் வழக்கமுண்டு. இதில் எதையாவது மனிதர்கள் பயன்படுத்துவதுண்டா? உனக்கு மல்லிகையையும், ரோஜாவையும் வைத்துக் கொள். உனக்கு பயன்படாத ஒன்றை எனக்கு அணிவி என்று தன் எளிமையை வெளிப்படுத்துகிறான் இறைவன்.
Comments