திருவெம்பாவை பாடல் 11

 திருவெம்பாவை பாடல் 11



 மொய்யார் தடம் பொய்கை புக்கு முகேர் என்னக்

கையால் குடைந்து குடைந்து உன் கழல்பாடி

ஐயா வழியடியோம் வாழ்ந்தோம் காண்

ஆரழல் போல் செய்யா! வெண்ணீறு ஆடி! செல்வா!

சிறு மருங்குல் மையார் தடங்கண் மடந்தை மணவாளா!

ஐயா! நீ ஆட்கொண்டருளும் விளையாட்டில்

உய்வார்கள் உய்யும் வகையெல்லாம் உய்ந்தொழிந்தோம்

எய்யாமல் காப்பாய் எமையேலோர் எம்பாவாய்.


 பொருள்: சிவபெருமானே! உன் அடியவர்களான நாங்கள் வண்டுகள் மொய்க்கும் மலர்களைக் கொண்ட குளத்தில் முகேர் என சப்தம் எழுப்பி குதித்து, தண்ணீரைக் குடைந்து நீந்தியபடியே உன் திருவடிகளை எண்ணிப் பாடினோம். வழிவழியாக இந்த பாவை நோன்பை நிறைவேற்றி வருவதை நீ அறிவாய். சிவந்த நெருப்பைப் போன்றவனே! உடலெங்கும் திருநீறு அணிந்தவனே! செல்வத்தின் அதிபதியே! சிறிய இடையையும், மையிட்ட அழகிய கண்களையும் உடைய பார்வதிதேவியின் மணாளனே! ஐயனே! நீ இந்த உயிர்களை ஆட்கொண்டதும் அவை என்னவெல்லாம் நன்மையடையுமோ, அவை அனைத்தையும் அடைந்து விட்ட உணர்வு உன்னைப் பாடினாலே எங்களுக்கு கிடைத்து விடுகிறது! இந்த பேரின்பநிலை மறைந்து விடாமல் என்றும் நிலைத்திருக்க அருள்செய்வாயாக!


விளக்கம்: உலகத்தில் எல்லா உயிர்களையும் இறைவன் ஆட்கொள்ளத்தான் போகிறான்! யானையும், சிலந்தியும், பறவைகளும் கூட அவனால் ஆட்கொள்ளப்பட்ட தகவல்களை நாம் படிக்கிறோம். ஆனால், மனிதனுக்கு மட்டுமே அவனைப் பாடும் வகையில் வாயைத் தந்திருக்கிறான்.  பேசத்திறனற்றிருந்தாலும் மனதுக்குள் படிக்கும் திறனைத் தந்திருக்கிறான். எனவே கிடைத்தற்கரிய இந்த மானிடப்பிறவியைப் பயன்படுத்தி நீராடும் போதும், உண்ணும் முன்பும், உறங்கும் முன்பும் நமசிவாய என்று அவன் திருநாமம் சொல்லி பிறப்பற்ற நிலையடைய வேண்டும் என்பது இப்பாடல் உணர்த்தும் கருத்து.

Comments

Popular posts from this blog

:இன்றைய காலகட்டத்தில் பெரும்பாலான பெண்களுக்கு மாதவிடாய் கோளாறுகள்? வாழ்வியல் முறையை மாற்றுங்கள்!

“சமயம் வளர்த்த தமிழ்” என்னும் தலைப்பில் திரு என்.அசோகன் கூடுதல் பதிவாளர் (ஓய்வு )அவர்களின் சொற்பொழிவு

சிறுநீர் அடங்காமைக்கு ( urinary incontinence) யோக மற்றும் இயற்கை மருத்துவம்