மனித நேயத்துக்கு மதம் தடையல்ல- ஆதரவற்ற சடலங்களுக்கு சொந்த செலவில் இறுதி சடங்கு செய்யும் முதியவர்*

மனித நேயத்துக்கு மதம் தடையல்ல- ஆதரவற்ற சடலங்களுக்கு சொந்த செலவில் இறுதி சடங்கு செய்யும் முதியவர்*



சம்பந்தப்பட்ட பெண்ணை சந்தித்த முகமது கபூர் அவரது கணவரை தகனம் செய்ய அனைத்து ஏற்பாடுகளையும் செய்தார்.

இந்து முறைப்படி அனைத்து இறுதி சடங்குகளும் செய்யப்பட்டது. அதற்கான அனைத்து செலவுகளையும் அவரே ஏற்றுக்கொண்டார்.

கன்னியாகுமரி:


நாகர்கோவிலை சேர்ந்தவர் முகமது கபூர். ஆதரவற்றோர் இல்லங்கள், நடைபாதைகள், பொது இடங்களில் யாராவது இறந்து விட்டால் இவருக்கு தொலைபேசி அழைப்பு வருகிறது. உடனே இவர் எந்தவித பதட்டமும் இல்லாமல் உடனே இறுதிசடங்கு செய்ய புறப்பட்டு விடுகிறார்.


கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு ஆசாரி பள்ளம் மருத்துவமனையில் ஒரு பெண் தன்னந்தனியாக நின்று அழுது கொண்டிருந்தார். அருகில் சென்று ஒருவர் விசாரித்தபோது தனது கணவர் இறந்து விட்டதாகவும், அவரது உடலை தகனம் செய்ய தம்மிடம் எந்த வசதியும் இல்லை என்று கூறி கண்ணீர் விட்டு கதறி இருக்கிறார்.


இந்த விஷயம் எப்படியோ முகமது கபூரின் கவனத்திற்கு வந்தது. துளியும் தாமதிக்காத முகமது கபூர் தமது நண்பர் ஒருவரை அழைத்துக் கொண்டு ஆஸ்பத்திரிக்கு சென்றார். சம்பந்தப்பட்ட பெண்ணை சந்தித்த முகமது கபூர் அவரது கணவரை தகனம் செய்ய அனைத்து ஏற்பாடுகளையும் செய்தார். இந்து முறைப்படி அனைத்து இறுதி சடங்குகளும் செய்யப்பட்டது. அதற்கான அனைத்து செலவுகளையும் அவரே ஏற்றுக்கொண்டார். இந்த சம்பவம் அவரது மனதில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.


அதன் பின்னர் அவர் இனி எந்த ஒரு ஆதரவற்ற நபரும் அனாதையாக அடக்கம் செய்யப்படக்கூடாது என்று மனதில் உறுதி எடுத்துக்கொண்டார். இன்று வரை அவர் 17 ஆதரவற்றவர்களை நல்லடக்கம் செய்துள்ளார். மதம் கடந்த மனிதத்தோடு இந்த சேவையை அனைத்து மக்களுக்கும் செய்து வருகிறார்.


இது குறித்து அவர் கூறியதாவது:-


உலகில் வாழ வழியில்லாமல் பலர் தவிப்பதைப் பார்த்திருப்போம். இறந்தும் அடக்கம் செய்ய பணம் இல்லாமல் தவிப்பவர்களும் இருக்கிறார்கள் என தெரிந்த போது மிகுந்த சங்கடத்திற்கு உள்ளானேன். முதன்முதலில் ஒரு இந்து சகோதிரி ஈமக்கிரியை தன் கணவருக்கு செய்ய பணம் இல்லாமல் தவிப்பது பற்றிச் சொன்னார்கள். அந்தப் பெண்ணைப் போய் பார்த்தேன். அவர் கணவரை இந்து மத சடங்கின்படியே அடக்கம் செய்தேன். அந்த மத சடங்குகள் அனைத்தையும், இந்து மத சகோதரர்களிடம் கேட்டு பூஜாரியை அழைத்து வந்து செய்தேன்.


அதன்பிறகு இதுவரை 17 ஆதரவற்ற முதியோரை எனது சொந்த செலவில் அடக்கம் செய்து உள்ளேன். அதில் இந்து, கிறிஸ்தவர், இஸ்லாமியர் என மூன்று மதத்தைச் சேர்ந்தவர்களும் இருக்கிறார்கள்.


என்னைப் பொறுத்தவரை இந்த உலகத்தில் யாருமே அனாதையாக ஆதரவு இல்லாமல் மரணிக்க கூடாது. அதனால் தான் இந்த பணியை செய்கிறேன். அரசு மருத்துவமனையில் இருந்து இறந்தவர் குறித்த தகவல் வந்ததும், துறை ரீதியாக அதிகாரிகளை அணுகி அனைத்து சான்றிதழ்களையும் வாங்கிவிடுவேன். ஆதரவற்றவர்களை அடக்கம் செய்வதற்காகவே நாகர்கோவில், ஒழுகினசேரியில் தனிச் சுடுகாடு இருக்கிறது அங்கு உரிய ஆவணங்களோடு போய் அடக்கம் செய்வேன். அங்கு இருக்கும் பன்னீர் செல்வம் என்பவரும் எங்களுக்கு நல்ல ஒத்துழைப்பு கொடுக்கிறார். ஆரம்பத்தில் எனது நண்பர்களை உதவிக்கு கூப்பிட்டால் வருவதற்கு தயங்கினார்கள்.


இந்த உலகில் ஆதரவு இல்லாமல் யாரும் அடக்கமாகக்கூடாது என்ற எனது நோக்கத்தை புரிந்த பின் அனைவரும் ஆதரிக்கிறார்கள்.


இவ்வாறு அவர் கூறினார்.


முகமது கபூர் உகண்டா நாட்டில் பணிபுரிந்தவர். தற்போது ஓய்வுபெற்று குடும்பத்துடன் நாகர்கோவில் இடலாக்குடி பகுதியில் வசித்து வருகிறார்.

*

Comments

Popular posts from this blog

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி