டெஸ்டா டி20 கிரிக்கெட்டா?: முதல் நாளில் உலக சாதனைகள் படைத்த இங்கிலாந்து பேட்டர்கள்!*

 டெஸ்டா டி20 கிரிக்கெட்டா?: முதல் நாளில் உலக சாதனைகள் படைத்த இங்கிலாந்து பேட்டர்கள்!*




பாகிஸ்தானுக்கு எதிரான முதல் டெஸ்டில் முதல் நாளில் இங்கிலாந்து அணி 75 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 506 ரன்கள் எடுத்து உலக சாதனைகள் படைத்துள்ளது.


பாகிஸ்தானுக்குச் சுற்றுப்பயணம் செய்து 3 டெஸ்டுகளில் விளையாடுகிறது இங்கிலாந்து அணி. இதற்காக ராவல்பிண்டியில் இங்கிலாந்து வீரர்கள் பயிற்சி மேற்கொண்டிருந்தபோது திடீரென 8 வீரர்கள் உள்பட இங்கிலாந்து அணியைச் சேர்ந்த 14 பேர் உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டார்கள். ஒரு வீரரைத் தவிர அனைவரும் உடல்நலம் தேறிவிட்டதால் திட்டமிட்டபடி டெஸ்ட் தொடர் இன்று தொடங்கியது. இங்கிலாந்து அணியில் போக்ஸுக்குப் பதிலாக வில் ஜாக்ஸ் தேர்வானார். போப் விக்கெட் கீப்பராகச் செயல்படவுள்ளார். வில் ஜாக்ஸ், லிவிங்ஸ்டன் ஆகிய இருவரும் டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு அறிமுகமாகியுள்ளார்கள். பாகிஸ்தான் அணியில் ஹாரிஸ் ராஃப் உள்பட நான்கு பேர் அறிமுகமாகியுள்ளார்கள்.டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பேட்டிங்கைத் தேர்வு செய்தது.


பாகிஸ்தானில் 17 வருடங்களுக்குப் பிறகு டெஸ்டில் விளையாடும் இங்கிலாந்து அணிக்கு அற்புதமான தொடக்கம் கிடைத்தது. முதல் ஓவரிலேயே 14 ரன்கள் எடுத்தார்கள். டெஸ்ட் கிரிக்கெட்டில் 20 வருடங்களுக்குப் பிறகு முதல் ஓவரில் எடுக்கப்பட்ட அதிகபட்ச ரன்கள் இவை. முதல் 10 ஓவர்களில் 63 ரன்கள். 2016-க்குப் பிறகு டெஸ்ட் கிரிக்கெட்டில் விளையாடுகிறார் பென் டக்கட். அவரும் ஸாக் கிராவ்லியும் தொடர்ந்து அதிரடியாக விளையாடினார்கள். 13.4 ஓவர்களில் 100 ரன்கள் கூட்டணி அமைத்தார்கள். இதைப் பார்த்த ரசிகர்களுக்குத் தாங்கள் பார்ப்பது டெஸ்ட் கிரிக்கெட்டா அல்லது டி20 கிரிக்கெட்டா என்கிற சந்தேகம் ஏற்பட்டது.ஸாக் கிராவ்லி 38 பந்துகளிலும் டக்கட் 50 பந்துகளிலும் அரை சதம் எடுத்தார்கள். முதல் நாள் உணவு இடைவேளையின்போது இங்கிலாந்து அணி, 27 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 174 ரன்கள் குவித்தது. கிராவ்லி 91, டக்கட் 77 ரன்களுடன் களத்தில் இருந்தார்கள்.


இதன்பிறகு ஸாக் கிராவ்லி 86 பந்துகளில் சதமடித்து அசத்தினார். டெஸ்ட் வரலாற்றில் விரைவாக சதமடித்த இங்கிலாந்து தொடக்க வீரர் என்கிற பெருமையை அவர் அடைந்தார்.105 பந்துகளில் சதமடித்த பென் டக்கட், 107 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். கிராவ்லி 122 ரன்களில் ஹாரிஸ் ராஃப் பந்தில் ஆட்டமிழந்தார். இருவரும் கிளம்பிய பிறகும் இங்கிலாந்து அணியின் அதிரடி ஆட்டம் நிற்கவில்லை. ரூட் 23 ரன்களுக்கு ஆட்டமிழந்த பிறகு போப்பும் ஹாரி புரூக்கும் தங்கள் பணியை ஆரம்பித்தார்கள். தேநீர் இடைவேளையின்போது இங்கிலாந்து அணி 54 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 332 ரன்கள் எடுத்தது.


பார்ப்பது டெஸ்ட் அல்ல, டி20 கிரிக்கெட் என்று ரசிகர்கள் முடிவுக்கு வரும் அளவுக்கு போப்பும் ஹாரி புரூக்கும் அதிரடியாக விளையாடி ரன்கள் சேர்த்தார்கள். 54 பந்துகளில் அரை சதமெடுத்த போப் 90 பந்துகளில் சதமடித்தார். ஹாரி புரூக் 80 பந்துகளில் 2 சிக்ஸர்கள், 14 பவுண்டரிகளுடன் சதமடித்து அசத்தினார். ஷகீல் வீசிய 68-வது ஓவரில் 6 பந்துகளிலும் பவுண்டரிகள் அடித்தார் புரூக். போப் 108 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். முதல் நாளின் கடைசி ஓவரில் 500 ரன்களை எடுத்து உலக சாதனை படைத்தது இங்கிலாந்து அணி.


முதல் நாள் முடிவில் இங்கிலாந்து அணி 75 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 506 ரன்கள் குவித்தது. புரூக் 101, ஸ்டோக்ஸ் 34 ரன்களுடன் களத்தில் உள்ளார்கள்.


டெஸ்ட் கிரிக்கெட்டில் முதல் நாளில் இதுவரை எந்த அணியும் 500 ரன்களை எடுத்ததில்லை. இதனால் 112 வருட சாதனையை முறியடித்தது இங்கிலாந்து. அதேபோல முதல் நாளில் எந்த அணி வீரர்களும் நான்கு சதங்கள் அடித்ததில்லை.




*🌏♨️

Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,