திருப்பத்தூர் #தூயநெஞ்சம் கல்லூரிக் கலை விழா ' ஹார்ட் பீட் 2022' திருப்பத்தூர் #தூயநெஞ்சம் கல்லூரிக் கலை விழா ' ஹார்ட் பீட் 2022' இல் கலந்து கொண்டு உரையாற்றும் வாய்ப்பு 16.12.2022 அன்று கிடைத்தது.  ஏறக்குறைய 2000 மாணவர்கள் நிகழ்வில் பங்கேற்றார்கள். எல்லோருமே கிராமப்புற மாணவர்கள். 


பேச்சு, கவிதை, கட்டுரை எழுதுதல் , இசை, பாடல், நடனம் , குறும்படம் எனும் பல வடிவங்களில் போட்டிகள் நடத்தப்பட்டு அதில் வெற்றி பெற்றவர்களுக்குப் பரிசினை வழங்கும்படிக் கேட்டுக் கொள்ளப்பட்டேன். 


இதே போன்ற போட்டிகளில் கலந்து கொண்டு கல்லூரி நாட்களில் மேடையேறிய நினைவுகளில் நீந்தியபடியே பரிசுகளை வழங்கினேன்.  


மாணவர்களுக்கு  அற்புதமான திறமைகள் இருப்பதை அவர்கள் மேடையில் நிகழ்த்திக் காட்டிய சில நிகழ்வுகளைப் பார்த்ததன்  மூலமே தெரிந்து கொண்டேன்.


குறுகிய கால அவகாசத்தில் அவர்கள் தயாரித்த,  இயக்கிய, நடனம் அமைத்த நிகழ்ச்சிகளிலேயே எவ்வளவு நுட்பம்? எவ்வளவு ஆற்றல்?


அவர்கள் தேர்ந்தெடுத்த கருப்பொருள்களே வியக்க வைத்தன. 


சக மனிதரிடம் காட்டும் அன்பு , நாட்டுப்புற கலை,  சுற்றுச்சூழல் பாதுகாப்பு  என்று பலவிதங்களில் கருப்பொருள்கள் தேர்ந்தெடுத்து வியக்க வைத்தனர்.  


நாளைய கலைஞர்கள், நிர்வாகிகள்,  தலைவர்கள் இவர்கள். ஆகவே மேடையில் கிடைக்கும் சில மணித்துளிகளைச் சரியாகப் பயன்படுத்தி கொள்ளவேண்டுமே....  சில நல்ல விதைகளையாவது தூவவேண்டுமே என்று ஒரு நாள் முன்பிருந்தே ஒரு பதட்டம் இருந்தது. 


பொழுதுபோக்க மட்டுமா மேடைப் பேச்சு? 


'இந்த உலகத்தில் எதை விதைக்கிறோமோ அது பன்மடங்காக விளைச்சலைத் தரும்.  


ஒரு விதை போட்டால் அது ஒரு மரமாகி ஆயிரக்கணக்கான கனிகளைத் தருவதைப் போல நமது நல்லெண்ணம்  100 மடங்காக, 1000 மடங்காக நன்மைகளைத் தரும்.  நமது முயற்சிகளும் கனவுகளும் அப்படியே... 


காட்டாற்றைப் போன்ற உங்கள் உற்சாகம் முறையாக நெறிப்படுத்தப்பட்டால் எவ்வளவு மெகாவாட் மின்சாரம்? எத்தனை ஆயிரம் ஏக்கர் விளைச்சல்? 

எவ்வளவு வெற்றிகளைத்  தரும்? என்ற மையப் பொருளில் உரை நிகழ்த்தினேன்.


'மாஞ்சி: தி மவுண்ட்டன் மேன்' திரைப்படத்தின் கதையை இடையிலே கூறி மனிதன் நினைத்தால் மலைகளையே பெயர்த்து பாதை சமைக்கலாம் என்று நிறைவுசெய்தேன். 


உற்சாகமாக் கரவொலி எழுப்பியும் , அமைதியாகக் கூர்ந்து கவனித்தும் மாணவர்கள் உரையினைக் கேட்டது எனக்கு உற்சாகம் அளித்தது.

 

'மாணவர்களுக்கு வழிகாட்டி அவர்கள் மனதை ஒழுங்குபடுத்தும் ஊக்க உரையாக உங்கள்  உரை அமைந்தது' என்று கல்லூரி முதல்வரான அருட்தந்தை அவர்களும் மற்றும் தமிழ்த் துறை பேராசிரியர் பாலசுப்பிரமணியம் அவர்களும் கூறிக் கைகொடுத்தபோது உரை தயாரித்த ஓர் இரவும்,  உரையாற்றிய 40 நிமிடங்களும்,  பயணம் செய்த ஒரு நாளும் பலன் பெற்றது என்று மகிழ்ச்சி அடைந்தேன். 


நான் பணியாற்றிய திரைப்படங்கள், எழுதிய நூல்கள் இவற்றை எல்லாம் வைத்து அற்புதமான காணொளி ஒன்றையும் மாணவர்கள் உருவாக்கி இருந்ததனர். படத்தொகுப்பு, இயக்கம் , திரை எழுத்து அனைத்திற்கான ஆர்வமும் முனைப்பும் ஆற்றலும் அவர்களிடம் இருப்பதை அது உறுதிப்படுத்தியது. 


அறிமுக உரை நிகழ்த்திய பேராசிரியர் பாலசுப்பிரமணியம் என் எல்லா நூல்களின் பெயர்களையும் அவற்றின்  மையப் பொருட்களையும் கூறி  'ஞாயிற்றுக்கிழமைப் பள்ளிக்கூடம்' கவிதையை முழுமையாக வாசித்துக் காட்டினார். அந்த நாளே மறக்க முடியாத நாளாகிவிட்டது. 


தூய நெஞ்சம் கல்லுரி நிர்வாகத்திற்கும் , பேராசிரியர்களுக்கும், மாணவர்களுக்கும் 

என் இதயம் கனிந்த நன்றி.

*

அன்புடன்,


பிருந்தா சாரதி

Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,