மக்களின் மனங்களை வென்றெடுத்த “மக்கள் திலகம்”

 மக்களின் மனங்களை வென்றெடுத்த “மக்கள் திலகம்
கடையேழு வள்ளல்களின் வரிசையில் வந்த கடைசி வள்ளலாக லட்சக்கணக்கான ரசிகர்களால் கொண்டாடப்படும் “மக்கள் திலகம்” எம்ஜிஆரின் 35வது நினைவு தினம் இன்று. அரசியல், சினிமா என்ற இரட்டை குதிரையில் சவாரி செய்து, இரண்டிலும் முழுமையான வெற்றி என்ற இலக்கை அடைந்த ஒரே ஆளுமை. சினிமாவில் இவர் பயணித்த பாதையை பற்றிய சிறு தொகுப்பு....* 1917ஆம் ஆண்டு ஜனவரி 17 அன்று இலங்கையில் உள்ள கண்டியில், கோபால மேனன் மற்றும் சத்யபாமா தம்பதியருக்கு மகனாகப் பிறந்தார்.* குழந்தைப் பருவத்திலேயே தந்தையை இழந்த எம் ஜி ஆர், தனது தாய், மற்றும் அண்ணன் சக்கரபாணியுடன், பிழைப்பிற்காக கும்பகோணத்திற்கு வந்து வசிக்க துவங்கினர்.


* குடும்ப வறுமை காரணமாக படிப்பை தொடர முடியாத எம் ஜி ஆர், “ஒரிஜினல் பாய்ஸ் கம்பெனி” என்ற நாடகக் குழுவில் இணைந்து நடிக்கத் தொடங்கினார்.


* மகாபாரதத்தில் அர்ஜுனனுக்கு உதவும் கதாபாத்திரமான “உத்ரன்” கதாபாத்திரம்தான், நாடகத்தில் எம் ஜி ஆர் ஏற்று நடித்த முதல் கதாபாத்திரம்.


* தனது அயராத உழைப்பாலும், விடா முயற்சியாலும் 1936ஆம் ஆண்டு வெளிவந்த “சதிலீலாவதி” என்ற திரைப்படத்தில் ஒரு நடிகராக வெள்ளித்திரையில் தடம் பதித்தார் எம் ஜி ஆர்.


* 1947ஆம் ஆண்டு எம் ஜி ஆர் முதன் முதலில் நாயகனாக நடித்து வெளிவந்த “ராஜகுமாரி” திரைப்படம், அவரது திரைப்பயணத்தில் ஒரு திருப்புமுனையை ஏற்படுத்தியது.


* தொடர்ந்து வந்த “மந்திரி குமாரி”, “மர்மயோகி”, “சர்வாதிகாரி”, “என் தங்கை”, “மலைக்கள்ளன்”, “குலேபகாவலி” ஆகிய திரைப்படங்கள் மிகப்பெரிய வெற்றிப் படங்களாக அமைந்ததோடு, எம் ஜி ஆரையும் நட்சத்திர அந்தஸ்திற்கு உயர்த்தியது.


* 1956ம் ஆண்டு “அலிபாபாவும் 40 திருடர்களும், “மதுரைவீரன்”, “தாய்க்குப் பின் தாரம்” என ஒரே ஆண்டில் மூன்று மாபெரும் வெற்றித் திரைப்படங்களைத் தந்து “சூப்பர் ஸ்டார்” அந்தஸ்திற்கு உயர்ந்தார் எம் ஜி ஆர்.


* 1958ம் ஆண்டு அதுவரை தான் சம்பாதித்த அனைத்தையும் செலவழித்து “நாடோடி மன்னன்” என்ற திரைப்படத்தை முதன் முதலாக தயாரித்து, இயக்கியிருந்ததோடு இரட்டை வேடமேற்று நடித்தும் இருந்தார் எம் ஜி ஆர்.


* “பிரிஸனர் ஆப் ஜெண்டா” என்ற ஆங்கில படத்தின் தழுவல் என்று கூறப்பட்ட இத்திரைப்படம், எம் ஜி ஆருக்கு ஒரு மாபெரும் வெற்றிப்படமாக அமைந்தது.


* “எத்தனை காலம்தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே” என்று ஆரம்பமாகும் “மலைக்கள்ளன்” திரைப்படப்பாடல் தான், புரட்சிகரமாக எம் ஜி ஆர் திரையில் வாயசைத்து, நடித்த முதல் சமுதாய சீர்திருத்தப் பாடலாக அறியப்பட்டது.


* “தூங்காதே தம்பி தூங்காதே”, “சினனப்பயலே சின்னப்பயலே சேதி கேளடா”, “திருடாதே பாப்பா திருடாதே”, “நல்ல பேரை வாங்கவேண்டும் பிள்ளைகளே”, “சிரித்து வாழவேண்டும் பிறர் சிரிக்க வாழ்ந்திடாதே” என சமூக அக்கரையோடு கூடிய சமுதாய சீர்திருத்தப் பாடல்களை இவரைப் போல் யாரும் தந்ததில்லை.


* “தேவர் பிலிம்ஸ்” தயாரிப்பு நிறுவனத்திற்கு 16 திரைப்படங்கள் வரை நடித்துக் கொடுத்திருக்கும் எம் ஜி ஆர், ஏ வி எம் மற்றும் ஜெமினி பிக்சர்ஸ் நிறுவனங்களில் தலா ஒரு படம் மட்டுமே நடித்திருக்கின்றார்.


* “ஜெமினி பிக்சர்ஸ்” தயாரிப்பில் வெளிவந்த “ஒளிவிளக்கு” திரைப்படம்தான் எம் ஜி ஆரின் 100வது திரைப்படமாக வெளிவந்து வெற்றி பெற்றது.


* எம் ஜி ஆருடன் அதிக திரைப்படங்களில் நாயகியாக நடித்த பெருமை நடிகை சரோஜாதேவிக்கும், ஜெயலலிதாவிற்கும் உண்டு. சரோஜாதேவி 26 படங்களிலும், ஜெயலலிதா 28 படங்களிலும் நாயகியாக நடித்திருக்கின்றனர்.


* “நாடோடி மன்னன்”, “அடிமைப் பெண்”, “உலகம் சுற்றும் வாலிபன்” ஆகிய திரைப்படங்கள் “எம் ஜி ஆர் பிக்சர்ஸ்” சார்பில் எம் ஜி ஆர் தயாரித்த திரைப்படங்கள்.


* “நாடோடி மன்னன்”, “உலகம் சுற்றும் வாலிபன்”, “மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன்” ஆகிய திரைப்படங்கள் எம் ஜி ஆர் இயக்கத்தில் வெளிவந்து வெற்றி பெற்ற திரைப்படங்களாகும்.


* 1936ல் தொடங்கிய மக்கள் திலகத்தின்; வெள்ளித்திரைப் பயணம் 1978ல் முடிவுற்றது. தனது நீண்ட நெடிய இந்த கலைப்பயணத்தில் இவர் நடித்திருந்த திரைப்படங்களின் எண்ணிக்கை 136 மட்டுமே.


* எம் ஜி ஆரின் இறப்பிற்குப் பின் இந்திய அரசாங்கம் வழங்கிய “பாரத ரத்னா விருது” உட்பட, “பாரத் பட்டம்”, “தமிழ்நாடு அரசு சினிமா விருதுகள்”, “தென்னிந்திய ஃபிலிம் ஃபேர் விருதுகள்”, “கௌரவ டாக்டர் பட்டங்கள்” என ஏராளமான பட்டங்களுக்கும், விருதுகளுக்கும் பெருமை சேர்த்தவர்தான் இந்த ஏழைப் பங்காளன்.


* எம் ஜி ஆர் பெற்ற பட்டங்கள் பல உண்டு அவற்றில் “மக்கள் திலகம்”, “பொன்மனச் செம்மல்”, “புரட்சி நடிகர்” ஆகியவை இன்றும் மக்கள் மனங்களில் நீக்கமற நிலைத்ததுண்டு என்றால் மிகையன்று.


* “இருந்தாலும் மறைந்தாலும் பேர் சொல்ல வேண்டும், இவர் போல யார் என்று ஊர் சொல்ல வேண்டும்” என அவர் பாடிய பாடல் வரிகள் போல் வாழ்ந்து மறைந்தவர்தான் மக்கள் திலகம் எம் ஜி ஆர்.


* தான் நடித்த திரைப்படங்களில் கூட மதுப்பழக்கம், புகைப்பழக்கம் இல்லாத, பெண்மையை மதிக்கக்கூடிய, தாய்மையை போற்றக்கூடிய கதாபாத்திரங்களாகவே நடித்து தனது ரசிகர்களுக்கும், தொண்டர்களுக்கும் சரியான முன்னுதாரணமாக விளங்கியவர்.நிழலில் சொன்ன நல்லவை அனைத்தையும் நிஜத்தில் செய்து காட்டிய “நிருத்திய சக்கரவர்த்தி”யாக இன்றும் மக்கள் மனங்களில் வாழும் மாமனிதர்தான் “மக்கள் திலகம்”

பகிர்வு

Comments

Popular posts from this blog

:இன்றைய காலகட்டத்தில் பெரும்பாலான பெண்களுக்கு மாதவிடாய் கோளாறுகள்? வாழ்வியல் முறையை மாற்றுங்கள்!

சளி மற்றும் இருமல் குணமாக்கும் இயற்கை மருத்துவம்

நீலமணி கவிதைகள்