சென்னைப் பல்கலைக்கழக தமிழ் மொழி துறையில் டாக்டர் #எம்ஜிஆர் கல்வி- பண்பாட்டு அறக்கட்டளை சார்பாக நடத்தப்படுகின்ற அறக்கட்டளைச் சொற்பொழிவு மற்றும் கருத்தரங்கம்

 


சென்னைப் பல்கலைக்கழக தமிழ் மொழி துறையில்

டாக்டர் #எம்ஜிஆர் கல்வி- பண்பாட்டு அறக்கட்டளை சார்பாக நடத்தப்படுகின்ற அறக்கட்டளைச் சொற்பொழிவு மற்றும் கருத்தரங்கம் 'திரைப்பாடல் இலக்கிய ஆளுமைகள்' எனும் தலைப்பில் 30.11.2022 அன்று நடைபெற்றது.
ஆண்டுதோறும் வெவ்வேறு கவிஞர்களைப் போற்றும் வகையில் நடைபெறும் நிகழ்வில் இவ்வாண்டு மக்கள்கவிஞர்
#பட்டுக்கோட்டை #கல்யாணசுந்தரம் குறித்த சொற்பொழிவை முனைவர் ய. மணிகண்டன் அவர்கள் தலைமையில் கவிஞர் ஜீவபாரதி நிகழ்த்தினார்.
அடுத்து நடந்த கருத்தரங்கில்
கவிராயர் #உடுமலை #நாராயணகவி குறித்து முனைவர் கண்ணதாசன்,
திரை இசைத் திலகம் #மருதகாசி அவர்கள் குறித்து முனைவர் செ. வீரபாண்டியன்,
கவிஞர் #கம்பதாசன் குறித்து முனைவர் இரா. பசுபதி,
புலவர் #புலமைப்பித்தன் குறித்து முனைவர் புகழ்வாணன் ஆகியோர் உரையாற்றினார்.
இந்நிகழ்விற்கு தலைமை தாங்கி உரையாற்றும் வாய்ப்பைப் பெற்றதில் நான் பெரிதும் மகிழ்ந்தேன்.
கடந்த ஒரு வாரமாக
அந்நான்கு கவிஞர்களின் பாடல்களைத் தினந்தோறும் கேட்டும் அவர்களைப் பற்றிய நூல்கள், கட்டுரைகள், ஆகியவற்றைப் படித்தும் குறிப்பெடுத்தும் அவர்கள் நினைவாகவே இருந்தேன்.
உடுமலை நாராயண கவி பாடல் எழுதத் தொடங்கிய 1933 இல் இருந்து புலவர் புலமைப்பித்தன் கடைசியாக பாடல் எழுதிய 2015 வரையான காலகட்டத்தில் வெளிவந்த பல படங்களின் பாடல்களைக் கேட்பதற்கு பெரும் வாய்ப்பாக இந்நிகழ்வு அமைந்தது.
எத்தனைச் சூழ்நிலைகள்? எத்தனை விதமான பாடல்கள்? எத்தனை வாழ்க்கைத் தெறிப்புகள்? எத்தனைக் கவித்துவச் சிதறல்கள்? எத்தனை இசைவாணர்கள்? எத்தனைக் கலைஞர்கள்?
பக்தி, பகுத்தறிவு, பொதுவுடைமை என்று கொள்கைகள் ஒரு புறம். அன்பு, பாசம், காதல், நிலையாமை , சோகம் என்று மனித உணர்வுகள் ஒருபுறம். மரபிசை, மெல்லிசை, நாட்டுப்புறப் பாடல்கள் என இசை வடிவங்கள் ஒரு புறம். எல்லாவற்றிலும் கவிதை படைக்கும் பாடல் வரிகள் ஒருபுறம்.
ஆயிரக்கணக்கான பாடல்கள்.
கேட்கவும் படிக்குமாக ஏறக்குறைய ஒரு நூறு பாடல்களை மட்டும் என்னால் காணமுடிந்தது.
முப்பது நிமிடத் தலைமை உரையில் மக்கள் திலகம் எம்ஜிஆர் அவர்கள் பாடல்கள் குறித்து எவ்வளவு கவனமாக இருந்தார்? எவ்வளவு முக்கியத்துவம் கொடுத்தார்? பாடல்கள் மூலமாக எவ்விதம் மக்களின் இதயங்களைத் தொட்டார்? கவிஞர்களை எவ்விதம் நேசித்தார் என்பதை எல்லாம் குறிப்பிட்டு திரைப்படத்திலும் திரைப்படங்களுக்கு வெளியிலும் பாடல்கள் எப்படிப் பயன்படுகின்றன என்று பொதுவாகவும் சாதனை படைத்த நான்கு பாடல் ஆசிரியர்கள் குறித்துக் குறிப்பாகவும் சிறிய முன்னுரையை மட்டும் கொடுக்க முடிந்தது.
கதையோடும் , இசையோடும் கவிதையோடும் கரைந்து பணியாற்றிய சாதனையாளர்களை வியந்ததை எப்படிப் பகிர்வது?
வானத்தின் நீளத்தையும் நீலத்தையும்
ஒரு தட்டான் பூச்சியால் விவரிக்கமுடியுமா ?
கடற்கரைக்கு எதிரில் இருக்கும் பல்கலைக்கழக அரங்கில் கடல்களைப் பற்றிய கருத்தரங்கம்...
கடலை வேடிக்கை பார்க்கலாம். கால் நினைக்கலாம். கடலை அறியமுடியுமா?
மலைத்துப் போய் நின்றேன்.
கல்லூரியில் படித்த காலமாக இருந்தால் இதையே ஓர் ஆய்வுத் தலைப்பாகவே எடுத்து நூல் எழுதலாம்.
அங்கு பார்வையாளராகக் கலந்து கொண்டவர்கள் பெரும்பாலும் பல்கலைக்கழக முதுகலை மற்றும் ஆய்வு மாணவர்கள். அவர்கள் அப்பணியை செய்வார்கள் என்ற நம்பிக்கை எனக்கு உண்டு.
உரையாற்றிய நான்கு பேராசிரியர்களும் அரிய தகவல்களோடு பாடல்களைப் பகிர்ந்தனர்.
'வரலாற்றை அறியாதவன் வரலாறு படைக்க முடியாது' எனும் உண்மையை நினைத்துக்கொண்டேன். இது வரலாற்றை அறிய ஒரு வாய்ப்பு.
சென்ற தலைமுறை செய்த சாதனை குறித்த நினைவூட்டலாக இக் கருத்தரங்கு அமைந்தது.
அடுத்தடுத்த ஆண்டுகளில் புகழ்பெற்ற கவிஞர்கள் மட்டும் இன்றி காலம் மறந்த கவிஞர்கள் குறித்தும் கருத்தரங்கு நடைபெறும் என முனைவர் ய. மணிகண்டன் அவர்கள் குறிப்பிட்டது மகிழ்ச்சியாக இருந்தது.
இதற்கு ஏற்பாடு செய்த சென்னைப் பல்கலைக்கழகத் தமிழ் மொழி துறைக்கும்,
டாக்டர் எம்ஜிஆர் கல்வி - பண்பாட்டு அறக்கட்டளைக்கும் என் மனமார்ந்த நன்றி.
*
பிருந்தா சாரதி


*


(புகைப்படத்தில் முனைவர் கண்ணதாசன், சென்னை பல்கலைக்கழக தமிழ் மொழித்துறை தலைவர் ய. மணிகண்டன், பிருந்தா சாரதி, முனைவர் செ. வீரபாண்டியன், முனைவர் மு.புகழ்வாணன், முனைவர் முனைவர் இரா. பசுபதி ஆகியோர். )

Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,