திருவெம்பாவை – பாடல் 5

 திருவெம்பாவை – பாடல் 5



"மாலறியா நான்முகனுங் காணா மலையினைநாம்

போலறிவோம் என்றுள்ள பொக்கங்க ளேபேசும்

பாலூறு தேன்வாய்ப் படிறீ கடைதிறவாய்

ஞாலமே விண்ணே பிறவே அறிவரியான்

கோலமும் நம்மைஆட் கொண்டருளிக் கோதாட்டுஞ்

சீலமும் பாடிச் சிவனே சிவனேயென்

றோலம் இடினும் உணராய் உணராய்காண்

ஏலக் குழலி பரிசேலோ ரெம்பாவாய்."


விளக்கம் :


திருமால் அறிய முடியாத `பிரமன் காணமுடியாத அண்ணாமலையை, நாம் அறியக் கூடும் என்று, உனக்குத் தெரிந்துள்ள பொய்களையே பேசுகின்ற, பால் சுரக்கின்ற, தேன்போல இனிக்கும் வாயினையுடைய, வஞ்சகீ, வாயிற்கதவைத் திறப்பாயாக. இந்நிலவுல கினரும், வானுலகினரும், பிற உலகினரும் அறிவதற்கு அருமை யானவனது அழகையும், நம்மை அடிமை கொண்டருளிக் குற்றத்தை நீக்கிச் சீராட்டும் பெருங்குணத்தையும் வியந்து பாடிச் சிவனே! சிவனே!! என்று, முறையிடினும் அறியாய், துயில் நீங்காது இருக் கிறாய். இதுதானோ மயிர்ச்சாந்தணிந்த கூந்தலையுடைய உனது தன்மை?


 நறுமணத்திரவியம் பூசிய கூந்தலையும், பாலும் தேனும் ஊறும் இனிய உதடுகளைக் கொண்டவளுமான பெண்ணே! திருமால் வராகமாகவும், பிரம்மா அன்னமாகவும் உருவெடுத்துச் சென்றும் அவரது உச்சியையும், பாதங்களையும் காண முடியாத பெருமையை உடைய மலை வடிவானவர் நம் அண்ணாமலையார். அப்பேர்ப்பட்ட ஜோதி மலையாக நின்றவனை நீ அறிந்துகொண்டதாகப் பொய்சொல்கிறாயே. நம்மால் மட்டுமல்ல… இவ்வுலகில் உள்ள மற்றவர்களாலும், அவ்வுலகிலுள்ள தேவர்களாலுமே அவனை புரிந்து கொள்ள முடியாது. அப்படிப்பட்ட பெருமைக்குரியவனை உணர்ச்சிப் பெருக்குடன் சிவசிவ என்று ஓலமிட்டு அழைக்கிறோம். நீயோ, இதை உணராமல் உறக்கத்தில் இருக்கிறாய் இதுதான் உன் தன்மையா?. நீ முதலில் கதவைத் திற என்று தோழியை எழுப்புகிறார்கள் திருவண்ணாமலை நகரப் பெண்கள்.


.


Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,