திருப்பாவை பாடல் எண் 6

 திருப்பாவை பாடல் எண் 6



 அன்னை ஆண்டாள் நாச்சியார் அருளியது 


 புள்ளும் சிலம்பின காண் புள்ளரையன் கோயிலில்

வெள்ளை விளிசங்கின் பேரரவம் கேட்டிலையோ?

பிள்ளாய் எழுந்திராய்! பேய்முலை நஞ்சுண்டு

கள்ளச் சகடம் கலக்கழியக் காலோச்சி

வெள்ளத்து அரவில் துயிலமர்ந்த வித்தினை

உள்ளத்துக் கொண்டு முனிவர்களும் யோகிகளும்

மெள்ள எழுந்து அரியென்ற பேரரவம்

உள்ளம் புகுந்து குளிர்ந்தேலோர் எம்பாவாய்


 பொருளுரை : 

------------------------

அன்புத்தோழியே! நீ உடனே எழுந்திரு! பறவைகள் அதிகாலையில் எழுந்து கீச்சிடும் இனிய ஒலி இன்னும் கேட்கவில்லையா? கருடனை வாகனமாகக் கொண்ட எம்பிரானின் கோயிலில் வெள்ளை நிற சங்குகள் எழுப்பும் முழக்கம் காதில் விழவில்லையா? பேய் வடிவம் எடுத்து. தன்னைக் கொல்ல வந்த பூதகி என்ற அரக்கியிடம் பால் குடிப்பது போல் நடித்து அவளது உயிரைப் பறித்தவனும், சக்கர வடிவில் வந்த சகடன் என்ற அரக்கனின் உயிரைக் குடித்தவனுமான கண்ண பிரானை யோகிகளும், முனிவர்களும் ஹரி ஹரி என்று அழைக்கும் குரலுமா உன்னை எட்டவில்லை! உடனே எழுந்து இவற்றையெல்லாம் கேட்டு உள்ளம் குளிர்வாயாக.


 பாடலுக்கான விளக்கம் : 

------------------------------

பூதகி என்ற அரக்கியை கம்சன் அனுப்பி வைத்தான். அவளை இம்சை செய்து கண்ணன் கொன்றிருக்கலாம். ஆனால் அப்படி செய்யவில்லை. அவனுக்கு பால் தந்து தாய் ஸ்தானத்தை அடைந்து விட்டாளே! அந்த தாய்மையைப் பாராட்டும் விதத்தில் அவளது மடியில் அமர்ந்து பாலைக் குடிப்பது போல் அமைதியாக உயிரைக் குடித்து அவளுக்கு மோட்சமளித்தான் எம்பெருமான். கேரளாவில் அம்பலப்புழையில் இருந்து 25 கி.மீ., தூரத்திலுள்ள திருவமுண்டூர் என்ற தலம் குறித்து இந்தப் பாடலை ஆண்டாள் பாடியதாகச் சொல்வர்.



Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,