நடிகை லட்சுமி
தமிழ் திரையுலகில் திறமைக்கேற்ற அங்கீகாரம் பெறாமல் போன நடிகைகளில் லட்சுமி முக்கியமானவர். சம்சாரம் அது மின்சாரம் போன்ற சில படங்கள் அமைந்தது அவரது அதிர்ஷ்டம். அந்தப் படங்களும் இல்லையென்றால் கிளாஸிக் படங்களில் அட்டகாசமான நடிப்பைத் தந்த லட்சுமியை தமிழ் சமூகம் மறந்திருக்கும். லட்சுமியின் ஆரம்பகால படங்களுடன் ஒப்பிடுகையில் சம்சாரம் அது மின்சாரம் படத்தில் அவரது நடிப்பு சாதாரணமானது.
ஜெயகாந்தன் வாரப்பத்திரிகையில் எழுதிய அக்னிப்பிரவேசம் சிறுகதை தமிழகத்தில் விவாதத்தை கிளப்பியது நினைவிருக்கலாம். அறிமுகமில்லாத ஒருவனால் இளம் பெண் பாலியல் பலாத்காரம் செய்யப்படுவதும், அந்தப் பெண்ணின் தாய் அவள் தலையில் தண்ணீரை ஊற்றி, அந்த அழுக்கு போய்விட்டதாக சொல்லும் கதையது. இந்த கதையின் முடிவிலிருந்து தொடங்கி ஒரு நாவலை எழுதினார் ஜெயகாந்தன். அந்த நாவலே சில நேரங்களில் சில மனிதர்கள் படமானது.
அந்தப் படத்தின் பிரதான விஷயமே கங்காவாக நடித்த லட்சுமி தான். ஒவ்வொரு காட்சியிலும் தனது நடிப்பால் பிரகாசித்தார். பிரபுவாக வரும் ஸ்ரீகாந்த், தாய்மாமாவாக வரும் ஒய்.ஜி.பார்த்தசாரதி, எழுத்தாளராக வரும் நாகேஷ் என அனைவரும் பாத்திரம் அறிந்து நடித்திருந்தனர். விட்டல் ராவின் கறுப்பு வெள்ளை ஒளிப்பதிவு அருமையான கவிதை உணர்வை படம் நெடுக தந்தது.
சில நேரங்களில் சில மனிதர்கள் படத்தை தமிழின் அனேகமாக அனைத்துப் பத்திரிகைகளும் பாராட்டின. குறிப்பாக லட்சுமின் நடிப்பை அனைவரும் வியந்திருந்தனர். கல்கி பத்திரிகை தனது விமர்சனத்தில், அபலை கங்காவாக நடிகை லட்சுமியை விடப் பொருத்தமான நடிகை வேறு இருக்க முடியாது. லட்சுமிக்கு இணை லட்சுமி தான் என பாராட்டி எழுதியது.
இந்தப் படத்தில் சிறப்பான நடிப்பை தந்ததற்காக லட்மிக்கு சிறந்த நடிகைக்கான தேசிய விருது கிடைத்தது. இதுதான் அவர் வென்ற ஒரே தேசிய விருதாகும். இதற்கு முன் 1974-ல் மலையாளத்தில் சட்டக்காரி படத்தில் ஆங்கிலேயே இந்தியப் பெண்ணாக லட்சுமி நடித்தார். இளமையின் வனப்பில் முதல் உடல் பரிட்சயத்தை பெறும் பெண்ணாக நடித்திருந்தார். அப்படம் 1975 இல் இந்தியில் ஜுலி என்ற பெயரில் ரீமேக் செய்யப்பட்டது. அதிலும் லட்சுமியே நடித்தார். அந்தப் படத்துக்காக தனது முதல் ஃபிலிமபேர் விருதை பெற்றார்.
நாவல்கள், சிறுகதைகளை படமாக்கும் போது லட்சுமியே முதல் தேர்வாக இருந்துள்ளார். யதார்த்தமான, நடிப்பைகோரும் திரைப்படம் என்றால் அனைவரது சாய்ஸும் லட்சுமியாகவே இருந்தது.
ஆனா அண்மையில் பாண்டிசேரி பிள்ளையார் கோயில் யானை லட்சுமி இறந்த சேதியை நடிகை லட்சுமி மரணம் என்று செய்தி பரப்பிய யூட்யூப்களுமுண்டு
இப்பேர்பட்ட நடிகை லட்சுமி இன்னிக்கு 70ஆவது பிறந்த நாள் கொண்டாடுகிறார்
.From the Desk of கட்டிங் கண்ணையா
Comments