*திருவண்ணாமலை தலபுராணம்

 *திருவண்ணாமலை தலபுராணம் - Thiruvannamalai Temple sthala puranam*



கார்த்திகை தீப பெருவிழா, இத்தலத்தில் மிகவும் சிறப்புடையது.


உயர்ந்தோங்கிய அருணாசலத்தின் - அண்ணாமலையின் அடிவாரத்தில் கோயில் உள்ளது

.

நினைக்க முத்தியருளும் நெடும் பதி.

அருணகிரி நாதரின் வாழ்வில் அருள் திருப்பம் ஏற்படக் காரணமாக இருந்த பதி.


ரமண மகரிஷி தவம் இருந்து அருள் பெற்ற தலம். (ரமணர் ஆசிரமம் இத்தலத்தில் உள்ளது.)


இத்திருக்கோயிலின் கிழக்குக் கோபுரம் 217 அடி உயரம் - தமிழகத்திலேயே உயர்ந்து விளங்குகிறது. 


தெற்கு கோபுரம் - திருமஞ்சன கோபுரம்,


 மேலக்கோபுரம் - பேய்க் கோபுரம்,


 வடக்குக் கோபுரம் - அம்மணியம்மாள்


 கோபுரம் என்றழைக்கப்படுகிறது.


யாத்ரிகர்களுக்குரிய சத்திரங்கள், திருக்கோயில் விடுதிகள் முதலியவை உள்ளன.


மலைவலம் (கிரிவலம்) இங்குச் சிறப்புடையது.


கிழக்கு கோபுரத்தில் நடனக் கலையும் பிறவுமாகிய சிற்பங்கள் ஏராளமாக உள்ளன.


கோயிலுள் நுழைந்தவுடனே சர்வசித்தி விநாயகருக்கு வலப்பால் உள்ள பாதாள லிங்கேஸ்வரர் சந்நிதி - ரமணர் தவம் செய்த இடம்; தரிசிக்கத் தக்கது.


உள்ளே சென்றால் கம்பத்திளையனார் சந்நிதியும், ஞானப்பால் மண்டபமும் உள்ளன; 'அதலசேடனாராட' என்னும் திருப்புகழுக்கு முருகன் கம்பத்தில் வெளிப்பட்டு அருள் செய்த சந்நிதி.


வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகள் முருகப்பெருமானுக்குச் சார்த்திய வேல் இன்றுமுள்ளது.

சுப்பிரமணிய சந்நிதியில் பாம்பன் சுவாமிகளின் குமாரஸ்தவக் கல்வெட்டுள்ளது; அருகிலேயே அருணகிரிநாதரின் 'திருவெழுகூற்றிருக்கை' வண்ணத்தில் சலவைக் கல்லில் பொறித்துப் பதிக்கப்பட்டுள்ளது.


அம்பாள் சந்நிதியில் சம்பந்தர் பதிகம், பாவை, அம்மானைப் படல்களின் கல்வெட்டுக்கள் உள்ளன.

விசுவாமித்திரர், பதஞ்சலி, வியாக்ரபாதர், அகத்தியர், சனந்தனர் முதலானோர் வழிபட்ட லிங்கங்கள் உள்ளன.


சாதாரணமாக கோயில்களில் அஷ்டபந்தன மருந்து சாத்தி பிரதிஷ்டை செய்வது போலன்றி, இக்கோயிலில் அண்ணாமலையார் ஸ்வர்ணபந்தனம் (சுத்தமான தங்கத்தால் பந்தனம்) செய்யப் பெற்றுள்ளார்


மூவர் - அருணாசலப் பெருமான், தங்கக் கவச நாகாபரணத்துடன் வைர விபூதி நெற்றிப்பட்டம் ஜொலிக்க காட்சித் தருகிறார்.


25 ஏக்கர் நிலப்பரப்பில் ஏழு பிரகாரங்களுடன் அமைந்துள்ள இத்திருக்கோயில் (திருவாசகத்தில்) திருவெம்பாவை பாடப்பட்ட சிறப்பினை உடையது.


நாடொறும் ஆறுகால வழிபாடுகள் நடைபெறுகின்றன.

திருவாசகத்துள் திருவெம்பாவை என்ற பனுவல், இத்தலத்துப் பெண்கள் ஒருவரை ஒருவர் வழிபாட்டுக்கு எழுப்பிச் சென்றதை அடிப்டையாகக் கொண்டது.

தலபுராணம் - அருணாசல புராணம், அருணைக் கலம்பகம், சைவ எல்லப்ப நாவலர் பாடியுள்ளார்.

'அண்ணாமலை வெண்பா ' குருநமசிவாயர் பாடியது.

குருநாமசிவாயர், குகைநமசிவாயர், அருணகிரியார், விருபாக்ஷதேவர், ஈசான்ய ஞானதேசிகர், தெய்வசிகாமணி தேசிகர் முதலியோர் இப்பதியில் வாழ்ந்த அருளாளர்கள்; இவர்களுள் பெரும் யோகியாகத் திகழ்ந்த தெய்வசிகாமணி தேசிகரின் வழியில் வந்த நாகலிங்க தேசிகர் என்பர் இராமேஸ்வரத்திற்கு யாத்திரையாகச் சென்றபோது, இராமநாதபுர ராஜா சேதுபதி அவர்களின் வேண்டுகோளையேற்று, இராமநாதபுரம் சமஸ்தானத்தைச் சேர்ந்த ஐந்து கோயில்களின் நிர்வாகத்தைக் தாம் மேற்கொண்டதோடு குன்றக்குடியில் திருவண்ணாமலை ஆதீனம் என்ற பெயரில் ஓர் ஆதீனத்தையும் ஏற்படுத்தினார்; அதுவே 'குன்றக்குடி திருவண்ணாமலை ஆதீனம்' என்று வழங்கப்பட்டுவருகின்றது.


நூற்றுக்கும் மேற்பட்ட கல்வெட்டுக்கள் இத்தலத்தில் படியெடுக்கப்பட்டுள்ளன. இவை தமிழ், சம்ஸ்கிருதம், கன்னட மொழிகளில் உள்ளன. (கல்வெட்டுக்களின் விவரத்தை ஆலயத்தலவரலாற்று நூலில் விரிவாகக் காணலாம்.)


இக்கோயிலின் சிறப்பைப் பற்றிப் பாடியோரும் நூல்களும் :- நமசிவாய சுவாமிகள் - சார பிரபந்தம், திருச்சிற்றம்பல நாவலர் - அண்ணாமலையார் சதகம், (காஞ்சிபுரம்) பல்லாவரம் சோணாசல பாரதியார் - அண்ணாமலை கார்த்திகை தீப வெண்பா, சோணாசல வெண்பா, திருவருணைக் கலிவெண்பா, சோணாசல சதகம், வடலூர் இராமலிங்கசுவாமிகள் - திருவண்ணாமலை திருவருட் பதிகம், புரசை அஷ்டாவதானம் சபாபதி முதலியார் - அருணாசலேஸ்வரர் பதிகம், காஞ்சிபுரம் சபாபதி முதலியார்-அருணாசல பதிகம், யாழ்ப்பாணம் - நல்லூர் தியாகராஜப் பிள்ளை - அண்ணாமலையார் வண்ணம். இவையன்றி; உண்ணாமுலையம்மன் பதிகம், உண்ணாமுலையம்மன் சதகம், அருணாசலேஸ்வரர் அக்ஷரமாலை, அண்ணாமலை பஞ்சரத்னம் அருணாசல நவமணி மாலை, அருணாசல அஷ்டகம், அருணைக் கலம்பகம், திருவருணை வெண்பா முதலிய நூல்களும் உள்ளன.


வள்ளல் பச்சையப்பர் இக்கோயிலில் அர்த்த சாமக்கட்டளைக்கு ஒரு லட்சம் வராகன் வைத்துள்ள செய்தியைத் தெரிவிக்கும் கல்வெட்டொன்று கோயிலில் உள்ளது.

Comments

Popular posts from this blog

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி