அரவிந்தர் மறைந்த நாளின்று

 அரவிந்தர் மறைந்த நாளின்று







😢
"தூய அன்பு ஆழமானதும், அமைதியானதுமாகும். அன்பு செலுத்துவதில் பெற்றுக் கொள்ளும் மனநிலையை விட, கொடுக்கும் மனநிலையே தேவை!' இந்த இனிய பொன்மொழிக்கு சொந்தக்காரர், மகான் அரவிந்தர்.
கொல்கத்தாவில் வசித்த கிருஷ்ணதன் கோஷ், சுவர்ணலதா தேவி தம்பதியரின், மூன்றாவது புதல்வராக பிறந்தார் அரவிந்த் கோஷ். பிறந்த ஆண்டு, 1872. இவரது தந்தை பெரும் வள்ளல். சில சமயங்களில், தன் குடும்பமே சிரமப்படும் அளவுக்கு, பிறருக்கு தானம் செய்து விடுவார். தந்தையைப் போலவே பிள்ளையும் நற்குணங்களுடன் வளர்ந்தார். மிகுந்த தைரியசாலி இவர்.
ஐந்து வயதில், டார்ஜிலிங் செயின்ட்பால் பள்ளியில் இவரது ஆரம்பக்கல்வி ஆரம்பமானது. அது, ஆங்கிலக் குழந்தைகள் படிக்கும் பள்ளி என்பதால், இளமையிலேயே ஆங்கிலம் அத்துப்படியானது. இரண்டு ஆண்டுகள் கடந்தன. அரவிந்தரை லண்டனிலுள்ள செயின்ட் பால் பள்ளியில் சேர்த்தார் அவரது தந்தை. பிரெஞ்ச், ஜெர்மன், இத்தாலிய பாஷைகளைக் கற்றுத் தேர்ந்தார். 14 வயதிலேயே கவிதை எழுத ஆரம்பித்து விட்டார்.
ஐ.சி.எஸ்., படிப்பை முடித்த அவர், குதிரை சவாரி தேர்வில் வெற்றி பெறாததால், பெரிய பதவிகளுக்கு செல்ல முடியாமல் போய் விட்டது. எனவே, மகனை இந்தியா திரும்பும்படி சொல்லி விட்டார் தந்தை. அரவிந்தர் வந்த கப்பல் கடலில் மூழ்கி விட்டது. இதைக் கேள்விப்பட்ட அவரது தந்தை, "மகன் இறந்து விட்டானே...' என்ற அதிர்ச்சியில் காலமாகி விட்டார். அரவிந்தர் இந்த விபத்தில் தப்பித்தது, அவருக்குத் தெரியாது.ஊர் திரும்பிய அரவிந்தர், இந்த துயர சம்பவம் பற்றி கேள்விப்பட்டு, மிகவும் வருந்தினார்.
அரவிந்தரின் தாய்க்கும் மனநிலை பெரிதும் பாதிக்கப்பட்டு, பிரமை பிடித்தவர் போல் இருந்தார். அரவிந்தரின் புலமை பற்றி கேள்விப்பட்ட பரோடா மன்னர் கெய்க்வாட், அவரை தன் அந்தரங்க காரியதரிசியாக நியமித்தார். பின்னர், பரோடா கல்லூரியின் முதல்வர் ஆனார். இந்த சமயத்தில் தான், அவர் தன் தாய்மொழியான பெங்காலியையே படித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், அவருக்கு அரசியல் ஆர்வம் ஏற்பட்டது. சுதந்திரப் போராட்டத்தில் குதித்தார். அவர் எழுதிய கட்டுரைகள், மக்கள் மத்தியில் பிரபலமாகப் பேசப்பட்டன. இத்துடன் ஆன்மிக ஈடுபாடும் வளர்ந்தது. ஏப்ரல் மாதம், 1901ல், மிருணாளினி அம்மையாரை அவர் திருமணம் செய்து கொண்டார். அவரை ஆன்மிக வாழ்வில் ஈடுபடுமாறு வற்புறுத்தினார் அரவிந்தர்; அம்மையாருக்கோ அதில் ஆர்வமில்லை. ஒரு கட்டத்தில், இறந்து போனார்.
சுதந்திரப் போராட்ட காலத்தில், நீதிபதி ஒருவரைக் கொல்வதற்காக, இரண்டு இளைஞர்கள் குண்டு வீசினர். அவருடன் வண்டியில் பயணம் செய்த ஒரு பெண்ணும், அவரது மகளும் இதில் இறந்தனர். அலிப்பூர் வெடிகுண்டு வழக்கு என்று பிரபலமான இந்த வழக்கில், இந்த இளைஞர்களை தூண்டி விட்டது அரவிந்தர் என்ற அடிப்படையில் கைது செய்யப்பட்டார். சிறைக்குள் நுழைந்ததும் அங்கிருந்த சூழ்நிலை அவரையறியாமல் ஏதோ ஒரு பயத்தை ஏற்படுத்தியது. அப்போது, அவர் கண்களை மூடினார். "எல்லா இடத்திலும் நான் இருக்கும் போது பயம் எதற்கு?' என்று கண்ணபிரான் சொல்வது போல் கேட்டது.
இதை அடுத்து கண்ணனைப் பற்றி கவிதைகள் எழுத ஆரம்பித்தார். இந்த வழக்கில் குற்றச்சாட்டு நிரூபிக்கப்படாததால், விடுதலை செய்யப்பட்டார்.இதன்பிறகு, 1910ல் புதுச்சேரி வந்த அவர், முழுநேர ஆன்மிகத்தில் ஈடுபட்டார். அவரது ஆசிரமத்தில் நான்கு சீடர்கள் இருந்தனர். தவம், ஜபம் என நாட்கள் கழிந்தது. "ஆரிய' என்ற பத்திரிகையை துவங்கி, அதில் ஆன்மிக விஷயங்களை ஏராளமாக எழுதினார்.
"மேலே உயர்த்துகிற ஒரு லட்சியத்தில் செயல்படுகிறேன். அந்த லட்சியம் நிறைவேறிய பிறகு, அதையே ஆதாரமாகக் கொண்டு செயல்படுவேன்...' என்றார் அரவிந்தர். ஆம்... ஆன்மிகத்தில் உயர்நிலையை எட்ட வேண்டும் என்பது அவரது எண்ணம்.
1926ல் அந்த எண்ணம் நிறைவேறியதும், சீடர்களைக் கூட பார்ப்பதைத் தவிர்த்து, தனிமையில் இருந்தார். இந்த சமயத்தில், அரவிந்தரை தரிசிக்க, பிரான்சில் இருந்து வந்த, "மிரா' என்பவர் யோக சாதனைகளில் ஈடுபட்டார். அவரே ஸ்ரீ அன்னை என பெயர் பெற்றார். ஆசிரமத்தின் தலைமைப் பொறுப்பு அவருக்கு தரப்பட்டது. நீண்டகாலம் ஆன்மிக சேவை செய்த அரவிந்தர், இதே டிச., 5, 1950ல் காலமானார்.
மனிதன் பிறந்ததே இறைவனை <<<உணரவும், அவரை அடையவுமே என்ற ஒப்பற்ற போதனையைப் போதித்த அரவிந்தரை, அவரது மறைவு நாளில் நினைவு கூறுவோம்

Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,