ஒளியின் வடிவம் சிவம்*
ஒளியின் வடிவம் சிவம்*
தீபவழிபாட்டில் சிறப்பானது ‘கார்த்திகை தீபம் ஆகும். முருகப் பெருமானைக் கார்த்திகை பெண்கள் சீராட்டி வளர்த்தனர். தீபவழிபாடு பண்டைய காலம் தொட்டே பலமுறைகளிலும் நடைபெற்று வருகிறது. சைவர், வைணவர், ஜைனர் என்ற பாகுபாடு இன்றி எல்லா மதத்தினரும் தீபவழிபாட்டைக் கடைபிடிக்கின்றனர். இந்தியாவில் வடக்கில் தீபவழிபாடு 'தீபாவளி' என்றும் தெற்கே தீபவழிபாடு 'கார்த்திகை தீபம்' என்றும் கொண்டாடப்படுகிறது.
தீபதானங்கள் பதினாறு வகை தென் நாட்டில் வழக்கில் இருந்து வருகிறது. தீபவழிபாட்டில் சிறப்பானது 'கார்த்திகை தீபம் ஆகும்.
இது கார்த்திகை மாதத்தில் பவுர்ணமி திதியில் கிருத்திகை நட்சத்திரத்தில் வருவதாகும். பண்டைய காலத்தில் சூரியன், சந்திரன், நெருப்பு இம்மூன்றையும் தான் தமிழர்கள் வழிபட்டு வந்தனர் என்று சொல்வார்கள்.
இன்று தினமும் காசியிலும், ஹரித்து வாரிலும் மாலையில் தீபம் ஏற்றி இலையில் வைத்து பூக்களுடன் ஆற்றில் விடும் பழக்கம் இருந்து வருகிறது. கங்கைக்கு தீபம் காட்டி வழிபடுவது இன்றும் முக்கியமானதாக கருதப்படுகிறது. சிலப்பதிகாரம், மணிமேகலை போன்ற சங்க நூல்களில் பாவை விளக்குகள் பற்றி முக்கியமாகக் குறிப்பிடப்பட்டிருக்கின்றன. 'கார்த்திகை தீபக்காட்சிக் கண்டு களித்தவர்களின் கண்கள்தான் கண்கள். மற்றவர்களின் கண்கள் வெறும் புண்கள்' என்ற பொய்கையாழ்வார் கார்த்திகை தீபத்தை பற்றிச் சிறப்பாக குறிப்பிடுகிறார்.
காளிதாசனின் ரகுவம்சத்தில் இந்துமதி யின் அழகைப் பற்றி வர்ணிக்கையில், சுயம்வர மண்டபத்தில் இந்துமதி வரும் அழகு தீப ஒளி போன்று, அங்கு அமர்ந்தி ருக்கும் அரசிளங்குமாரர்களின் மீது பட்டு அவர்களது முகம் ஜொலிப்பதாக கூறியுள்ளார். மாணிக்கவாசகர், 'சோதியே சுடரே சூழ் ஒளி விளக்கே' என்று சிவபெருமானை குறித்து பாடியுள்ளார்
குத்து விளக்கில் இருக்கும் ஐந்து முகங்களையும் ஏற்றி வைத்தால் அந்த இடம் லட்சுமிகரமாக இருக்கும்.
ஐந்து முகங்களையும் பெண்களின் மன உறுதி, நிதானம், சமயோசித புத்தி, சகிப்புத்தன்மை, அன்பு இவற்றிற்கு ஒப்பிடுவார்கள். நமிநந்தி அடிகள், கலியநாயனார், கணம்பில்ல நாயானார் போன்றோர் திருவிளக்கு ஏற்றி வைத்து கோவில்களில் தொண்டு செய்ததாக பெரிய புராணம் கூறுகிறது. அகல், எண்ணெய், திரி, சுடர் இவை நான்கும் ஒன்று சேரும்போது 'விளக்கு' என்று அழைக்கப்படுகிறது. இவை அறம், பொருள், வீடு என்ற குறள் நெறியை உணர்த்துகின்றன. இவையே சரியை, கிரியை, யோகம், ஞானம் ஆகும். இந்த அறிவொளியைத் தீபமாக, தீபசக்தியாக நாம் வணங்குகிறோம்.
முருகப் பெருமானைக் கார்த்திகை பெண்கள் சீராட்டி வளர்த்தனர். அம்பிகை அருளால் முருகப்பெருமான் கார்த்தி கேயன் ஒருமுகக் கடவுளானார். இதன் காரணமாக 'பரணி தீபம்' கொண்டாடப்படுகிறது. வள்ளலார் 'ஒளியின் வடிவம் சிவம்' என்று கருதி, அருட் பெருஞ்ஜோதி அகவல் பாடினார். அப்பர் பெருமான் 'நமசிவாய' மந்திரமே ஒளிமயமானது என்கிறார்.
ரிக்வேதத்தில் இந்திரனுக்கு அடுத்த படியாக அக்னி பகவான் முக்கிய இடம் பெறுகிறார். கீதையில் கிருஷ்ண பகவான், விளக்கின் ஒளி போன்று மனதை ஆடாமல், அசையாமல் சஞ்சலமற்று ஒரு நிலைப்படுத்த வேண்டும் என்கிறார். கார்த்திகை தீபத்தன்று வீடுகளில் மாலையில் தீபம் ஏற்றி நெல் பொரியில் உருண்டை செய்து இறைவனுக்கு நைவேத்தியம் வைத்து வழிபட்டால் அளவிடற்கரிய பலன்கள் கிடைக்கும்
Comments