எமிலி டிக்கின்சன் (Emily Dickinson)
உலகப் புகழ்பெற்ற அமெரிக்கப் பெண் கவிஞரும் ஆங்கிலக் கவிதையுலகின் குறிப்பிடத்தக்கப் படைப்பாளிகளுள் ஒருவருமான எமிலி டிக்கின்சன் (Emily Dickinson) பிறந்த தினமின்று
* அமெரிக்காவின், மசாசூசெட்ஸ் மாநிலத்தில் பிறந்தவர் (1830). தந்தை ஒரு வியாபாரி. சிறுவயது முதலே புத்தி கூர்மையான பெண்ணாக இருந்த இவர், இயல்பான பல திறன்களைப் பெற்றிருந்தார் எனவும் கூறப்படுகிறது
* இவருக்கு 8 வயதாக இருந்தபோது குடும்ப நண்பர் ஒருவர் சிறுமிக்கு வில்லியம் வேர்ட்ஸ்வொர்த்தின் எழுத்துகளை அறிமுகம் செய்துவைத்தார். மேலும் ரால்ஃப் வால்டோ எமர்சனின் பாடல் தொகுப்புகள், லெட்டர்ஸ் ஃபிரம் நியுயார்க் உள்ளிட்ட மேலும் பல நூல்களையும் பரிசளித்தார்.
* இவரது சகோதரரும் தோழிகளும் ஷேக்ஸ்பியர் உள்ளிட்ட பல புகழ்பெற்ற இலக்கிய நூல்களை இவருக்குக் கொடுத்தனர். வாசிப் பில் நாட்டம் கொண்டிருந்த சிறுமி பைபிளுடன் இந்த அனைத்து நூல்களையும் படித்தார். அப்போதே கவிதைகள் எழுதிவந்தார்.
* 1847-ல் பள்ளிக் கல்வி முடிந்தவுடன் மவுன்ட் ஹோல்யோக் பெண்கள் இறையியல் கல்லூரியில் சேர்ந்து பயின்றார். உடல்நிலை காரணமாகவும் அங்குள்ள ஆசிரியர்களை வெறுத்ததாலும் அங்கு படிப்பை முடிக்காமல் வீடு திரும்பினார்.
* தாய் உட்பட வாழ்வில் பல உறவுகளையும், நட்புகளையும் இழந்ததால் தனிமை விரும்பியாக மாறினார். மெல்ல மெல்ல வெளிஉலகத்திலிருந்து தன்னை ஒதுக்கிக்கொண்டு 1858 முதல் முழு மூச்சுடன் எழுத ஆரம்பித்தார். ஏழாண்டு காலத்தில் மட்டும் 40 தொகுதிகளில் சுமார் 800 கவிதைகள் அடங்கியிருந்தன.
* இவரது பெரும்பாலான கவிதைகள் மரணம், மரணமின்மை, தனிமை, வேதனை, மகிழ்ச்சி, காதல், மதம், ஒழுக்கம் ஆகிய வற்றைக் கருப்பொருளாகக் கொண்டவை. உயிரோடு இருந்த போது வெகுசில கவிதைகளே அச்சேறின. அவையும் அந்தக் காலகட்டத்துக்குப் பொருந்ததாதவை என்றும் கவிதை மரபுகளை மீறியவை என்றும் விமர்சிக்கப்பட்டன.
* ஆனால், இவர் தன் நூல்கள் வெளிவருவது, வராமல் இருப்பது, புகழ்ச்சி, இகழ்ச்சி, வருமானம், விமர்சனங்கள் எதையும் பொருட்படுத்தாமல் எழுதிக்கொண்டே இருந்தார். 1800 கவிதைகளை எழுதியுள்ளார். இவ்வளவு பெரும் எண்ணிக்கையில் எழுதியது இவர் நண்பர்கள், உறவினர்களுக்கேகூடத் தெரியவில்லை. அந்த அளவு தனிமை விரும்பியாக இருந்தார்.
* இவரது மரணத்துக்கு 4 ஆண்டுகளுக்குப் பின் இவரது சகோதரி, சிறுசிறு கோப்புகளாக நூலால் கட்டி ஆங்காங்கே இவர் வைத்திருந்த ஆயிரத்துக்கும் மேற்பட்ட கவிதைகளைத் தேடி எடுத்தார். இந்தக் கவிதைகள் ‘தி போயம்ஸ் ஆஃப் எமிலி டிக்கின்சன்’ எனப் பல தொகுதிகளாக வெளியிடப்பட்டன. அப்போதும்கூட இவரது கவிதைகள் பெரிய அளவில் வரவேற்பைப் பெறவில்லை.
* ஆனால், 1924 முதல் தொடர்ந்து இவரது கவிதைகள், ‘லைஃப்’, ‘நேச்சர்’, ‘லவ்’, ‘டைம் அன்ட் எடர்னிட்டி’, ‘தி சிங்கிள் ஹவுன்ட்’ ஆகிய தலைப்புகளில் ஐந்து தொகுதிகளாகவும் மேலும் பல கவிதைத் தொகுப்புகளும் வெளிவந்து பாராட்டுப் பெற்றன. அதன்பிறகு அமெரிக்க கவிஞர்களுள் மிக முக்கியமான ஒருவராக அங்கீகாரமும் புகழும் பெற்றார். ஆங்கில இலக்கியவாதிகள், வாசகர்களால் குறிப்பிடத்தக்க படைப்பாளியாகப் போற்றப்படும் எமிலி டிக்கின்சன் 1886-ம் ஆண்டு மறைந்தார்.
Comments