நாங்கள் இரண்டு கவிஞர்களா? இரண்டு வசனகர்த்தாக்களா? இரண்டு நடிகர்களா?
சென்னை புத்தகக் கண்காட்சியில் நேற்று கவிஞர் #மனுஷ்யபுத்திரன் அவர்களைச் சந்தித்து அண்மையில் வெளிவந்த அவருடைய 12 கவிதை தொகுதிகளுக்காக என் வியப்பையும் வாழ்த்துக்களையும் தெரிவித்தேன். அசுர வேகம் அவர் வேகம். எவ்வளவு வேலைகளுக்கு இடையே இவ்வளவு கவிதைகள்? அல்லது இவ்வளவு கவிதைகளுக்கு இடையே எவ்வளவு வேலைகள்? அவர் உழைப்பைக் கண்டு மலைக்கிறேன் .
'இந்த வருடம் உங்க புத்தகம் என்ன வருது?'
'#முக்கோண_மனிதன் ' கவிதைத் தொகுதி சார்.
'சூப்பர்.... சூப்பர்... கொண்டாங்க சீக்கிரம்...'
அவருடைய முதல் நாவலான '#தாராவின்_காதலர்கள்' நூலை உயிர்மை அரங்கில் வாங்கிக்கொண்டேன். அவர் எப்போதும் போற்றும் எழுத்தாளர் #சுஜாதா வுக்கு நூலை சமர்ப்பணம் செய்துள்ளார். அது மிகப் பொருத்தமான ஒன்று . சுஜாதா இருந்திருந்தால் அவரே வெளியிட்டுப் பேசி கணையாழியின் கடைசி பக்கங்களிலோ 'கற்றதும் பெற்றதும்' தொடரிலோ இந்நாவல் பற்றி எழுதி இருப்பார் . கவிதையும் உரையும் கலந்த புது முயற்சி. பின்னால் படமாக இருந்து நாங்கள் பேசியதைக் கேட்டுகொண்டு இருந்தார்.
அவருடைய கவிதை நூல்களை புதிய வீடு வாங்கிவிட்டு வாங்கிக் கொள்கிறேன் என்றேன். 'அதுக்காகவாவது வாங்குங்க' என்றார். சீக்கிரம் அவர் கவிதை நூல்களை வாங்க வேண்டும்.
பிறகு அவர் திரைப்பட வசனம் எழுதிய படம் குறித்துப் பேச்சு திரும்பியது. அவர் தொடர்ந்து இப்பணியில் இயங்குவது திரைப்பட வசனத்திற்கு மிகப்பெரிய லாபமாக இருக்கும்.
தொடர்ந்து 'பத்து தல' திரைப்படத்தில் அவர் நடித்ததையும் 'வாரியர்' படத்தில் நான் நடித்ததையையும் பகிர்ந்து கொண்டபோது உரக்கச் சிரித்தோம்.
இப்போது நாங்கள் இரண்டு கவிஞர்களா? இரண்டு வசனகர்த்தாக்களா? இரண்டு நடிகர்களா?
*
பிருந்தா சாரதி
*
Comments