சென்னையில் 7 முக்கிய சாலைகள் விரிவுபடுத்தப்படுகிறது*
சென்னையில் 7 முக்கிய சாலைகள் விரிவுபடுத்தப்படுகிறது*
சென்னை:சென்னையில் போக்கு வரத்து நெரிசலை குறைக்க மெட்ரோ ரெயில் சேவை கடந்த 7 வருடத்திற்கு முன்பு தொடங்கப்பட்டது. மெட்ரோ ரெயில் நிலையங்களுடன் அந்த பகுதியில் உள்ள சாலைகளை இணைக்கும் வகையில் சாலைகளை அகலப்படுத்த பெருநகர வளர்ச்சி குழுமம் (சி.எம்.டி.ஏ.) திட்டமிட்டுள்ளது.சென்னையில் உள்ள 7 முக்கிய சாலைகளை அகலப்படுத்த முடிவு செய்து அதற்கான பணிகள் தொடங்கி உள்ளன. இதற்கான ஆய்வு பணியை சி.எம்.டி.ஏ. தொடங்கி உள்ளது. அண்ணாசாலையில் இருந்து மத்திய கைலாஷ் செல்லும் 3 கி.மீட்டர் தூரமுள்ள சர்தார் படேல் சாலை விரிவாக்கம் செய்யப்படுகிறது.இந்த சாலை 20 மீட்டரில் இருந்து 30.5 மீட்டர் வரை அகலப்படுத்த ஆய்வு செய்யப்படுகிறது. இதற்கான நிலத்தின் திட்ட அட்டவணை தயாரிக்கும் பணி விரைவில் நிறைவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.இதேபோல எத்திராஜ் சாலை, கீழ்ப்பாக்கம் கார்டன் சாலை, டேங்க் பண்ட் ரோடு, கிரிம்ஸ் ரோடு, நியூ ஆவடி ரோடு மற்றும் பெரம்பூர் பேரக்ஸ் சாலை ஆகிய 6 சாலைகள் அகலப்படுத்தப்பட உள்ளன. இந்த சாலைகளை குறைந்த பட்சம் 18 மீட்டர் வரை விரிவுபடுத்த சி.எம்.டி.ஏ. திட்டமிட்டுள்ளது.இதையடுத்து அடையாறு எல்.பி.ரோடு, பெரம்பூர் பேப்பர் மில்ஸ் ரோடு, ஹண்டர்ஸ் ரோடு ஆகியவை அகலப்படுத்தும் திட்டத்திற்குள் கொண்டு வரப்படுகிறது.சாலைகள் விரிவாக்கம் செய்வது குறித்து அதிகாரிகள் கூறியதாவது:-சர்தார் படேல் சாலை விரிவாக்கத்திற்கான நிலம் தனியாரிடம் எடுக்க விரைவில் இறுதி செய்யப்படுகிறது. இதற்கான ஆய்வுப் பணி திங்கட்கிழமை முடியும். எத்திராஜ் சாலை விரிவாக்க ஆய்வு பணி விரைவில் தொடங்க உள்ளது.இந்த சாலை பாந்தியன் ரோடு ஜங்சன் மற்றும் எழும்பூர் கூவம் வரை 18 மீட்டர் அகலத்திற்கு விரிவு படுத்தப்படுகிறது. இதே போல கிரிம்ஸ் ரோட்டில் இருந்து பாந்தியன் ரோடு, அண்ணாசாலை வரை 18 மீட்டர் அகலத்திற்கு விரிவு படுத்தப்படுகிறது.அலுவலகங்களுக்கு செல்லக்கூடிய காலை மற்றும் மாலை நேரங்களில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை குறைக்க முதல் கட்டமாக 7 சாலைகள் அகலப்படுத்தப்படுகின்றன. மெட்ரோ ரெயில் உள்ளிட்ட பொது போக்கு வரத்து வாகனங்கள் நெரிசல் இல்லாமல் செல்ல வழிவகை செய்யப்படும்.ஈ.வே.ரா.பெரியார் சாலையில் இருந்து நியூ ஆவடி ரோடு, கீழ்ப்பாக்கம் குடிநீர் திட்டப்பணி வரை 18 மீட்டர் அகலமும், திருவள்ளூர் ரோடு சந்திப்பில் இருந்து பேப்பர் மில்ஸ் ரோடு வரை 18 மீட்டர் அகலமும் விரிவாக்கம் செய்யப்படுகிறது. அடையாறு எல்.பி. ரோடு 30.5 மீட்டர் அகலத்துக்கு விரிவுபடுத்தப்படுகிறது.
Comments