மாட்டுக்கு மரியாதை

 மாட்டுக்கு மரியாதை

*











'மாடு' என்ற சொல்லுக்கே செல்வம் என்றுதான் பொருள்.


"கேடுஇல் விழுச்செல்வம் கல்வி 

ஒருவற்கு மாடுஅல்ல 

மற்றை யவை."


என்ற  குறளில் 'மாடு' என்ற சொல்லைச் செல்வம் என்ற பொருளில்தான் வள்ளுவர் ஆண்டிருக்கிறார். 


பழங்காலத்தில் ஒரு நாட்டோடு போர் தொடுக்க விரும்பும் எதிரி நாட்டினர் முதலில் அந்நாட்டின் ஆநிரைகளைத்தான் கவர்ந்து செல்வர். மாடுகளைக் கவர்ந்து செல்வது மானப் பிரச்சனை. உடனே போர் தொடங்கும்.


அசையாச் சொத்துக்கள் ஆயிரம் இருந்தும் அந்தரங்கத்தில் வறுமையில் வாடிய பணக்கார ஏழைகள் பலர் உண்டு. அசையும் சொத்தான மாடு ஒன்று இருந்தால் கூடப் போதும்.  அன்றாடச் செலவுக்கு யாரிடமும் கையேந்த வேண்டிய அவசியமில்லை.  ஒரு வீட்டை ஒரு மாடு கவனித்துக் கொள்ளும்.  குடும்பத் தலைவனுக்கு நிகரான பாத்திரத்தை மாடுகள்  ஏற்றுக்கொண்டன.


'ஏறு தழுவுதல்' பழந்தமிழர்ப் பண்பாடு. அதனால்தான்

'ஜல்லிக்கட்டு' தடை செய்யப்பட்டபோது நாடே திரண்டு போராடி  அவ்வுரிமையை மீட்டது.


'புதுமனைப் புகுவிழா'வில் மாடும் கன்றுமாக இல்லத்தினர் குடிபுகுவது மங்கலம் எனப்பட்டது.


நன்றாக உழைப்பவனை 'மாடா உழைக்கிறான்' என்று பேச்சு வழக்கில் கூறுவதும் நம் மரபு. மாடு ஆற்றலின் வடிவம். அதனால்தான் காளையை அடக்கியவனுக்குப் பெண்ணை மணமுடித்துத் தந்தனர். அவனைக் காளை என்றனர்.


மஞ்சுவிரட்டு மைதானத்தில் காளையரைப் பஞ்சாய்க் பறக்க விடும் காளைகள் வீட்டில் தங்களை வளர்க்கும் கன்னியரிடம் வாலைக் குழைத்துக்கொண்டு குழந்தைகள் போல் கொஞ்சின. 


"அஞ்சாத சிங்கம் என் காளை -அது 

பஞ்சாய்ப் பறக்கவிடும் ஆளை"


என்று அவர்களும் தங்கள் மாட்டின் பெருமையால் பெருமிதம் கொண்டனர்.


விவசாயத்தில் உழும் மாடுகள் பின் வண்டியிழுக்கும். 

அவற்றின் சாணமும் வயலுக்கு எரு.


வில் வண்டி வைத்திருப்பது குடும்பத்தின் கெத்து. மைனர்கள் சாரட்டு வண்டி ஓட்டினார்கள். பார வண்டிகள் சரக்குப் போக்குவரத்துக்குப் பயன்பட்டன. எல்லாவற்றுக்கும் மாடுதான் ஆதாரம்.


கொம்புக்கு வண்ணம் தீட்டிக்  கழுத்துக்கு தக்கையால் வண்ண மாலை அணிவித்து கொண்டாடுவதெல்லாம் மாட்டுக்கு மனிதன் தரும் மரியாதை.


மண்ணோடு மனிதனுக்கு இருக்கும் உறவைப் பொங்கலாகக் கொண்டாடுவதும் மாட்டோடு மனிதனுக்கு இருக்கும் உறவை மாட்டுப் பொங்கலாகக் கொண்டாடுவதும் இதனால்தான். 


இப்போது 'ட்ராக்டர்'கள் வந்துவிட்டன.  மாடுகளின் இடத்தை இயந்திரங்கள் எடுத்துக் கொண்டுவிட்டன .


ஆனாலும் நாம் மாட்டை மறப்பதில்லை. நனவிலி மனதில் இருந்தாவது மரபு மனிதனை ஆண்டுகொண்டுதான் இருக்கும். 


மாடு நம் செல்வம் என்பதை மறவாமல் மாட்டுப் பொங்கலைக் கொண்டாடுவோம்.


அனைவருக்கும் மாட்டுப் பொங்கல் வாழ்த்துகள்.

*


அன்புடன்,

பிருந்தா சாரதி

Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,