ஐ.டி. பணிநீக்கம்: கூகுள் நடவடிக்கையால் கர்ப்பிணி கலக்கம் -

 *ஐ.டி. பணிநீக்கம்: கூகுள் நடவடிக்கையால் கர்ப்பிணி கலக்கம் - டி.சி.எஸ்., விப்ரோ பணி நீக்கம் - BBC News தமிழ்*



பெரும் ஐ.டி. நிறுவனங்களில் தொடரும் பணிநீக்கம்

உதிரி பாகங்களின் விநியோகச் சங்கிலி உடைந்ததால் தொழில்துறையில் உற்பத்தி முடக்கம், உணவுதானியப் பற்றாக்குறை, பெட்ரோல், டீசல், எரிவாயு போன்ற எரிபொருள் விலையேற்றம் என ஒவ்வொரு நாடும் வெவ்வேறு வகையில் பாதிப்பை எதிர்கொண்டுள்ளன. உலக பொருளாதார வளர்ச்சி சரிந்துவிட்டதன் தாக்கத்தை தகவல் தொழில்நுட்பத் துறையில் கண்கூடாக காண முடிகிறது. அமேசான், கூகுள், மெட்டா, ட்விட்டர் போன்ற பெருநிறுவனங்கள் அடுத்தடுத்து பணி நீக்க அறிவிப்பை வெளியிட்டு தொழிலாளர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கி வருகின்றன.


நிறைமாத கர்ப்பிணி வேலையைப் பறித்த கூகுள்

அந்த வரிசையில், கூகுள் நிறுவனம் அண்மையில் 12,000 பேரை பணிநீக்கம் செய்வதாக அறிவித்தது. அமெரிக்காவின் கலிபோர்னியாவைச் சேர்ந்த கேதரின் வாங் என்ற பெண்ணும் அவர்களில் ஒருவர். கூகுள் நிறுவனத்தில் ஏவியேஷன் பிரிவில் புரோகிராம் மேலாளராக அவர் பணிபுரிந்து கொண்டிருந்தார். 8 மாத கர்ப்பிணியான கேதரின் வாங் நிறைமாத கர்ப்பிணியாக இருக்கிறார். ஒரு வாரத்தில் பிரசவத்தை எதிர்நோக்கியிருந்த கேதரின், தான் பணி நீக்கம் செய்யப்பட்டதை இமெயிலில் பார்த்ததும் அதிர்ந்து போயுள்ளார். "பிரசவ விடுப்பு எடுப்பதற்கு முன்பு, புரோகிராம் மேலாளராக நான் என் பணி ஒப்படைப்பு ஆவணத்தை முடித்த பிறகு இன்னும் ஒரு வாரத்தில் குழந்தை முகத்தை பார்க்கப் போகிறேன் என்ற ஆவலில் இருந்தேன். ஆனால், என் மொபைலில் பணிநீக்கம் செய்யப்பட்டிருக்கிறேன் என்ற தகவலை பார்த்த போது என் இதயமே கனத்துவிட்டது." என்று லிங்க்ட் இன் சமூக வலைதளத்தில் அவர் குறிப்பிட்டுள்ளார்.


நான் ஏன்? ஏன் இப்போது?"

கேதரின் வாங் மேலும் தனது பதிவில், "நான் ஏன்? ஏன் இப்போது? என்பதே செய்தியை பார்த்ததும் என் மனதில் தோன்றிய எண்ணம். குறிப்பாக, எனது செயல்பாடுகள் திருப்திகரமாக இருப்பதாக மதிப்பாய்வு அறிக்கை கிடைத்த பிறகு இந்த செய்தி வந்ததை என்னால் ஜீரணிக்கவே முடியவில்லை.


ஒரு புரோகிராம் மேலாளராக, திட்டமிடலே என் முதல் உள்ளுணர்வாக இருந்தது. ஆனால், நான் கையாண்டதிலேயே இதுதான் மிகவும் கடினமான வேலை. அதுவும் பணிநீக்கம் செய்யப்பட்ட காலம் மிகவும் மோசமானது. பல மாத பேறுகால விடுப்பில் செல்லவுள்ள 34 வார கர்ப்பிணிக்கு உடனே வேலை கிடைப்பது என்பது கிட்டத்தட்ட நடக்காத காரியம்" என்று மன வேதனைகளைக் கொட்டியுள்ளார்.


பணி நீக்கத்தின் கொடூரத்திற்கு உதாரணம்

"வயிற்றுக்குள் இருக்கும் குழந்தையின் நலன் கருதி, மனதில் எதிர்மறை எண்ணங்கள் எழாமல் பார்த்துக் கொள்கிறேன். ஆனால், நடுங்கும் கைகளை என்னால் கட்டுப்படுத்த முடியவில்லை. கர்ப்ப காலத்தின் இறுதியில் கூடுதல் கவனம் செலுத்தி குழந்தை பாதுகாப்பாக, முழு ஆரோக்கியத்துடன் உலகிற்கு வருவதை உறுதிப்படுத்த வேண்டிய நிலையில் இருக்கிறேன்." என்ற அவரது பதிவு சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. கேதரின் வாங் எழுதிய லிங்க்ட் இன் பதிவைக் காணும் நெட்டிசன்கள் பலரும் அவருக்கு உதவிக்கரம் நீட்டியுள்ளனர். தன்னையும், தன் குழந்தையையும் நலம் விசாரித்து வெள்ளமென வரும் இமெயில்கள், குறுந்தகவல்களால் அவர் நெகிழ்ந்து போயிருக்கிறார்.


அதேநேரத்தில், ஐ.டி. நிறுவனங்கள் திடீர்திடீரென வேலையை விட்டு நீக்குவதால் தொழிலாளர்கள் எவ்விதம் பாதிக்கப்படுகின்றனர் என்பதற்கு கேதரின் வாங் ஒரு உதாரணம்.


இந்திய ஐ.டி. நிறுவனங்களிலும் தொடரும் பணிநீக்கம்

அமேசான், கூகுள், மெட்டா, ட்விட்டர் போன்ற பெருநிறுவனங்களில் பணி நீக்கம் செய்யப்பட்ட பல ஆயிரம் பேரில் இந்தியர்களும் அடக்கம். எச்1பி விசாவின் கீழ் அமெரிக்கா சென்ற பலரும் இதனால் பாதிக்கப்பட, விசா விதிகளின்படி அங்கே தொடர்ந்து வசிக்க ஏதுவாக உடனே வேறு வேலை தொடங்க படாதபாடு பட்டுக் கொண்டிருக்கின்றனர். அமெரிக்காவில் ஐ.டி. நிறுவனங்களில் தொடரும் பணி நீக்க நடவடிக்கை இந்தியாவிலும் எதிரொலிக்காமல் இல்லை. அண்மையில் கூட விப்ரோ நிறுவனம் 430 பேரை வேலையில் இருந்து நீக்கியுள்ளது. அவர்களின் பணியில் திருப்தி இல்லை என்று விப்ரோ நிறுவனம் கூறினாலும், உண்மையில் பணிநீக்க நடவடிக்கையின் தொடர்ச்சியே இது என்று ஐ.டி. வட்டாரங்கள் கூறுகின்றன.


"Moonlighting என்ற பெயரில் ஏற்கனவே பணிநீக்கம்"

இந்தியாவில் ஐ.டி. நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்களுக்கான பணிப் பாதுகாப்பு எவ்வாறு உள்ளது என்பதை அறிய தகவல் தொடர்பு மற்றும் தகவல் தொடர்பு சேவை பணியாளர் சங்க பொதுச் செயலாளர் அழகுநம்பி வெல்கின்னை தொடர்பு கொண்டோம்.


அவர் பேசுகையில், "3 மாதங்களுக்கு முன்பு ட்விட்டர் நிறுவனம் பணிநீக்கம் செய்த போதே இந்தியாவிலும் அது தொடங்கிவிட்டது. 'moonlighting' அதாவது ஒரே நேரத்தில் ரகசியமாக மற்றொரு நிறுவனத்திற்காகவும் பணி செய்கிறார்கள் என்று கூறி ஏற்கனவே பலர் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்." என்றார்.


அழகுநம்பி வெல்கின்


"ஊழியர்களை நிர்பந்தித்து பணிவிலகல் கடிதம் பெறப்படுகிறது"

"ஐ.டி. பணியாளர்களை நிர்பந்தப்படுத்தி பணி விலகல் கடிதத்தை பெற்றுக் கொள்வதன் மூலம் பெருநிறுவனங்கள் தொழிலாளர் பணிப் பாதுகாப்புச் சட்டத்தில் இருந்து தப்பி விடுகின்றன. நிறுவனத்தின் நலன் கருதி பணியாளர்களே ராஜினாமா செய்துவிட்டதாக அந்நிறுவனங்கள் கூறுகின்றன.


இது சட்டவிரோதம் என்று நாடாளுமன்றத்திலேயே கேள்வி ஒன்றுக்கு பதிலளிக்கையில் மத்திய அரசு உறுதிப்படுத்தியிருக்கிறது. ஆனால், நடைமுறையில் நிறுவனங்களை எச்சரிக்கும் வகையில் கடுமையான நடவடிக்கை ஏதும் இல்லாத நிலையே நீடிக்கிறது," என்று அவர் மேலும் கூறினார்.


"டி.சி.எஸ்.சில் சத்தமின்றி 40,000 பேர் பணிநீக்கம்"

"டி.சி.எஸ். நிறுவனம் அண்மையில் வெளியிட்ட காலாண்டு அறிக்கையில், '40,000 புதிய ஊழியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்; நிறுவனத்தின் மொத்த ஊழியர் எண்ணிக்கையில் 2 ஆயிரம் குறைந்துள்ளது' என்று கூறியுள்ளது. அதன் உண்மையான அர்த்தம் கிட்டத்தட்ட 40 ஆயிரம் பேர் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர் என்பதே. இளைஞர்களுக்கு பணி வாய்ப்பு என்ற பெயரில் அதிக சம்பளம் பெறும் சீனியர்களை குறி வைத்து நிறுவனங்கள் பணிநீக்கம் செய்கின்றன. அவர்கள் அனைவருமே மனைவி, குழந்தைகள் என்று வாழும் நடுத்தர வயதினர்.


வீடு, வாகனக் கடன்கள், குழந்தைகளின் கல்வி என்று வாழ்க்கையின் மிக முக்கியமான கட்டத்தில் இருக்கும் போது வேலை பறிக்கப்படுவதால் ஒட்டுமொத்த குடும்பத்தின் எதிர்காலமே கேள்விக்குறியாகிறது. பணி நீக்க நடவடிக்கை சட்ட மீறல் என்பதுடன் மனிதாபிமான அடிப்படையில் ஏற்றுக்கொள்ளவே முடியாதது" என்று அழகுநம்பி வெல்கின் கூறினார்


தொழிற்சங்கங்களில் வேகவேகமாக சேரும் ஐ.டி. பணியாளர்கள்

ஐ.டி. பணியாளர்களுக்கு கை நிறைய சம்பளம் கிடைப்பதால், தொழிற்சங்கங்களில் சேர ஆர்வம் காட்டுவதில்லை என்ற கருத்து பொதுவாக உண்டு. அதில் உண்மை இல்லாமலும் இல்லை. ஏனெனில், ஐ.டி. தொழிற்சங்கங்களில் சில நூறு பேரே உறுப்பினர்களாக இருந்தனர். ஆனால், கடந்த ஓராண்டில் அந்த எண்ணிக்கை 30,000-ஆக உயர்ந்திருப்பதாகக் கூறும் அழகுநம்பி வெல்கின், "ஐ.டி. ஊழியர்களிடையே பணிப் பாதுகாப்பு குறித்த அச்சம் அதிகரித்திருப்பதையே இது எடுத்துக் காட்டுகிறது," என்கிறார். தொழிலாளர் பாதுகாப்புச் சட்டங்களில் இருந்து தப்ப, ஐ.டி. நிறுவனங்கள் கடைபிடிக்கும் தந்திர உத்திகளால், கேதரின் வாங் போன்ற நிலைமை இந்தியாவில் யாருக்கு வேண்டுமானாலும் வரலாம் என்பதே நிதர்சனம் என்கிறார் அழகுநம்பி வெல்கின்.


சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,