உலகின் மிக நீளமான கண்ணாடி நடை பாலம்

உலகின் மிக நீளமான கண்ணாடி நடை பாலம்






 உலகின் மிக நீளமான கண்ணாடி நடை பாலம் மகாராஷ்டிராவின் விதர்பா பகுதியில் உள்ள மலைவாசஸ் தலமான சிக்கல்தாராவில் அமைய உள்ளது. இந்தியாவின் கட்டிடக்கலை அதிசயிக்க வைக்கும் பாரம்பரிய சின்னங்களை தன்னகத்தே கொண்டது. அவற்றின் கட்டமைப்பும், கலைநயமிக்க வேலைப்பாடுகளும் பல நூற்றாண்டுகளாக உலகை கவர்ந்துள்ளன. இந்தியாவின் பாரம்பரிய கட்டிடக்கலை அம்சங்களை காண ஒவ்வொரு ஆண்டும் வெளிநாடுகளில் இருந்து ஏராளமானோர் சுற்றுலா வருகிறார்கள். நவீன யுகத்திற்கு ஏற்ப பிரமாண்டமான கட்டமைப்புகளும் ஏற்படுத்தப்பட்டு வருகின்றன. அந்த பட்டியலில் இன்னொரு புதிய ஆச்சரியமும் சேரப் போகிறது. உலகின் மிக நீளமான கண்ணாடி நடை பாலம் இந்தியாவில் கட்டப்பட்டு வருகிறது. மகாராஷ்டிராவின் விதர்பா பகுதியில் உள்ள மலைவாசஸ் தலமானசிக்கல்தாராவில் இது அமைய உள்ளது. இதற்கு சிக்கல்தாரா ஸ்கைவாக் திட்டம் என்று பெயரிடப்பட்டுள்ளது. மெல்காட் புலிகள் காப்பகம் அமைந்திருக்கும் வனப்பகுதியினுள் செல்லும் வகையில் திட்டம் வகுக்கப்பட்டுள்ளது. அதனால் அங்கு வசிக்கும் விலங்கினங்கள், பறவைகள், அரிய தாவரங்கள் உள்ளிட்ட வனப்பகுதியின் ஒட்டுமொத்த இயற்கை அழகை தொங்கு பாலத்தில் நடந்தபடியே பார்த்து ரசிக்க முடியும்.

மேல்காட் புலிகள் சரணாலய பகுதியில் 900-க்கும் மேற்பட்ட செடிகள், 35 வகையான விலங்குகள் மற்றும் 295 வகையான பறவைகள் வசிக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது. அதனால் சுற்றுலாப் பயணிகள் இயற்கை காட்சிகளை மட்டுமின்றி விலங்குகள், பறவைகளின் சாகசத்தையும் அனுபவிக்கலாம். இந்த ஸ்கைவாக் 407 மீட்டர் நீளம் கொண்டதாக இருக்கும். இவற்றின் நடுப்பகுதியில் 100 மீட்டர் தூரம் கண்ணாடி தளம் அமைக்கப்பட்டிருக்கும். இந்தியாவில் ஏற்கனவே கண்ணாடி பாலங்கள் உள்ளன. முதல் கண்ணாடி தொங்கு பாலம் 2018-ம் ஆண்டு சிக்கிமின் பெல்லிங்கில் கட்டப்பட்டது. இரண்டாவது கண்ணாடி தொங்கு பாலம் பீகாரில் உள்ள ராஜ்கிரில் 2020-ம் ஆண்டு கட்டப்பட்டது. பீகாரில் சுற்றுலாவை மேம்படுத்துவதற்காக ராஜ்கிரில் கட்டப்பட்ட கண்ணாடி பாலம் சீனாவின் ஹாங்சூ மாகாணத்தில் கட்டப்பட்ட கண்ணாடி பாலம் போன்றது. 85 அடி நீளமும், 6 அடி அகலமும் கொண்ட இந்தப் பாலத்தில் ஒரே நேரத்தில் 40 பார்வையாளர்கள் பயணிக்க முடியும். சிக்கிமில் கட்டப்பட்ட பாலம் கடல் மட்டத்தில் இருந்து 7200 அடி உயரம் கொண்டது. மகாராஷ்டிரா மாநிலத்தில் கட்டப்படும் இது, ஒற்றை கேபிள் கயிற்றால் கட்டப்படும் உலகின் மிக நீளமான கண்ணாடி ஸ்கைவாக் என்ற அடையாளத்தை பெற உள்ளது. தற்போது உலகளவில் நீளமாக இருக்கும் கண்ணாடி தரை தள தொங்கு பாலங்களில் சுவிட்சர்லாந்தின் கிளாஸ் ஸ்கைவாக்கின் தூரம் 397 மீட்டர். சீனாவின் ஸ்கைவாக்கின் தூரம் 360 மீட்டர். இந்நிலையில், இந்தியாவில் கட்டப்பட்டு வரும் இந்த ஸ்கைவாக் உலகின் மிக நீளமான கண்ணாடி ஸ்கைவாக் ஆக உருவாக உள்ளது. இந்த தொங்கு பாலம் கட்டுவதற்கு 35 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.கட்டுமான பணிகளும் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. சுமார் 70 சதவீத பணிகள் முடிவடைந்திருக்கிறது. இந்த ஆண்டு (2023) ஜூலைக்குள் கட்டுமான பணிகள் நிறைவடைந்துவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.



Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,