குறளுக்காக வாழ்ந்த திருக்குறளார் வீ.முனிசாமி நினைவு நாளின்று

 குறளுக்காக வாழ்ந்த திருக்குறளார் வீ.முனிசாமி நினைவு நாளின்று


“சிரித்து மறக்கப்படாது. சிந்திக்க வேண்டும்” - வயிறு குலுங்க சிரிக்க வைக்கும் தன் பேச்சின் ஊடாக, திருக்குறளார் வீ.முனிசாமி அடிக்கடிச் சொல்லும் வார்த்தை இது.
விழுப்புரம் அருகே உள்ள தோகைப்பாடி கிராமத்தில் 1913ஆம் ஆண்டு செப்டம்பர் 26ஆம் தேதி வீராசாமி பிள்ளை – வீரம்மாள் தம்பதிக்கு மகனாகப் பிறந்தார். தங்கள் குலதெய்வமான முனீஸ்வரன் பெயரையே இவரதுப் பெற்றோர் இவருக்குச் சூட்டினர்.
திருச்சியில் உயர்நிலைப் பள்ளியில் படிக்கும்போதே முனிசாமிக்கு திருக்குறளின் மீது ஆழ்ந்த ஈடுபாடு ஏற்பட்டது. 1,330 குறட்பாக்களையும் மனப்பாடம் செய்திருந்தார்.
1935ஆம் ஆண்டில் திருச்சி மலைக்கோட்டை நூற்றுக்கால் மண்டபத்தில் தொடங்கிய குறளாரின் குறள் பரப்பும் பணி அரை நூற்றாண்டையும் கடந்தது.
அக்காலத்தில் புராண இதிகாச நூல்கள் சோறு, குழம்பு போலவும் திருக்குறளை ஊறுகாய் போலவும் வைத்திருந்தனர். இதனை மாற்ற வேண்டும் என்பதை தம் அடிப்படை நோக்கமாகக் கொண்ட திருக்குறளார், இதில் வெற்றி பெற்றார் என்றே சொல்ல வேண்டும்.
பல்பொடி, கண்ணாடி, கடிகாரம் போல் திருக்குறளும் மக்களின் அன்றாடப் பயன்பாட்டில் இருக்க வேண்டும் என விரும்பிய திருக்குறளார், தமிழகத்தின் மூலை முடுக்குகளில் பயணம் செய்து திருக்குறள் பரப்பும் பணியில் ஈடுபட்டார். பாமரர்களும் புரிந்து கொள்ளும் வகையில் இவரதுப் பேச்சில் நகைச்சுவை இழையோடியது.
“இந்த உலகத்தில் எல்லா செல்வங்களும் அழிந்துவிடும்.”
ரொம்ப வருடங்களாக இங்கிருந்த ஆலமரம் புயல் காற்றிலே விழுந்துவிட்டது. இங்கிருந்த பெரிய கட்டடம் மழை பெய்து இடிந்துவிட்டது. அதோ போகிறாரே 10 வருடங்களுக்கு முன்பு அவர் லட்சாதிபதியாக இருந்தார். இப்போ, எல்லாம் செலவழித்து ஏழையாகிவிட்டார். இது அழியும் செல்வம்.”
“ஆனால் கல்வி அப்படிப்பட்டதல்ல. அவர் 10 வருடங்களுக்கு முன்பு எம்.ஏ. பாஸ் செய்திருந்தார். இப்போது எல்லாம் செலவாகி எஸ்.எஸ்.எல்.சி. ஆகிவிட்டார். என்று யாரும் சொல்ல மாட்டார்கள்.”
“கேடில் விழுச்செல்வம்” எனும் குறளுக்கு, திருக்குறளார் அளித்த எளிய விளக்கம் இது.
அதே போல், “எல்லோரிடத்திலும் எல்லாவிதமான கேள்விகளும் கேட்டுவிடக் கூடாது. எந்த வருடத்தில் பிறந்தீர்கள் என்று கேட்கலாம். எத்தனை வருடங்கள் இருக்கலாம் என்று இருக்கிறீர்கள் என்று கேட்கக் கூடாது. நீங்க எப்போது போறதா யிருக்கீங்க என்றும் கேட்டுவிடக்கூடாது.”
திருக்குறளாரின் பேச்சு மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்றது. இலக்கியம், இலக்கணம் என்றாலே முகத்தைத் திருப்பிக் கொண்டவர்கள் கூட திருக்குறளாரின் பேச்சின் இரசிகரானார்கள். வள்ளுவரின் குறள் மக்களிடம் வேகமாகப் பரவியது.
பெரியார், பாரதிதாசன், ப.ஜீவானந்தம், காமராசர், கலைஞர் மு.கருணாநிதி, மு.வ., கி.ஆ.பெ.விசுவநாதம், இரா.பி.சேதுப்பிள்ளை, ந.மு.வேங்கடசாமி நாட்டார், நாவலர் சோமசுந்தர பாரதியார், குன்றக்குடி அடிகளார், கவியோகி சுத்தானந்த பாரதி, உ.வே.சா., தண்டபாணி தேசிகர், சுவாமி சகஜானந்தா, விபுலானந்த அடிகளார், சர்.பி.டி.இராசன், சி.பா.ஆதித்தனார், கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன் உள்ளிட்ட தமிழறிஞர்களுடன் நட்புறவு கொண்டிருந்தார் திருக்குறளார்.
1941ஆம் ஆண்டு, முதன் முதலாக சேலத்தில் இவர் நடத்திய திருக்குறள் மாநாட்டில் தேவநேயப் பாவாணர் உள்ளிட்ட தமிழறிஞர்கள் பங்கேற்றனர். சென்னை புரசை வாக்கத்தில் தங்கி, சட்டப் படிப்பினை மேற்கொண்டு திருக்குறள் வகுப்பினையும் நடத்தியபோது அ.கி.பரந்தாமனார், நடேசனார், வடிவேலனார் ஆகியோருடன் இணைந்து குறட்பாக்களை அட்டைகளில் எழுதி தெருக்கள் தோறும் தமிழ் முழக்கம் செய்யும் தொண்டிலும் திருக்குறளார் ஈடுபட்டார்.
“குறள் மலர்”” (1948-1952) இதழ் மூலம் மக்களிடையே திருக்குறள் பரவுமாறு செய்தார். 1949ஆம் ஆண்டு கடலூரில் கூட்டுறவு முறையில் திருக்குறள் அச்சகம் தொடங்கப்பட்டு, அதனைப் பொறுப்பேற்று நடத்தினார் திருக்குறளார்.
தமிழகத்தில் மட்டுமல்லாது தலைநகர் தில்லி, மும்பை, கல்கத்தா போன்ற இடங்களிலும், கடல்கடந்து மலேசியா, சிங்கப்பூர் ஆகிய நாடுகளிலும் குறளாரின் குறள் பரப்பும் பணி தொடர்ந்தது.
குறளாரின் பணியை “குறட் பயன் கொள்ள நம் திருக்குறள் முனிசாமி சொல் கொள்வது போதுமே” என புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் (1948) பாராட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.
23.1.1951இல் குடந்தை மாநகரில் உடையார்பாளையம் குறுநில மன்னர் கச்சியுவரங்க காளாக்க தோழ உடையாரால் “திருக்குறளார்” பட்டம் வழங்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து தமிழ்மறைக் காவலர், திருக்குறள் கேசரி, முப்பால் வித்தகர், திருக்குறள் இரத்தினம், நகைச்சுவை இமயம் என பல்வேறு இடங்களில் ஏராளமானப் பட்டங்கள் இவருக்கு வழங்கப்பட்டன. ஆனாலும், முதன் முதலில் வழங்கப்பட்டப் பட்டம்தான் இவரது வாழ்நாள் இறுதி வரை தொடர்ந்தது.
திருக்குறளார் எழுதிய நூல்கள்:
வள்ளுவனார் உள்ளம், திருக்குறள் மூலம், வள்ளுவர் காட்டிய வழி, அவள் சிரித்த சிரிப்பு, இன்பத் தோட்டம், முருகன் முறையீடு, இன்பம் தரும் இன்பம், மானத்தை விற்காதே, திருக்குறள் இன்பம், இன்பம் இருக்கும் இடம், காதல் கள்வன், தேய்ந்த விரல், மயங்கிய நெஞ்சம், வள்ளுவர் குறளும் ஈ.வெ.ரா. வாழ்க்கையும், வள்ளுவரும் பெரியாரும், திருவள்ளுவரும் திராவிடக் கொள்கையும், வடலூரும் ஈரோடும், வள்ளுவர் பூங்கா, காதல் உழவன், திருக்குறள் – காமத்துப் பால் – பொழிப்புரை, வள்ளுவரைக் காணோம், வள்ளுவர் பேசினால், வள்ளுவரும் பரிமேலழகரும், வள்ளுவர் ஏன் எழுதினார், திருக்குறளில் நகைச்சுவை, அகமும் முகமும், வள்ளுவர் வகுத்த வாழ்க்கைப் பாதை, வள்ளுவர் வழிப் பயணம், ஏன் இந்த வாழ்வு?, உலகப் பொதுமறை திருக்குறள் உரை விளக்கம், திருக்குறளாரின் சிந்தனைகள், திருக்குறள் காமத்துப் பால், திருக்குறளில் நகைச்சுவை, வள்ளுவர் காட்டிய வழி, வள்ளுவர் காட்டும் வாழ்க்கைப் பாதை, திருக்குறள் அதிகார விளக்கம்.

May be a black-and-white image of 1 person

Kavi Murasu Praveen and 8 others

Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,