236 ஊழியர்களை அதிரடியாக நீக்கிய ஆவின் நிர்வாகம்!*
*ரூ.30 லட்சம் வரை லஞ்சம்.. சட்டவிரோத நியமனம்'.. 236 ஊழியர்களை அதிரடியாக நீக்கிய ஆவின் நிர்வாகம்!*
ஆவின் நிர்வாகம்
அதிமுக ஆட்சியில் ஆகஸ்ட் 2020 முதல் மார்ச் 2021 வரை 236 பேர் நேரடியாகப் பணியமர்த்தப்பட்டு மேலாளர், துணை மேலாளர் இளநிலை பொறியாளர், தொழிற்சாலை உதவியாளர்கள், ஓட்டுநர்கள் உள்ளிட்ட பணிகளில் நியமனம் செய்யப்பட்டனர். ஆனால், தகுதியில்லாத பலர் பணி நியமனம் செய்யப்பட்டு, விதிகளை மீறி வேலை வழங்கப்பட்டதாக ஆவின் நிர்வாகத்துக்குப் புகார்கள் சென்றன. பணிக்கு ரூ.10 முதல் ரூ.30 லட்சம் வரை லஞ்சம் கொடுத்ததாகவும் புகார் எழுந்தது. இதுதொடர்பாக ஜூலை 2021ல் அப்போதைய ஆவின் நிர்வாக இயக்குநர் கே.எஸ்.கந்தசாமி தலைமையில் உள்விசாரணை நடத்தப்பட்டது. அதில், பல முறைகேடுகள் மற்றும் ஆட்சேர்ப்பு விதிமுறை மீறல்கள் கண்டறியப்பட்டன.
இந்த நிலையில் அதிமுக ஆட்சிக் காலத்தில் 2020, 2021ஆம் ஆண்டுகளில் 8 மாவட்ட பால் உற்பத்தியாளர்கள் சங்கங்கள் மற்றும் ஆவின் தலைமையகங்களில் நேரடியாக நியமிக்கப்பட்ட 236 ஊழியர்களை ஆவின் நிர்வாகம் கடந்த 2ஆம் தேதி பணிநீக்கம் செய்தது. பணிநீக்கம் செய்யப்பட்ட ஊழியர்கள் சட்டவிரோதமாக வேலைவாய்ப்பைப் பெறுவதற்கு உடந்தையாக இருந்ததாக 26 அதிகாரிகள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கவும் ஆவின் பரிந்துரைத்துள்ளது. பணிநீக்கம் செய்யப்பட்ட ஊழியர்களின் பணியிடங்களை கையாள்வதற்கான உத்தரவு விரைவில் வெளியிடப்படும் என அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
Comments