ஆச்சரியமூட்டும் 'வெள்ளாவி' பொங்கல்

 ஆச்சரியமூட்டும் 'வெள்ளாவி' பொங்கல்



நம் அனைவருக்கும், பொங்கல் பண்டிகை தெரியும். அந்த விழாவின் போது வைக்கப்படும் வெண் பொங்கல், சர்க்கரைப் பொங்கல், கருப்பட்டி பொங்கல் கூட தெரியும். ஆனால் ‘வெள்ளாவி பொங்கல்’ பற்றி உங்களுக்குத் தெரியுமா?

வெள்ளாவி பொங்கலை பற்றி தெரிய வேண்டும் என்றால், முதலில் 'வெள்ளாவி'யை பற்றி தெரிந்திருக்க வேண்டும். 'வெள்ளாவியில் வைத்து வெளுத்தல்' என்பது, சலவைத் தொழிலாளர்களிடம் பழங்காலம் தொட்டே தொடரும் ஒரு தொழில்நுட்ப முறை. பருத்தி ஆடைகளை பளபளவென வெளுக்கவும், கறை படிந்து இருந்தால் அந்த கறைகள் இருந்த சுவடே தெரியாமல் அகற்றவும் பயன்படுத்தும் யுக்திதான் வெள்ளாவி போடுதல். இதற்கு பயன்படுத்தும் மண்பானைக்கு 'வெள்ளாவி பானை' என்று பெயர்.


கற்கள் அடுக்கி அடுப்பு செய்து, அதன் மேல் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட பானைகளை வைத்து மண்ணால் பூசுவார்கள். கீழே அடுப்பு எரிய வைக்க இடைவெளி அமைத்து, மேலே நெருப்பு வெளியே வர முடியாத அளவுக்கு இடைவெளியின்றி பானைகளின் இடையே மண் பூசப்படும். அந்தப் பானைகளில் நீர் நிரப்பி வைத்து, அதற்கு மேல் காரம் போடப்பட்ட துணிகளை சுற்றிச் சுற்றி அடுக்கி வைப்பார்கள். 2 முதல் 5 அடி உயரம் வரை துணிகள் அடுக்கி வைக்கப்படும். அதற்கு மேல் போர்வைகளை சுற்றி வைத்து விட்டு, அடுப்பில் நெருப்பு வைப்பார்கள். நெருப்பில் இருந்து வெளிப்படும் நீராவியில் துணிகள் வேக வைக்கப்படும். இப்படி பல மணி நேரம் நீராவியில் அவித்து எடுப்பதற்கு பெயர்தான், 'வெள்ளாவி போடுதல்' என்பதாகும்.


தேனி மாவட்டம் வைகை அணையின் அருகில் வைகை ஆற்றின் இரு கரையின் ஓரமும், ஏராளமான வெள்ளாவி அடுப்புகள் உள்ளன. அந்த வெள்ளாவி அடுப்பின் அருகில், சலவைத் தொழிலாளர்களின் காவல் தெய்வமான மாடசாமிக்கு ஒரு சிறு பீடம் அமைக்கப்பட்டிருக்கும். உழவர்களை கொண்டாடுவதற்கு தைப்பொங்கல், கால்நடைகளை வணங்கும் மாட்டுப் பொங்கல் போன்று, சலவைத் தொழிலாளர்கள் தங்களை பாதுகாக்கும் காவல் தெய்வமான மாடசாமி, வெள்ளாவி பானை ஆகியவற்றை ஒருசேர வணங்கும் வகையில், 'வெள்ளாவி பொங்கல்' வைத்து வழிபடுவதை பல தலைமுறையாக பின்பற்றி வருகின்றனர்.


தேனி மாவட்டத்தில் சலவைத் தொழிலாளர்கள் தங்களின் குடும்பத்தோடு, வெள்ளாவி பொங்கல் கொண்டாடி மகிழ்கின்றனர். இதுபற்றி வைகை அணையைச் சேர்ந்த சலவைத் தொழிலாளி முத்தையாவிடம் கேட்டபோது, "பெரும்பாலான ஊர்களில் சலவைத் தொழில் செய்வதற்கு ஒதுக்கப்பட்ட இடம் என்பது மயானம், சுடுகாடு பக்கத்தில்தான் இருக்கிறது. சலவை செய்யும் இடங்களில் பூச்சிகள், பாம்புகள் உலா வரும். அவற்றால் எங்களுக்கும், குழந்தைகளுக்கும் எந்த பாதிப்பும் ஏற்படாமல், எங்களது காவல் தெய்வமான மாடசாமி தான் பாதுகாத்து வருகிறது. அதனால், மாடசாமியை வணங்கி விட்டு தான் அன்றாடம் வேலையைத் தொடங்குவோம்.


அதுபோல் வெள்ளாவி அடுப்பு மற்றும் வெள்ளாவி பானை எங்களுக்கு சாமி போன்றது. வெள்ளாவி வைக்கும் போது பயபக்தியோடு இருப்போம். பெரும்பாலும் வெள்ளாவி அடுப்பை மாலை நேரத்தில்தான் பற்ற வைப்போம். இரவு முழுவதும் அடுப்பு அணையாமல் இருக்கும். மறுநாள் காலையில் துணியை எடுக்கும் போது எந்த சேதமும் இருக்காது. பானையில் இருக்கும் தண்ணீரும் வற்றாமல் இருக்கும். கடவுளின் அருள் இன்றி இது சாத்தியம் இல்லை. ஒவ்வொரு ஆண்டும் தை மாதம் 7-ந் தேதிக்கு பிறகு 'வெள்ளாவி பொங்கல்' வைப்போம். தமிழகத்தில் எல்லா ஊர்களிலும் எங்கள் மக்கள் இருக்கிறார்கள். ஆனால், இந்த வெள்ளாவி பொங்கலை வெவ்வேறு நாட்களில் கொண்டாடி வருகின்றனர். எனவே, அரசு எங்களின் வழிபாட்டு முறையை கவனத்தில் கொண்டு தைப்பொங்கல், மாட்டுப் பொங்கல் போன்று தை மாதத்தில் ஒரு நாளை 'வெள்ளாவி பொங்கல்' என்று அங்கீகரித்து அறிவிக்க வேண்டும்" என்றார்.


இன்றைய கால கட்டத்தில் வெள்ளாவி போடுவது அரிதாகி விட்டது. தேனி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் மட்டுமே வெள்ளாவி போடும் பழக்கம் இன்றும் வழக்கத்தில் உள்ளது.

Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி