உயிரற்ற கட்அவுட்டுகளுக்கு பாலாபிஷேகம் செய்வதா
உயிரற்ற கட்அவுட்டுகளுக்கு பாலாபிஷேகம் செய்வதா.! அஜித்,விஜய்க்கு கடிதம் எழுதி பரபரப்பை ஏற்படுத்திய பால் முகவர்
நடிகர் விஜய் நடித்த வாரிசு திரைப்படமும், நடிகர் விஜய் நடித்த துணிவு திரைப்படமும் நாளை வெளியாகவுள்ளநிலையில், "உயிரற்ற கட்அவுட்டுகளுக்கு பாலாபிஷேகம் செய்வதை நடிகர்கள் தடை செய்ய வேண்டும் என பால் முகவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
நடிகர் விஜய் நடித்த வாரிசு திரைப்படமும், நடிகர் விஜய் நடித்த துணிவு திரைப்படமும் நாளை உலகம் முழுவதும் வெளியாகவுள்ளது. திரைப்பட வெளியீட்டு விழாவை ரசிகர்கள் உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர். யாரு படம் பெஸ்ட் என்று ஒருவருக்குள் ஒருவர் போட்டிப் போட்டுக்கொண்டுள்ளனர். இந்தநிலையில் திரையரங்கில் வைக்கப்பட்டுள்ள கட் அவுட்டுகளுக்கு ரசிகர்கள் பாலாபிஷேகம் செய்ய திட்டமிட்டு வருகின்றனர். இந்தநிலையில் இது தொடர்பாக தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கம் தலைவர் பொன்னுசாமி, நடிகர் அஜித் மற்றும் விஜய்க்கு கடிதம் எழுதியுள்ளார். அதில், கட் அவுட்களுக்கு பாலாபிஷேகம்
தமிழகம் முழுவதும் உள்ள திரையரங்கு வளாகங்களில் தங்களின் திரைப்படங்கள் வெளியாகும் சமயங்களில் தங்களுக்கு வைக்கப்படும் பல அடி உயர கட்அவுட்டுகள் மீதேறி, அந்த உயிரற்ற கட்அவுட்டுகளுக்கு மாலை அணிவித்து, கற்பூர ஆரத்தி எடுத்து, ரசிகர்கள் பாலாபிஷேகம் செய்வதை தடுத்து நிறுத்தும் வகையில் தங்களின் ரசிகர்களுக்கான ஆக்கபூர்வமான அறிவிப்புகள் வெளியிட வேண்டும், இதனால் தமிழகம் முழுவதும் பல ஆயிரம் லிட்டர் பால் வீணடிப்பது தடுக்கப்படும், அத்துடன் அதுபோன்ற காலகட்டங்களில் பாலினை திருட்டு கொடுத்து விழி பிதுங்கி நிற்கும் பால் முகவர்களாகிய எங்களது வாழ்வாதார இழப்பானது காப்பாற்றப்படும்.
ரசிகர்கள் உயிருக்கு ஆபத்து
கடந்த காலங்களில் அப்படி உயிரைப் பணயம் வைத்து கொண்டாடிய சமயங்களில் பல்வேறு முன்னணி நடிகர்களின் நூறடிக்கும் உயரமான கட்அவுட்டுகளின் மேலிருந்து கீழே விழுந்து பல ரசிகர்கள் உயிரிழந்துள்ளதோடு, கை, கால்கள், மண்டை உடைந்து உடல் உறுப்புகள் பாதிக்கப்பட்டதும், அவ்வாறு கட்அவுட் வைத்து கொண்டாடுவதில் மற்ற நடிகர்களின் ரசிகர்களுடன் சண்டையிட்டு சட்டம் ஒழுங்கை கேள்விக்குள்ளாக்கிய நிகழ்வுகளும் தமிழகம் முழுவதும் நடைபெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
தடை செய்ய வேண்டும்
பாலாபிஷேகம் செய்கிற வெறும் விசிலடிச்சான் குஞ்சுகளாக இல்லாமல் ஆக்கபூர்வமான பணிகளை செய்ய வைக்கும் அளப்பரிய சக்தியாக மாற்றிட செய்வது தங்களின் கரத்திலும், குரலிலும் தான் இருக்கிறது என்பதால் தற்போது வாரிசு மற்றும் துணிவு திரைப்படம் வெளியாக இருக்கும் இத்தருணத்தில் மேற்கண்ட எங்களது கோரிக்கைகளை கவனத்தில் கொண்டு அதனை செயல்படுத்த ரசிகர்களுக்கு கட்டளையிடுமாறு தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கம் சார்பில் வலியுறுத்தி கேட்டுக் கொள்வதாக கூறப்பட்டுள்ளது
Comments