கவிஞர் கனிமொழி அவர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் /💐 *பிருந்தா சாரதி

 கவிஞர் கனிமொழி அவர்களுக்கு என் அன்பான பிறந்தநாள் வாழ்த்துக்கள் 💐

*


முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்களின் மகள்,

நாடாளுமன்ற உறுப்பினர், கட்சிப் பதவி, களப்பணி எனப் பல முகங்கள் இருந்தாலும் கவிஞர் என்ற அடையாளத்தை அழுத்தமாகப் பதித்து தன் இலக்கிய ஆளுமையை நிரூபித்து வருபவர் கனிமொழி அவர்கள். 


கருவறை வாசனை, அகத்திணை, சிகரங்களில் உறைகிறது காலம்,

கருக்கும் மருதாணி என்று தொடரும் அவரது கவிதை நூல்கள் அதற்கான சான்றுகள்.


பெண்ணியம், சமூகநீதி , சமத்துவம் ஆகியவை அவரது சொற்களில் அழகுணர்ச்சியோடும்  கவித்துவத்தோடும் அணிவகுப்பவை. 


அன்பு,  ஏக்கம் ஆகியவற்றை அவர் எழுதுவது எவ்வளவு எளிய மனநிலையில் அவர் இருக்கிறார் என்பதை எடுத்துக்காட்டும். 


'அப்பா' எனும் அவரது கவிதையில் ஒரு சராசரிப் பெண்ணின் குரலைக் கேட்கலாம்.


அப்பா

*

சின்ன வயதில்

செய்த தவறுகளுக்கெல்லாம்

பூச்சாண்டியாய் உன்

பெயரைத்தான் சொன்னாள்

அம்மா


காலையில் கணக்குப் பாடம்

குழம்பியபோது

பத்திரிகையில் புதைந்த

உன் தியானத்தை எப்பிடிக்

கலைப்பது?


விடுமுறை நாள்களில்

சினிமாவுக்குப் போக

அம்மாவைத் தூதுவிடுவதே

ஆபத்தற்றதாய் இருந்தது


வாரம் ஒருமுறை

பின் சீட்டில் வைத்து

தேக்காவுக்கு அழைத்துச் சென்றது


உன் கால் செருப்பு

ஓசையில்

வீடு அமைதியானது


அப்பாவுக்குப் பிடிக்கவில்லை

என்று குட்டை ஸ்கர்ட்டை

அம்மா எதிர்த்தது


இதுதான் நீ என்று

பதிந்துபோய்விட்டது


பெருமாள் கோயிலில்

யாரோ ஒருவன்

கையில் பிடித்துக்கொடுத்தபோது

நடுங்கிய உன் கைகளில்

தெரிந்த நேசத்தை ஏன் ஒளித்துவைத்தாய்

இத்தனை காலமாய்?

*


எளிமையானஅவருடைய கவிதைகள்  ஆழமும் அடர்த்தியும் மிக்கவை. அதனால்தான் கவிக்கோ அப்துல் ரகுமான், இன்குலாப், ஞானக்கூத்தன், கலாப்ரியா என மூத்த கவிஞர்களால் அரசியல் பின்னணி தாண்டி அவர் கவிதைகள் பாராட்டப்பட்டன. 


கவிக்கோ அப்துல் ரகுமான் நினைவு நாள் நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக அவரை அழைக்க இயக்குனர் லிங்குசாமியும் நானும் சென்றோம். ஜூன் 2 கவிக்கோ நினைவுநாள். அன்றே விழா. 


ஜூன் 3 கலைஞர் பிறந்த நாள் என்பதால் முதல் நாளே தனக்கு அது சம்பந்தமான பணிகள் தொடங்கிவிடும்... கட்சி நண்பர்களைச் சந்திப்பது, விழா நடத்துவது போன்ற வேலைகள் இருக்கும்  என்று தயங்கினார்.   'கலைஞரே இந்த விழாவில் கலந்து கொள்வதைத் தான் விரும்புவார்' என நாங்கள் கூறியதும்  சிரித்துக் கொண்டே வருகிறேன் என்று சம்மதித்தார். அதற்குப் பிறகு ஒரு மணி நேரத்திற்கு மேலாக சினிமா, கவிதை, இலக்கியம் என்று எங்கள் உரையாடல் நீண்டது.


சொன்னதைக் போலவே விழாவில் கலந்து கொண்டு ஹைக்கூ கவிதைப் போட்டியில் வென்றவரகளுக்குப்  பரிசளித்து, நூல் வெளியிட்டு சிறப்புரை ஆற்றினார். 


நாங்கள் உதவி இயக்குனராக சென்னை வந்ததிலிருந்து அவரைப் பலமுறை பார்த்திருக்கிறேன். ஒரு முதலமைச்சர் வீட்டுப் பெண் என்ற எண்ணமே இல்லாமல் உலகசினிமா பார்க்க எளிமையாக ஆட்டோவில் வந்து  ஃபிலிம் சேம்பரில் இறங்குவார். பின் பத்திரிகையாளராகப் பணியாற்றினார்.  


அதனால்தான் பரபரப்புக்கு மத்தியிலும் கவிஞர் மனநிலையைக் காப்பாற்றிக் கொண்டு எழுதமுடிகிறது. 


பொங்கல் காலகட்டத்தில் முன்பு நடத்தியது போலவே இவ்வாண்டும் சங்கமம் விழாவை முன்னின்று நடத்துகிறார். கிராமிய கலை நிகழ்ச்சிகள், இலக்கியக் கூட்டங்கள் ஆகியவற்றை நடத்துவது அவரது இலக்கிய ஆர்வத்தையும் கலைஞர்கள், எழுத்தாளர்கள் மீதான அவரது அக்கறையையும் காணமுடிகிறது.


தொடர்ந்து இந்த மனநிலை மாறாமல் அவர் தன் அரசியல் பணிகளையும் ஆற்ற என் அன்பான பிறந்தநாள் வாழ்த்துக்கள் 💐

*

அன்புடன்,

பிருந்தா சாரதி



Comments

Popular posts from this blog

:இன்றைய காலகட்டத்தில் பெரும்பாலான பெண்களுக்கு மாதவிடாய் கோளாறுகள்? வாழ்வியல் முறையை மாற்றுங்கள்!

அரசு யோகா மற்றும் இயற்கை மருத்துவ கல்லூரி