பாவேந்தர்" பாரதிதாசன் அவர்களின் பிறந்த நாளான இன்று அம் மாமனிதனை நினைவு கொள்வோம். " தமிழுக்கும் அமுதென்று பேர் அந்த தமிழ் இன்பத் தமிழ் எங்கள் உயிருக்கு நேர்" என்று தேன்சுவை சொட்டும், வைர வரிகளை எழுதியவர் பாவேந்தர் பாரதிதாசன் அவர்கள். இவர் 1891 ஆம் ஆண்டு, ஏப்ரல் திங்கள் 29ஆம் நாள் புதுவையில் பிறந்தார், இவரது இயற்பெயர் கனகசுப்புரத்தினம். புதுவையில் பிரெஞ்சுக்காரர்களின் ஆதிக்கம் இருந்ததால், பிரெஞ்சு பள்ளியிலே ஆரம்பக் கல்வி பயின்றார். தமிழ் மொழியில் மிகுந்த ஆர்வம் கொண்டிருந்ததால், தமிழ் இலக்கணம், இலக்கியம் மற்றும் சைவ சித்தாந்த வேதங்களை முறையாக கற்றுத் தேறினார். தனது 16வது வயதில், புதுவை கல்லூரியில் தமிழ் படித்தவர், பின்னர் காரைக்கால் அரசினர் கல்லூரியில் தமிழாசிரியர் ஆனார். தனது மானசீக குருவாக, மகாகவி சுப்பிரமணிய பாரதியாரை ஏற்றுக்கொண்டதால் அதன் அன்பு அடையாளமாக, தனது பெயரை பாரதிதாசன் என மாற்றிக் கொண்டார். தமிழ் மொழிக்கு அருந்தொண்டாற்றி கவிதை, கட்டுரைகளை எழுதுவதில் தனித் திறமை பெற்றுத் திகழ்ந்தார். ...